spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

-

- Advertisement -

க.திருநாவுக்கரசு

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!தி.மு.க. தோன்றி 75 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. முக்கால் நூற்றாண்டு, அது அரசியல் களத்தில் நின்று வாளையும் கேடயத்தையும் இன்னமும் சுழற்றிக்கொண்டு இருக்கிறது. போராட்டம் தொடருகிறது;

முடிந்தபாடில்லை. அது முடியாது. இது, திராவிட இயக்கவியல்,

we-r-hiring

திராவிட இயக்கம் உருவாகி 113 ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘காலம் கடுகி ஓடுவதை நாளென ஒன்றுபோல் காட்டி’ எனக் காலத்தை அலகிடும் திருக்குறள். அப்படி ஓடிய காலத்தினூடேதான் தி.மு.கழகம் பவளவிழாக் காணுகிறது.

தி.மு.கழகம் சூன்யத்திலிருந்து உருவாகிவிடவில்லை. அது, சிந்து சமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி, இயக்கமாய், கட்சியாய், நம் அரசியல் உரிமையைக் காக்கின்ற காவல்காரனாய் பணியாற்றுகிறது.

13ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, ஐந்நூறு ஆண்டுகளாய் உறைந்து கிடந்த இனத்தை, மொழியை, பிரான்சிஸ் ஒயிட் எல்லீசும், இராபர்ட் கால்டுவெல்லும் ‘சிக்கிமுக்கி’ கல்லைத் தேய்த்து தீயை உண்டாக்கிக் கொடுத்தனர். அந்த ‘ஆதித் தீ’ பைய எரியத் தொடங்கி, இன்று வீட்டு விளக்காய் ஒளிர்கிறது. அதுதான் தி.மு.க!

ஐந்தாறு மாத சிந்தனைக்குப் பிறகு, செப்.17,18/1949ல் அறிஞர் அண்ணாவால் நிறுவப்பட்ட கட்சி தி.மு.க!

தாய்க் கழகத்தின் கொடி மற்றும் நிறத்தை எடுத்துக்கொண்டது தி.மு.க! தொண்டர்கள் எளிதில் தைத்துப் பறக்க விடும்படியான (3:2 விகிதத்தில்அளவு வைத்து) கருப்பு சிவப்பு வண்ணக்கொடி – தி.மு.கழகக் கொடி இந்தக் கொடி, தி.மு.க.வின் முதற்கூட்டத்தில் தொடக்க நாள் கூட்டத்தில் பறந்தது.

செப்.17 ஆம் தேதி அமைக்கப்பட்ட கழகத் துணைக் குழுக்கள் தம்முள் வேலைப் பகிர்வைச் செய்துகொண்டன. அமைப்புத் திட்டக்குழு அறிஞர் அண்ணாவைப் பொதுச்செயலாளராக நியமித்தது.

சட்ட திட்டக் குழு அதன் அறிக்கையை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கியது. அதன்மீது 1951ஆம் ஆண்டு, மதுரை பொதுக்குழுவில் பலத்த விவாதங்களுக்கிடையே, திருத்தங்கள் நடந்தன. பின்னர், கழகச் சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கை, குறிக்கோள்கள் ஏற்கப்பட்டன. அது ஒரு சிறு புத்தகமாக வெளியிடப்பட்டது.

மெல்ல கழகம் வளர்ந்தது. திராவிடர் தேநீர் நிலையம், அழகு நிலையம், மிதிவண்டிக் கடை எங்கும் கழகம்! நெடுஞ்சாலைகளில் பேருந்தில் சென்றால் மரங்கள், கட்டடங்கள், குடில்கள் எங்கும் கழகக்கொடி. ஊர்க்கிளை முதல் தலைமைக் கழகம் வரை பலமான அமைப்பு. சார்பு மன்றங்கள், படிப்பகங்கள் எனத் தன்னெழுச்சியான அடிப்படை அமைப்புகள் அதற்குள்ளே படிக்க அறிவு தரும் இனிய நூல்கள், இதழ்கள்! ஞாயிறுதோறும் சொற்பயிற்சிக் கூட்டங்கள்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

அறிஞர் அண்ணாவின் முயற்சியில் ‘அறிவகம்’ இயங்கத் தொடங்கியது. கலைஞரால் ‘அன்பகம்’ வாங்கப்பட்டது. அறிவகத்தை குமரி மாவட்டக் கழகத் தோழர் வி.எம்.ஜான் 1951ல் திறந்துவைத்தார். அன்பகத்தை அறிஞர் அண்ணா 1964ல் திறந்துவைத்தார்.

