டெல்லியில் நடந்த கூட்டத்தில் முதலில் எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக, தற்போது அதற்கு ஆதரவாக பேசுவதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் குற்றம்சாட்டியுள்ளார்.


எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு செல்வதால் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே எஸ்.ஐ.ஆர் தொடர்பான எந்த வழக்கிலும் அவர்கள் உறுதியான முடிவை எடுக்கவில்லை. ஆதாரை கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்கிற உத்தரவும் அதில் இல்லை. எனவே இதை அரசியல் ரீதியாக தான் எதிர்ப்பது தான் இதற்கான ஒரு தீர்வு என்று கருதுகிறேன். அதன் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபடுதல் பெரிய அளவில் இல்லாமல் பார்க்க முடியும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நாட்டில் இதுவரை 8 முறை செய்துள்ளனர். பீகாருக்கு முன்பு நடைபெற்ற 7 முறையும் மத்திய அரசின் அரசிதழில் ஆணை வெளியிட்டார்கள். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி அப்படி செய்ய வேண்டும். ஆனால் பீகாரில் இந்த உத்தரவு கடைபிடிக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் இந்த ஒன்றுக்காகவே எஸ்.ஐ.ஆருக்கு தடை விதித்து இருக்கலாம். ஆனால் உச்சநீதிமன்றம் மிகவும் மெத்தனமாக செயல்பட்டது. அதற்கு பிறகு பீகாரில் நடைபெற்ற எஸ்.ஐ.ஆரில் எவ்வளவு குளறுபடிகள் நடைபெற்றது. அவற்றை திருத்தம் செய்துவிட்டு தானே, மற்ற மாநிலங்களில் மேற்கொள்ள வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை.

பழைய வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தற்போது தான் மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் கண்டிப்பாக சில தவறுகள் இருக்கலாம். தேசிய அளவில் பிரதமரை தேர்வு செய்து ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. பீகார், தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா போன்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. தேர்தல் நடந்து முடிவது வரை எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளாமல் இருப்பதால் என்ன குடிமூழ்கிவிட போகிறது? எதற்கு இந்த அவசரம்?
தற்போது தொடங்கி டிசம்பர் மாதம் வெளியிட போகிற வரைவு பட்டியலுக்கு பதிலாக, ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட்டால் என்ன மாறிவிடும். அப்போதும் அனைவரும் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பார்கள். அதை அனைத்துக்கட்சிகளும் சொல்கிறோம். எனவே எஸ்.ஐ.ஆர். நடத்தப்படுவதன் நோக்கத்தில் சந்தேகம் ஏற்படுகிறது. SIR நடத்தும் உரிமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. சார் தேவையானது தான். ஆனால் அதை நடத்தும் முறை சந்தேகத்திற்கு இடமில்லாமல் இருக்க வேண்டும்.

எதிர்க்கட்சிகள் அரசியல் நோக்கத்தோடு SIR -ஐ எதிர்ப்பதாக சொன்னால், முன்பு 7 முறை நடந்தபோது ஏன் எதிர்க்கவில்லை? கடந்த முறை தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போதும் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப் பட்டிருக்கின்றனர். ஆனால் அப்போது தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் ஏற்படவில்லை. தற்போது தேர்தல் ஆணையம் நடந்துகொள்ளும் விதம் காரணமாக அவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. உச்சநீதிமன்றம் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. SIR நடவடிக்கையை தமிழக அரசு ஊழியர்கள் தானே நடத்துகிறார்கள். இதில் ஏன் சந்தேகம் என்கிறார்கள்.
பாஜக அரசின் பேச்சை கேட்டு தேர்தல் ஆணையம் செயல்படுவதால் தான் சந்தேகம் ஏற்படுகிறது. சேஷன் காலத்து தேர்தல் ஆணையமாக இருந்தால் நம்பிக்கை குறைபாடு ஏற்பட்டிருக்காது. அதிமுக SIR தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில், அதில் குறைகளை சுட்டிகாட்டி பேசினார்கள். ஆனால், தற்போது அதற்கு மாறாக SIR-ஐ ஆதரித்து பேசுகிறார்கள். SIR-ஐ எதிர்ப்பவர்கள் திமுகவினர் என்று சொல்கிறார்கள். நடைமுறையில் SIR நடவடிக்கையை மேற்கொள்ள ஆட்களை நியமிப்பதற்கு இது சரியான மாதம் அல்ல.

வடகிழக்கு பருவமழை பெய்யும் இந்த கால கட்டத்தில் யாராவது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளில் ஈடுபடுவார்களா? பனி படர்ந்த மாவட்டங்கள் என்று தேர்தல் ஆணையம் விலக்கு அளிக்கிறது. அப்போது பருமழை மாவட்டங்கள் என்று நமக்கு விலக்கு அளிக்கக் கூடாதா? அப்படி தள்ளி வைப்பதால் என்ன நஷ்டம் ஏற்படப் போகிறது. மழை வெள்ளத்தின்போதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டுமா? எவ்வுளவு மடத்தனமான நடவடிக்கை இது.
இதனை மாநில அரசு எதிர்க்கிறது. அதை ஒத்திவைப்பதால் தேர்தல் ஆணையத்திற்கு என்ன நஷ்டம் ஏற்படபோகிறது. நாடு முழுவதும் SIR நடத்திவிட்டுதான் தேர்தல் நடத்துவார்கள் என்றால்? எதற்காக 2024 மக்களவை தேர்தலை நடத்தினார்கள். தற்போது அசாம் மாநிலத்திற்கு தேர்தல் நடத்தாதற்கு ஒரு காரணம் சொல்கிறபோது, அது மற்ற மாநிலங்களுக்கு பொருந்தாதா?

இதில் குற்றவாளி ஞானேஸ்குமார். அவர் அமித் ஷாவால் நியமிக்கப்பட்டவர். அமித்ஷா துறையில் பணியாற்றியவர் ஞானேஸ்குமார். அப்போது இந்த சந்தேகம் இயல்பாக எல்லோருக்கும் வருகிறது. அதை நிவர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்திற்கு தான் உள்ளது. ஆனால் சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக அவர்கள் அழுத்தம் கொடுக்கிறார்கள். வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையமா? அல்லது ஞானேஸ்குமாருக்காக வாக்காளர்கள் உள்ளனரா? இந்த கேள்விக்கான விடை எங்கே உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


