No Nut November என்றால் என்ன?
No Nut November என்பது ஒரு இணையதள சவால் ஆகும். குறிப்பாக இது ஆண்களுக்காக வைக்கப்படும் சவால். இதில் கலந்து கொள்பவர்கள் நவம்பர் மாதத்தில் எந்தவித பாலியல் தொடர்பான விஷயங்களையும் செய்யக்கூடாது என்பதுதான் இதன் நோக்கம். Nut என்பதை இணையதள மொழியில், விந்து வெளியேறுதல் என்று குறிப்பிடுவர். இது ஆரம்பத்தில் நகைப்பூட்டும் விஷயமாக பார்க்கப்பட்டாலும் சிலர் இதை சீரியஸாக எடுத்துக் கொண்டு செய்து வருகின்றனர். மேலும் சிலர் இதை சுய கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும் விஷயமாகவும் நல்ல சமூக பரிசோதனையாகவும் பார்க்கின்றனர்.

கடந்த 2010 அல்லது அந்த காலகட்டத்தில் விளையாட்டாக Reddit தளத்தில் ஆரம்பிக்கப்பட்ட விஷயம் தான் இந்த No Nut November. அந்த தளத்தில் சிலர் மது, மாது ஆகிய விஷயங்களிடமிருந்து தள்ளி இருப்பது குறித்து பேசத் தொடங்கினர். இந்த இணையதள விவாதத்தில் பங்கேற்றவர்கள் பாலியல் மற்றும் மதுவிடமிருந்து தள்ளி இருப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து பேச ஆரம்பித்தனர்.
இதனை சிலர் சவாலாக எடுத்துக் கொண்டு நவம்பர் மாதத்தில் புகைபிடிக்கக் கூடாது, மது அருந்தக்கூடாது, பாலியல் உறவு கூடாது, சுய இன்பம் அடையக்கூடாது என்று தங்களுக்குள்ளேயே கட்டுப்பாடுகள் விதித்து அதை பின்பற்ற தொடங்கினர். இதிலிருந்து வருடா வருடம் நவம்பர் மாதம் வரும்போது இதனை பலரும் பின்பற்றி வருகின்றனர். ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் இது தொடர்பாக பரவலாக பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