1953 ஜூன் 15 முதல் தி.மு.க.வின் அதிகாரபூர்வமான நாளேடு ‘நம்நாடு’ வெளிவரத் தொடங்கிற்று.

கழகம் பிறந்த சில மாதங்களுக்குள்ளேயே மாவட்ட மாநாடுகள் நடக்கத் தொடங்கிவிட்டன. பின்னர், அவை மாநில மாநாடுகள் நடத்த முன்னெடுத்துச் செல்லப்பட்டன.

பொது மேடையிலே பேச்சுக்கலை வளர்ந்தது. அதனை அறிஞர் அண்ணா ‘மாலை நேர வகுப்புகள்’ என அழைத்தார். தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை நாடகங்கள் எழுதினர், நடித்தனர். திரைப்படத் துறை கழக வசமாயிற்று.

தி.மு.கழகத்தினர் நல்ல தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக்கொண்டனர். கைத்தறி ஆடைகளைத் தரித்தனர். தோளுக்குத் துண்டை அணிந்தனர். வீடுகளில் பிறப்பு முதல் இறப்பு வரையான நிகழ்ச்சிகளின் போக்குகளில் கழகத்தால் ஒரு மாறுதல் உண்டாயிற்று. அது, கலாச்சாரப் புரட்சியாய் மலர்ந்தது. தமிழமாய் உயர்ந்தது. அது மொழி, இனம், நாடு எனச் செழுமையாயிற்று.

தி.மு.கழக நிறுவனர் அறிஞர் அண்ணா அறிவுக்கு முதலிடம் வழங்கச்சொல்லி வற்புறுத்தியவர். நடந்து காட்டியவர், கலைஞர் எழுப்பிய அண்ணா அறிவாலயம்’ கம்பீரமாக இன்று நிற்கக் காண்கின்றோம். இது தி.மு.க.வின் ‘செக்ரட்டேரியட்’ ‘அறிவாலயம்’ எனும் சொல்லை அண்ணா 1946-லேயே அறிமுகப்படுத்தினார். 23.01.1948 திராவிட நாடு இதழில் உலகின் மிகப் பெரிய நூலகத்தை ‘அறிவாலயம்’ எனத் தலைப்பிட்டு சிறிய கட்டுரை ஒன்றை எழுதினார். அதே பெயரைக் கொண்டு கலைஞரால் ‘அறிவாலயம்’ தி.மு.கழகமாய் நிற்கிறது.

வளர்ந்தது கழகம். 1952 பொதுத்தேர்தலில் கழகம் பிற கட்சிக்கு ஆதரவு அளித்து வெள்ளோட்டம் பார்த்தது. வாய்ப்பு வெற்றியை நோக்கியதாய் இருந்தது.

திகைத்தனர் பிற கட்சியினர்! வெட்ட வெளியில் என்ன பேச்சு? கோட்டைக்கு உங்களால் வர முடியுமா?’ என எக்காளம் கொட்டிச் சிரித்தனர். 1956ல் இரண்டாவது மாநில மாநாட்டில் தேர்தலுக்கு நிற்க கழகம் மக்களிடம் அனுமதிபெற்றது.

1957 முதல் கழகம் சட்டமன்றம், நாடாளுமன்றம் நுழையத் தொடங்கியது. 1959ல் சென்னை மாநகராட்சியைப் பிடித்தது.

இதே ஆண்டு, அறிஞர் அண்ணாவுக்குப் பொன்விழா பிறந்தநாள் ஆண்டு. அண்ணாவின் வாழ்க்கையிலிருந்து ஆண்டுக்கு ஒரு காட்சி வீதம் 50 டிரக்குகளைக் கொண்ட ஓவியங்கள் அவற்றில் அமைக்கப்பட்டன. அவை, கடற்கரைக் கூட்டத்திற்குப் பேரணியாகச் சென்றன.

1949 முதல் 1963 வரை ‘திராவிட நாடு’ கோரிக்கையை வலியுறுத்தி வந்தது கழகம். ஆதரவு நாள்தோறும் வளர்ந்த வண்ணமாக இருந்தது. 1950 முதல் 2001 வரை நடந்த போராட்டங்களில் கழகத்தினர் பலர் தமது இன்னுயிரை இழந்தனர்.

