P.G.பாலகிருஷ்ணன்,
பத்திரிகையாளர்
டெல்லி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையில், நீதிபதிகள் உஜ்ஜல் புயன் மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு ஒன்றை விசாரித்து கொண்டிருந்தது.

அந்த இடத்தில் விசாரணைக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ராஜேஷ் கிஷோர் என்ற வழக்கறிஞர் திடீரென எழுந்து தலைமை நீதிபதியின் மீது தனது காலனியை வீச முயற்சி செய்திருக்கிறார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அங்கு இருந்த போலீசார் அவரை வெளியே இழுத்து சென்றனர். அப்போது ராஜேஷ் கிஷோர், “இவர், சனாதான இந்து தர்மத்தை அவமதித்தது இந்தியா பொறுத்து கொள்ளாது ” என கூச்சலிட்டபடி சென்று இருக்கிறார். இதை அனைத்தையும் பார்த்து கொண்டு அமர்ந்திருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அவர்கள், ” இதுபோன்ற பிரச்சனைகளால் நீதிமன்ற நடவடிக்கைகள் தடைபடக்கூடாது, இதையெல்லாம் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆகவே, நீதிமன்ற அமர்வு விசாரணையை தொடருங்கள்” என கூறி, தனது நீதிமன்ற நடவடிக்கை பணிகளை தொடர்ந்து இருக்கிறார்.
அதே நேரத்தில், காவலர்கள் அழைத்து சென்ற ராஜேஷ் கிஷோரை விசாரணை செய்தபோது, ” மத்திய பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷ்ணு சிலையை மீண்டும் நிறுவுவது குறித்த மனுவை, கவாய் அவர்கள் இது விளம்பர நோக்கில் தொடரப்பட்ட வழக்கு எனக் கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தார். அதனால், கடவுள் தான் என்னை இந்த செயலை செய்ய சொன்னார் ஆகவே நான் இதை செய்தேன்.” என கோமாளியை போல் கூறி இருக்கிறார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அவர்கள் அந்த மனுவை தள்ளுபடி செய்ததற்கான உண்மை காரணம் என்னவென்றால்,
மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ கோயில், கி.பி 950 முதல் கி.பி 1050 வரை சந்தேலா வம்சத்தால் கட்டப்பட்டது. அந்த கோயிலில் சைவத்திற்கான சிவன், வைணவத்திற்கான விஷ்ணு மற்றும் சமண மற்றும் பெளத்த மதத்தவர்களுக்கான சிற்பங்களும் அந்த கோயிலில் நிறுவப்பட்டு இருந்துள்ளன. இது அந்த காலகட்டத்தில் மதங்களிடையே நிலவிய சகிப்பு தன்மை மற்றும் மதங்களுக்கு இடையே இருந்த இணக்கத்திற்குமான ஒரு சான்றாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அந்த கோயில் பல நூறு ஆண்டுகளாக சிதிலமடைந்து போய் இருக்கக்கூடிய சூழ்நிலை நிலவுவதால், அந்த இடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. மேலும், யுனெஸ்கோவின் கண்காணிப்பிலும் இருந்து வருகிறது. ஆகவே, அரசு அந்த இடத்தை மக்கள் சுற்றி பார்க்க கூடிய சுற்றுலா தளமாகவும் அறிவித்துள்ளது. மேலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு தொல்லியல் துறை கண்டெடுத்த சிலைகளை தொல்லியல் துறை பாதுகாக்குமே தவிர இந்த இடத்தில் நிறுவ முடியாது. என்பதை உலக அறிவுள்ள அனைவரும் நன்கு அறிவார்கள்.
இப்படி தொல்லியல் துறையினரால் கண்டெடுக்கப்பட்ட ஒரு விஷ்ணு சிலையை தான், அதே இடத்தில் நிறுவ வேண்டும் என கூறி, ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவை தான் உச்சநீதிமன்ற நீதிபதி கவாய் மற்றும் வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு கடந்த செப்டம்பர் மாதம் 16ம் தேதி தள்ளுபடி செய்து இருந்தது.
அதற்காக தான், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அவர்கள் மீது செருப்பை வீச முயன்று இருக்கிறார். அந்த ராகேஷ் கிஷோர் சுமார் 71 வயது உடையவர், இவர் பெரிய அளவில் ஏதும் வழக்குகள் தொடர்பாக நீதிமன்றங்களுக்கு தொடர்ந்து செல்ல கூடிய நபரும் கிடையாது. ஆனால், இந்த செயலை செய்வதற்காகவே அன்று நீதிமன்றத்திற்கு சென்று இருக்கிறார். இந்த செயலை கடவுள் தான் என்னை செய்ய சொன்னார் என்றும் கூறியிருக்கிறார். அப்படி என்றால், அவருக்கு இந்த 71 வயதில் எந்த அளவிற்கு மதவெறி மண்டையில் ஊறி போய் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்த மோசமான செயலை கண்டித்து இந்திய பிரதமர் மோடி முதல் பல தேசிய கட்சி தலைவர்களும், பல மாநில முதல்வர்கள் மற்றும் மாநில கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரும், கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.
