அஜித் – ஆதிக் காம்போவின் ஏகே 64 படம் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்தது. அதைத்தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அதன்படி ஏகே 64 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய படத்தினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராகுல் தயாரிக்க இருப்பதாகவும் அனிருத் இதற்கு இசையமைக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தவிர படத்தில் மோகன்லால், ஸ்ரீலீலா, சுவாசிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர் என சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 நவம்பர் மாதம் தொடங்கும் என சொல்லப்பட்ட நிலையில் சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன், இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளார். ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி ஏகே 64 படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏனென்றால் அஜித் தற்போது கார் ரேஸிங்கில் தனது அணியினருடன் பங்கேற்று தொடர்ந்து வெற்றியை கைப்பற்றி வருகிறார். ஆரம்பத்தில் அவர் அக்டோபர் மாதத்திற்குள் கார் ரேஸிங்கை முடித்துவிட்டு ஏகே 64 படத்தில் இணைவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அஜித், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வரையிலும் கார் ரேஸிங்கில் பிஸியாக இருப்பார் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஏகே 64 படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் மற்ற தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.