அவர்களின் பட்டியல் மிகப் பெரியது. கழக பவளவிழாவின்போது, அவ்வீரர்களை நினைவுகூருவோம். அவர்களுக்கு கண்ணீரைக் காணிக்கையாக்கி வீரவணக்கம் செலுத்துவோம்.

1962- பொதுத் தேர்தலைக் கழகம் சந்தித்தது. சட்டமன்ற நாடாளுமன்ற நுழைவில் முன் நகர்வை உருவாக்கி, வெற்றி முரசைக் கொட்டியது. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை முறையே 50, 7 என்று உயர்ந்தது. ஆட்சியில் இருந்தோர்க்கு இது எச்சரிக்கை ஆயிற்று.

1961ல் தி.மு.க. முதல் பிளவைச் சந்தித்தது. 1962 முதல் 1966 வரை தி.மு.கழகம் செயலாற்றிய வேகம் அலகிட முடியாதது ஆயிற்று. தமிழகம் எங்கும் கழகத்தின் 4 ஆம் மாவட்ட மாநாடுகள் நடந்தன. இவை விருகம்பாக்கம் 4-வது மாநில மாநாட்டை நோக்கி நகர்ந்தன.

1962 ஆம் ஆண்டு தேர்தலில், அறிஞர் அண்ணாவின் தோல்வி, ஒரு பின்னடைவில் முன்னேற்றமான கழகத்தின் எழுச்சி நடையாயிற்று. தி.மு.க.வின் மாநிலங்களவையின் உறுப்பினரானார் அண்ணா, மாநிலங்கள் அவையில் தி.மு.க.வின் முதல் உறுப்பினர் அண்ணாதான்.

தி.மு.க.வை தடை செய்ய சட்டம் தயார் ஆனது. அண்ணா பிரிவினையைக் கைவிட்டார். கழகச் சட்டதிட்டத்தில் திருத்தம் செய்தார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

கலைஞர் தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழு, எரிப்பு, மறியல் எனப் போராட்டப் பட்டியல். இதில் ஈடுபட்ட தோழர்கள் அண்ணா உட்பட 6 மாதங்கள் முதல் மூன்றாண்டுகள் வரை தண்டிக்கப்பட்டனர்.

கலைஞரும் முரசொலி மாறனும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு 4 ஆம் கட்டப் போராட்டம், உள்நாட்டுப் போர் போல் காட்சியளித்தது. தி.மு.கழகம் களத்தில் நின்றது. துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. நூற்றுக்கணக்கானோர் இறந்தனர்.

இந்நிலையிலும் கலைஞர் தேர்தல் நிதி வசூலித்துக்கொண்டு இருந்தார். கொடி விற்பனை தொடங்கி, கூட்டத்தில் பங்கேற்க ரூ.500 எனப் பெற்று, கழக நிதியினைப் பெருக்கினார். காரிலேயே படுத்துக்கொண்டு சுற்றுப்பயணம் செய்து, அவருக்கு முதுகில் புண் ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் எல்லாப் பணிகளையும் அவர் பொறுப்பேற்று நடத்தினார்.

விருகம்பாக்கம் அப்போது சென்னையின் புறநகர்ப் பகுதியாக இருந்தது. அங்கேதான் கழகத்தின் 4-ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. சென்னையிலிருந்து ஊர்வலம் மாநாட்டுத் திடலை அடைய ஊர்ந்தது. ஊர்வலத்தின் தலை மாநாட்டுத் திடலிலும் வால் மன்றோ சிலையிலேயே நீண்ட நேரம் இருந்தது. அவ்வளவு கூட்டம்.

அப்போது இந்தக் கட்டுரையாளர், தொண்டர் படையில் பணியாற்றினார். ஏராளமான சைக்கிள்கள் வரிசைப்படுத்தப்பட்டுக் கிடந்தன. இன்னொரு பகுதியில் சைக்கிள்கள் கொட்டி வைத்ததுபோல் கிடந்தன. 1966/டிச.29,30,31, 1967 ஜன.1 ஆகிய நாள்களில் 4ஆம் மாநில மாநாடு சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற தி.மு.க.வின் மாபெரும் மாநாடு இது. இதற்குப் பிறகு, தி.மு.க. மாநாடு நடத்த சென்னையிலும் புறநகர்ப் பகுதியிலும் இடம் இல்லாமல் போயிற்று.

இம்மாநாட்டில், தி.மு.க. பொருளாளர் கலைஞர் ரூ.11 இலட்சம் தேர்தல் நிதியை அறிஞர் அண்ணாவிடம் வழங்கினார். இது, அந்நாள்களில் மிகப்பெருந்தொகையாகும்.

மாநாட்டு மேடையில் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடந்தது. தி.மு.க. தனித்த பெரும்பான்மையைப் பெற்றது. அறிஞர் அண்ணா முதல்வரானார். (06.03.1967) ஓர் அரசியல் கட்சியை கொள்கை, கோட்பாடு, சட்ட திட்ட விதிகளின்படி முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் என அமைப்புரீதியாகச் செயல்பட்டு, அறிஞர் அண்ணா அந்த அமைப்பை மக்கள் முன் நிறுத்தி, தேர்தலில் வெற்றிபெற்று, முதல்வராக 18 ஆண்டுகள் ஆயிற்று. அந்த ‘ஸ்தாபன கட்டமைப்பு’ இன்று வரையும் தி.மு.க.வில் நீடிக்கிறது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!அறிஞர் அண்ணா 23 மாதங்கள் மட்டுமே முதல்வர் பதவியில் இருக்க முடிந்தது. முப்பெரும் சாதனைகளை மட்டுமே நிகழ்த்தினார். அதற்குள்அவர் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு, 03.02.1969ல் மரணம் அடைந்தார். அதுவரையில் அறிஞர் அண்ணா கழகத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்தார்.

கலைஞர் 09.02.1969 முதல் முதல்வரானார். பின்னர், கழகத் தலைவர் ஆனார். ஆட்சி சகடம் தொடர்ச்சியாய்ச் சுழன்றது. சாதனைகள் தொடர்ந்தன. அப்போது, பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி, அவருக்கு ஏற்பட்ட ‘கட்சி நெருக்கடியால்’ நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டார்.

அதனால், 1971ஆம் ஆண்டு தேர்தலைச் சந்திக்கவேண்டிய நிலை உருவாகிவிட்டது. தி.மு.க. இந்திரா காங்கிரசோடு கூட்டணி அமைத்தது. கலைஞர் சட்டமன்றத்தைக் கலைத்து, நாடாளுமன்றத்தோடு தேர்தல் நடத்தி, மகத்தான வெற்றியை நாடினார்.

1967ல் பெற்ற வெற்றியைவிட 1971 ஆம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றியைக் கழகம் பெற்றது.

காமராசர்-இராஜாஜி மகா கூட்டணி பெருத்த தோல்வியைச் சந்தித்தது. தி.மு.க. இந்தத் தேர்தலில் வெற்றிபெறாது என்று எதிரிகள் கருதிய கனவு சிதைந்தது.

புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், அமையப்போகும் கலைஞர் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக விரும்பினார். ‘நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பதற்கு வாய்ப்பில்லை. நடிப்புத் தொழிலை விட்டால் அமைச்சராகலாம்’ எனக் கலைஞர் மறுமொழி சொன்னார். இதற்கு எம்.ஜி.ஆர். உடன்படவில்லை.

1972 அக்டோபர் 8, 10 தேதிகளில் கழகப் பொறுப்புகளில் உள்ள அனைவரும் சொத்துக் கணக்கு காட்ட வேண்டும் என்று திருக்கழுக் குன்றத்திலும் சென்னையிலும் எம்.ஜி.ஆர். பேசினார். இது, அக்டோபர் 11ஆம் தேதி எல்லா ஏடுகளிலும் வந்தது.

இவ்விவகாரத்தின் தொடர்ச்சி அதி.மு.க தோன்றக் காரணமாயிற்று. இதனால் ஏற்பட்ட அனைத்துப் பாதிப்புகளையும் தி.மு.க. எதிர்கொண்டது. கலைஞர் எதிர்கொண்டார். இயக்கமும் கட்சியும் இயங்கின.

நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து அலகாபாத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்த இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என ராஜ் நாராயணன் வழக்குத் தொடர்ந்து இருந்தார். அவ்வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் ‘இந்திரா தேர்தல் செல்லாது’ என 12.06.1975ல் தீர்ப்புரைத்தது. இத்தீர்ப்பை எதிர்த்து இந்திரா காந்தி மேல் முறையீடு செய்து இருந்தார்.

ஆனால், இந்திரா காந்தியை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராடின. இதனால் இந்திரா காந்தி, ‘உள்நாட்டுக் குழப்பங்களால் இந்தியாவின் பாதுகாப்புக்குத் தீங்கு ஏற்படும் என்று கருதுவதால், நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுகிறது’ என்று அறிவித்தார்.

1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி, நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டது. ஜெயபிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், இடதுசாரி தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். நாடெங்கும் ஜனநாயகமற்ற இருண்ட சூழ்நிலை நிலவிற்று.

தமிழ்நாட்டின் முதல்வரான கலைஞர், நெருக்கடி நிலையை வரவேற்கவில்லை தி.மு.கழகம் நெருக்கடி காலத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது.

பெரியார் திடலில் பாசிச எதிர்ப்பு மாநாடு நடந்தது. இ.எம்.எஸ். நம்பூதிரி பாட், ‘தமிழ்நாட்டில்தான் சுதந்திரக் காற்றை நுகர முடிகிறது’ என்று அம் மாநாட்டில் பேசினார். கழகத்தினர் திரளாக மாநாட்டில் பங்கேற்றனர்.

கோவையில் 1975 டிசம்பர் கடைசியில் தி.மு.க.வின் 5ஆவது மாநில மாநாடு, கோவை குலுங்கியது. நெருக்கடி நிலையின் சுவடே தெரியவில்லை. தமிழ்நாடே அப்படித்தான் இருந்தது. அப்போது இந்திரா காந்தி, ‘இந்தியாவில் தமிழ்நாடு தீவுபோல் காட்சியளிக்கிறது’ என்றார்.

இதன் விளைவு 1976 ஜனவரி 31ல் தி.மு.கழக ஆட்சி முதன் முறையாகக் கலைக்கப்பட்டது. தமிழ்நாடெங்கும் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ‘அன்பகம்’ கலைஞருக்கு இயக்ககம் ஆயிற்று.

அச்சு ஊடகங்கள்-நாளேடுகள் தணிக்கை செய்யப்பட்டன. முரசொலி வெளிவருவதில் சிக்கல்களை ஒன்றிய அரசின் வெளியீட்டுத் துறையினர் ஏற்படுத்தினர். கலைஞர் அதனை எதிர்கொண்ட விதமே சுவைமிக்க வரலாறுகளைக் கொண்டதாக இருந்தது.

நெருக்கடி நிலைக் காலத்தில் கலைஞர் அன்றாடம் 11.00 மணிக்குள் அன்பகம் வந்துவிடுவார். கலைஞர் வந்துவிட்டாரா என்று கேட்டுக் கொண்டுதான் பிற தலைவர்கள் வருவர். கழகத் தோழர்கள் எப்போதும் அன்பகத்தை மொய்த்துக்கொண்டு இருப்பர்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

‘அன்பகம் எதிரே இப்போது சாகித்திய அகாதெமி இயங்கும் கட்டடத்தில் அப்போது கீழ்ப்பகுதியில் ‘தினகரன்’ நாளேடு அலுவலகம் இருந்தது. அந்தக் கட்டடத்தின் கீழ்ப் பகுதியின் மறைவிடத்தில் ஒற்றர்கள் எப்போதும் இருந்தபடி அன்பகத்தைக் கண்காணிப்பர்.

கழகம் தடை செய்யப்பட்டுவிடும், கலைஞர் கைதுசெய்யப்பட்டுவிடுவார் என்ற செய்திகள் உலவிக்கொண்டே இருந்தன. கைதுசெய்யப்பட்டவர்களை ‘அண்ணா நினைவிடத்திற்கு வராதோர்’ பட்டியலின்மூலம் கலைஞர் வெளிப்படுத்தினார்.

கழகம் தடை செய்யப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அதற்காகப் பெயரையே மாற்றிவிடலாம் என்று சில தலைவர்கள் யோசனை சொன்னார்கள். கலைஞர் மிகுந்த துணிச்சலுடன் அந்த யோசனையை மறுத்தார். பெயரை மாற்றிய கட்சி எது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

ஏடுகள் நடத்த முடியவில்லை. கழகத்தினர் 500-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில்! சில தலைவர்கள் கலைஞரை தலைமைப் பொறுப்பிலிருந்து விலகும்படி வற்புறுத்திவந்தனர். இவ்வளவு இடையூறுகளுக்கிடையே கலைஞர் நெருக்கடிநிலைக் காலத்தில் கழகத்தை நடத்தினார்.