தமிழகத்திலும், தமிழக முதல்வர் உட்பட பல கட்சி தலைவர்களும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர். அதேபோல தான், விசிக கட்சி தலைவர் திருமாவளவன் அவர்களும் தன்னுடைய கடுமையான கண்டனத்தை பதிவு செய்தவுடன், சென்னை உயர் நீதிமன்றத்தின் அருகில் தன்னுடைய தலைமையில் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கிடையே, இந்திய அளவில் பரபரப்பாக பேசப்படும் இந்த சம்பவம் தமிழகத்தில் எந்தவிதமான பாதிப்பையும் பெரிய அளவில் ஏற்படுத்தி விடக்கூடாது என்றும், இந்த பிரச்சினையை திசை திருப்ப வேண்டும் என்ற நோக்கத்திலும், தமிழகத்தில் இருக்க கூடிய பாஜகவினர் தெளிவாக திட்டமிட்டு செயல்பட துவங்கினார்கள்.
அதன் விளைவு தான், உயர் நீதிமன்றம் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் முடிந்து திருமாவளவன் அவர்கள் புறப்பட்டு செல்லும் போது நடந்த சம்பவம், இதன் வாயிலாக தமிழக பாஜகவினர் திட்டமிட்ட, திட்டங்கள் அரங்கேற்றபட்டுவிட்டது.
திருமாவளவன் அவர்களுடைய காரை மடக்கினால் அவர்கள் கட்சியினர் என்ன செய்வார்கள் என்பது பாஜகவினருக்கு நன்றாகவே தெரியும். அதை வைத்து இந்தியாவில் ஒரு முக்கிய பொறுப்பை வகிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் அவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை திசை திருப்பியும், தமிழகத்தில் ஒரு பதட்டத்தையும், வன்முறையையும் தூண்டிவிட்டு, 2026ல் வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்குள் தமிழ்நாட்டை வட இந்தியாவை போல் சாதி வெறி, மதவெறி மோதல்களை உருவாக்க வேண்டும் என்ற, அவர்களின் நீண்ட கால கனவுகளையும் நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள்.
தமிழக அரசியலில், பாஜக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வலுவாக காலூன்ற வேண்டும் என்றால், இங்கு பலமாக இருக்க கூடிய திமுக மற்றும் அதிமுக கட்சிகளை பலவீனப்படுத்த வேண்டும் என்பது இவர்களுடைய முக்கிய திட்டம், அந்த நோக்கத்திற்காக தமிழகத்தில் பல திட்டங்களை பாஜக அரங்கேற்றி வருகிறது. அதற்கு, முதன் முதலில் தமிழ்நாட்டில் திமுகவின் ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்திற்காக தான் தற்போது, அதிமுக கட்சியின் முக்கிய கட்சி தலைவர்களை சிதறடிக்க செய்திருக்கிறார்கள்.
அதன் மூலம், அதிமுகவில் உள்ள தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களை சார்ந்த சாதி ஓட்டுக்களை சிதறடிக்க செய்வார்கள். அந்த சூழ்நிலையில், திமுகவை பலமாக எதிர்த்து கொண்டு இருக்கும், விஜய் கட்சிக்கு அதிமுகவின் வாக்குகள் செல்லும் என்பதையும் கணித்து வைத்திருக்கிறார்கள். அதன் மூலம் அதிமுகவை பலவீனப்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் திட்டம்.
அடுத்ததாக திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், தமிழ்நாட்டில் பலமாக இருக்கக்கூடிய திமுக கூட்டணியை உடைக்க வேண்டும், அதற்கு திமுக கூட்டணியின் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடிய திருமாவளவனை அந்த கூட்டணியில் இருந்து முதலில் வெளியே கொண்டு வரவேண்டும். அதற்காக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒரு முயற்சியாக, அவரை சுற்றி இருப்பவர்களுக்கு திருமாவளவனை துணை முதல்வராக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டனர். அந்த திட்டம் எடுபடாமல் போனது.
அடுத்ததாக, நடிகர் விஜயை கடுமையாக விமர்சிப்பது போல், அவரை ஜோசப் விஜய் என விமர்சனம் செய்து அவர் சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர் என்ற ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர். அதன் மூலம், விசிக கட்சிக்கும், திமுக கட்சிக்கும் செல்லக்கூடிய சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கலாம் எனவும் திட்டமிடுகின்றனர். மேலும், அவர் சார்ந்த சமூகத்தினரை கையில் எடுத்து அவர்களை கொண்டு, திருமாவளவன் அவர் சார்ந்த சாதிக்கு ஏதும் செய்வதில்லை, என விமர்சிக்க வைக்கின்றனர்.
இந்த சூழ்ச்சிகள் எல்லாம் ஏதும் எடுபடாமல் போகவே, உயர்நீதிமன்றம் வாயிலில் ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கின்றனர். இதுபோல் பல விதங்களில் தாக்குதல் சட்டமன்ற தேர்தல் வரை நடக்கும் என்பதை ஆருடம் சொல்வது போல், விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் ஏற்கனவே அவர் கட்சி தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் அறிவுரையாக சொல்லி வைத்திருக்கிறார்.
ஆகவே, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் மட்டுமில்லாமல், அந்த கட்சியில் இருக்கக்கூடிய ஒவ்வொருவரும் பொறுமையுடனும், கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டியது அவசியம். அதேபோல், தமிழ்நாட்டை வடமாநிலங்களை போல் சாதி வெறி மற்றும் மதவெறியை தூண்டி அரசியல் செய்ய துடிக்கும் பாஜகவின் சூழ்ச்சி செயல்பாடுகளை ஒவ்வொன்றையும் தமிழக மக்களும் அடையாளம் கண்டு கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலையும் நிலவுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி மொழி தடைக்கு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது!


