
1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
          உரைக்கல் உறுவதொன் றுண்டு
கலைஞர் குறல் விளக்கம் – வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும் நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.

1272. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
          பெண்நிறைந்த நீர்மை பெரிது
கலைஞர் குறல் விளக்கம் – கண்நிறைந்த அழகும் மூங்கில் போன்ற தோளும் கொண்ட என் காதலிக்குப் பெண்மைப் பண்பு நிறைந்திருப்பதே பேரழகாகும்.
1273. மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
          அணியில் திகழ்வதொன் றுன்டு
கலைஞர் குறல் விளக்கம் – மணியாரத்திற்குள் மறைந்திருக்கும் நூலைப்போல இந்த மடந்தயின் அழகுக்குள்ளே என்னை மயக்கும் குறிப்பு ஒன்று உளது.
1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
          நகைமொக்குள் உள்ளதொன் றுன்டு
கலைஞர் குறல் விளக்கம் – மலராத அரும்புக்குள் நறுமணம் அடங்கியிருப்பது போலத்தான் ஒரு பெண்ணின் புன்னகையென்ற அரும்புக்குள் அவளது காதலனைப்பற்றிய நினைவும் நிரம்பியிருக்கிறது.
1275. செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
          தீர்க்கும் மருந்தொன் றுடைத்து
கலைஞர் குறல் விளக்கம் – வண்ணமிகு வளையல்கள் அணிந்து என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது.
1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
          அன்பின்மை சூழ்வ துடைத்து
கலைஞர் குறல் விளக்கம் – ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே.
1277. தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
          முன்னம் உணர்ந்த வளை
கலைஞர் குறல் விளக்கம் – குளிர்ந்த நீர்த் துறைக்கு உரிய காதலன் உடலால் கூடியிருக்கும் போது, உள்ளத்தால் பிரியும் நினைவு கொண்டதை என் வளையல்கள் எனக்கு முன்னரே உணர்ந்து கழன்றன போலும்!
1278. நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும்
           எழுநாளேம் மேனி பசந்து
கலைஞர் குறல் விளக்கம் – நேற்றுத்தான் எம் காதலர் பிரிந்து சென்றார்; எனினும், பல நாட்கள் கழிந்தன என்பது போல் பசலை நிறம் எம்மைப் பற்றிக் கொண்டதே.
1279. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
          அஃதாண் டவள்செள் தது
கலைஞர் குறல் விளக்கம் – பிரிவு காரணமாகக் கழலக் கூடிய வளையலையும், மெலிந்து போகக் கூடிய மென்மையான தோளையும் நோக்கியவள் காதலனைத் தொடர்ந்து செல்வதென்ற முடிவைத் தன் அடிகளை நோக்கும் குறிப்பால் உணர்த்தினாள்.
1280. பெண்ணினாற் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
          காமநோய் சொல்லி இரவு
கலைஞர் குறல் விளக்கம் – காதல் வேட்கையைக் கண்களால் உணர்த்திக் காதலனுடன் போவதற்கு இரந்து நிற்கும்போது பெண்மைக்குப் பெண்மை சேர்த்தாற் போன்று இருக்கின்றது.


