இயக்குனர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் குறித்து பேசி உள்ளார்.சியான் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விக்ரமின் மகன் தான் துருவ் விக்ரம் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் திரையுலகில் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து தனது தந்தையுடன் இணைந்து ‘மகான்’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது இவர், மாரி செல்வராஜ் இயக்கத்தில் பைசன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். துருவ் விக்ரமின் 3வது படமான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
ஏனென்றால் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்த மாரி செல்வராஜ், ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரமை வேறொரு பரிமாணத்தில் காட்டியுள்ளார். அதே சமயம் இந்த படம் துருவ் விக்ரமுக்கு மிகவும் முக்கியமான படமாகவும், திருப்புமுனையாகவும் அமையும் என நம்பப்படுகிறது. அதன்படி ஏற்கனவே இதன் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் நடந்த பேட்டியில் துருவ் விக்ரம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “வாழ்க்கையில் ஜெயிக்கணும், பெரிய இடத்துக்கு வரணும்னு நினைக்கிற ஒரு நடிகன் வேண்டுமென்று நினைத்தேன்.
அப்போதுதான் விக்ரம் சார் பையன் எப்படி இருப்பான்னு ஒரு பேச்சு வந்தது. அதன் பிறகு விக்ரம் சாரை பார்த்து பேசினோம். இந்த படம் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. இந்த படத்திற்காக என்னுடன் ஒரு வருடம் ட்ராவல் பண்ணனும். அவன் என்னை நம்பி வரணும். நான் அவனுக்கு பயிற்சி கொடுப்பேன். இந்த படத்துக்கு இடையில வேற எந்த படமும் பண்ணக்கூடாது. ரொம்ப கஷ்டமா இருக்கும்ன்னு சொன்னேன். அவன் எனக்காக ரெண்டு வருஷம் காத்திருந்தான். படம் ஆரம்பிச்சு கொஞ்ச நாளிலேயே துருவ் ரொம்ப கஷ்டப்பட்டான். அவனால முடியல.
அப்புறம் வேற கதை பண்ணலாமான்னு அவன்கிட்ட கேட்டேன். அதுக்கு அவன், ‘கஷ்டமா தான் இருக்கு. நீங்களும் இந்த படத்தை பண்ணனும்னு வெறியா இருக்கீங்க. உங்களுக்கு இது கனவுத் திட்டம் போல தெரியுது. நான் உங்களை என் அப்பா மாதிரி நினைச்சுட்டு இருக்கேன். நீங்க என்ன பாத்துப்பீங்கன்னு நம்புறேன்’னு சொன்னான். அவன் சொன்ன இந்த வார்த்தை என்னை ரொம்ப பாதிச்சிருச்சு” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -