
எஸ்.ஐ.ஆர்( வாக்காளர் சிறப்பு திருத்தம்) என்னும் வார்த்தையைக் கேட்டாலே திமுக பயப்படுகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு தேவர் குருபூஜை அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. முன்னதாக நேற்று முன்தினம் யாகசாலை பூஜையுடன் தொடங்கி ஆன்மீக விழாவாக நடைபெற்றது. தேவர் குருபூஜையையொட்டி இன்று காலை முதலே முதலமைச்சர் முக.,ஸ்டாலின் , எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித்தலைவர் தேவர் நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் மதுரை கப்பலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் உள்ளன. அதனால் நீதிமன்றம் மூலம் போலி வாக்காளர்களை நீக்கியுள்ளோம். இறந்தவர்களின் பெயர்களை கூட நீக்காமல் உள்ளனர். வாக்காள பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்கட்சிகள்தான் பயப்பட வேண்டும். ஆனால் திமுக ஏன் பயப்படுகிறது?

எஸ்.ஐ.ஆர்(வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்) என்ற வார்த்தையை கேட்டாலே திமுக பயப்படுகிறது” என்றார். மேலும் அவரிடம் பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பழனிசாமி, “பீகாரை பற்றி எனக்கு தெரியாது. நான் தமிழகம் பற்றி பேசுகிறேன். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு பிறகு முறையான வாக்காளர் பட்டியல் வரும் என நினைக்கிறேன்” என்று கூறினார்.



