SK 24 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் ‘அமரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ‘மதராஸி’ திரைப்படம் வெளியானது. இதைத்தொடர்ந்து அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ‘பராசக்தி’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
அந்த வகையில் சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, விநாயக் சந்திரசேகரன் ஆகியோர் சிவகார்த்திகேயனின் லைன்- அப்பில் இருக்கின்றனர். தற்போது ‘பராசக்தி’ படத்தை முடித்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘டான்’ பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ராஷ்மிகா அல்லது ஸ்ரீலீலா, இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்திற்கு ‘பாஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் ஏற்கனவே பல தகவல்கள் வெளியாகி வந்தன.
அதே சமயம் இந்த படமானது வருகின்ற நவம்பர் மாதம் 22 அல்லது 23ஆம் தேதி தொடங்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கப்போகிறார் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இனிவரும் நாட்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர இசையமைப்பாளர் சாய் அபியங்கர், சிவகார்த்திகேயன் – விநாயக் சந்திரசேகரன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார் என்று பல செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