கலைஞரின் கார் டிரைவர்கள் வேலையிலிருந்து நின்றுவிட்டனர். அவருக்கு டி.ஆர்.பாலு, கோவை மு.கண்ணப்பன் போன்றவர்கள் காரோட்டினார்கள். கைதுகள் தொடர்ந்ததால் எல்.கணேசன் தலைமைக் கழகத்தில் தங்கி பணியாற்றினார். ஆர்.எஸ். பாரதி அன்றாடம் அன்பகத்தில் ‘ஆஜராகி’விடுவார். டி.கே.சீனிவாசன் தினந்தோறும் வந்துவிடுவார்.

அலுவலக நிர்வாகி மு.சண்முகம் கலைஞரின் நிழலாய் நிர்வாகப் பணிகளில் இயங்கினார். தொழிற்சங்கத் தலைவர் வி.எம்.ஆர்.சபாபதி காரில் தினந்தோறும் உடன் சென்று, கலைஞரை இராஜா அண்ணாமலைபுரம் வீட்டில் விட்டுவிட்டுத் திரும்புவார். கலைஞர் எந்தத் தோழருக்கு என்ன வேலை தந்து இருக்கிறார் என்று ஒருவருக்கொருவர் தெரியாது. அப்படிக் கழகத்தை இயக்கினார் கலைஞர்.

இக்கட்டுரையாளரான நமக்கும் சில பணிகளை வழங்கினார் கலைஞர், அது குறித்து ‘நெஞ்சுக்கு நீதி’ இரண்டாம் பாகத்தில் நினைவுகூர்ந்து இருக்கிறார். செ.கந்தப்பன், சட்டமன்ற உதவிச் செயலாளராக இருந்த மா.சண்முகசுப்ரமணியன் ஆங்கிலக் கடிதங்களை எழுதுவதும் பரிசீலிப்பதும் வரும் கடிதங்கள் குறித்து கலைஞரிடம் விவாதிப்பதுமாகப் பணியாற்றினார்கள்.

மயிலாப்பூரில் இருந்து வந்த ஜெயராமனுக்குத் தினம் தேநீர் வாங்குவது பணியாக இருந்தது. ‘அன்பகம்’ சிக்னலில் கிழக்குப் பக்கம் இருக்கும் அமர்ஜோதி ஓட்டலிலிருந்து (இன்று லாட்ஜ்) தினம் தேநீர் அன்பகத்திற்கு ஜெயராமன் மூலம் வரும். காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2.00 மணி வரை தோழர்களின் வருகை இருந்துகொண்டே இருக்கும்.

வெளி மாவட்டங்களிலிருந்து பேருந்து அமர்த்திக்கொண்டு கலைஞரைப் பார்க்க வரும் தோழர்களின் வருகை மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. அந்தக் காட்சி அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையை ஒத்ததாய் அமைந்தது. சில நேரங்களில், கலைஞர் வெகுநேரம் அன்பகத்தில் இருப்பார். சில நாள்களில் நண்பகல் உணவினை அன்பகத்திலேயே அருந்திவிட்டுப் பணியைத் தொடருவார். இப்படிப் பணி செய்ய யாரால் முடியும்?

நெருக்கடி நிலையை அமல்படுத்திய இந்திரா காந்தி, அவர் கட்சியின் மாநாட்டினை கவுஹாத்தியில் கூட்டினார். எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றார். தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். சிறையில் அடைக்கப்பட்ட கழகத் தோழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுவிக்கப்பட்டார்கள்.

ஜனதா கட்சி உருவாயிற்று. கலைஞரின் பங்களிப்பு பெரிதும் இருந்தது. 1977ல் நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடந்தது. வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து ஏ.வி.பி. ஆசைத்தம்பி மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனதாவின் சார்பாக மொரார்ஜி தேசாய் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாவலரோடு சிலர் விலகினர். சில மாதங்கள் இந்தச் சர்ச்சைகள் தொடர்ந்தன. இது, கழகத்தில் ஏற்பட்ட மூன்றாவது பிளவு. இதன் பிறகு சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. சந்தித்தது. கழகம் 48 இடங்களில் வெற்றிபெற்றது. தி.மு.க.வுக்கும் எம்.ஜி.ஆர். கட்சிக்கும் மொத்த வாக்குகளில் 8 இலட்சம் மட்டும்தான் வித்தியாசம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஜனதா, தி.மு.க.வோடு இல்லை. 1977 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தனித்துச் சந்தித்தது. எம்.ஜி.ஆரால் தி.மு.க.வின் செல்வாக்கு முழுவதையும் துடைத்தெறிந்திட முடியவில்லை, தி.மு.க.வின் கொள்கை பலமும் அமைப்பின் கெட்டிமையும் கலைஞரின் தலைமையும் கழகத்தை எதிரிகளால் ஒன்றும் செய்திட முடியவில்லை. அதன் பணி தொடர்ந்தது.

கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் ஊழல் குற்றச்சாட்டுகளால் திணறினார். விழுப்புரத்தில்சாதி கலவரத்தால் 13 ஆதிதிராவிடர்கள் கொல்லப்பட்டனர். போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எம்.ஜி.ஆரின் முதற்கட்ட ஆட்சி (1977-1980) பாராட்டும்படியாக இல்லை. அது கலைஞரையும் தி.மு.க.வையும் ஒடுக்குவதிலேயே கழிந்தது.

எம்.ஜி.ஆர் ஆட்சி அமைந்த நான்காவது மாதத்தில் இந்திரா காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்வதாகச் செய்தி வந்தது. அவசரநிலைப் பிரகடனத்திற்குப் பிறகு, அவர். அப்போதுதான் தமிழ்நாட்டிற்கு வர இருக்கிறார்.

அவசர நிலைக்காலத்தில் தி.மு.க. பலத்த இழப்புகளைச் சந்தித்தது. சிட்டிபாபு, சாத்தூர் பாலகிருஷ்ணன் மரணம் அடைந்தனர். ஆகவே, இந்திரா தமிழ்நாட்டிற்கு வருகைதந்தால், தி.மு.க. கருப்புக்கொடி காட்டுவது என்று முடிவு எடுத்து செயல்படுத்தியது.

இதனால், கலைஞர் உட்பட தி.மு.க.வினர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பெருமழை பெய்து சென்னையில் பலர் வீடு இழந்தனர். கலைஞர் சிறையிலிருந்து நிவாரண நிதியைத் திரட்டினார். இப்போராட்டத்தின் விளைவாக 5 கழகத் தோழர்கள் மரணம் அடைந்தனர். கழகத் தோழர் ஒருவர் கொல்லப்பட்டார். எம்.ஜி.ஆர் அரசுக்கு எதிராகச் சிறையில் இருந்தவாறு போராட்டத்தை அறிவித்தார் கலைஞர். கலைஞரும் தோழர்களும் உடனே விடுதலை செய்யப்பட்டனர்.

1979 செப்டம்பர் வாக்கில் தி.மு.க. எம்.ஜி.ஆர். கட்சியோடு இணைப்புப் பற்றி பிஜூ பட்நாயக் ஏற்பாடு செய்தார். கலைஞர் – எம்.ஜி.ஆர். சந்திப்பு, சென்னை அரசினர் விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. கலைஞர் 5 அம்ச திட்டத்தோடு எம்.ஜி.ஆரைச் சந்தித்தார். இணைப்பு பலன் அளிக்கவில்லை.

1980ல் இந்திரா காந்தி மீண்டும் பிரதமர் ஆனார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரை கலைஞர் போய் சந்தித்தார்.

1980ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வரானார். 1984ஆம் ஆண்டு தேர்தலின்போது, எம்.ஜி.ஆர். நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் இருந்தார். அவர் அங்கிருந்தே வேட்புமனு தாக்கல்செய்து வெற்றியும் பெற்றார். கலைஞர் எதிர்க்கட்சித் தலைவராகத் தொடர்ந்தார். எம்.ஜி.ஆர் உடல் நலம் குன்றியே இயங்கி வந்தார்.

1980ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க.வுக்கு 1977 தமிழகச் சட்டமன்றத் தேர்தலைவிட குறைந்த இடங்களையே பெற முடிந்தது. அ.இ.அதி.மு.க.வின் ஆட்சி தொடர்ந்தது. தி.மு.க.வின் பணி, கலைஞர் தலைமையில் அதே இயல்புப்படி இயங்கத் தொடங்கியது.

எம்.ஜி.ஆர். ஆட்சியின் இரண்டாவது கட்டத்தில் (1980-1984) ஞானசௌந்தரி, இளஞ்செழியன், புட்லூர் தண்டபாணி என அரசியல்கொலைகள் நடந்தன. இக்கொலைகளைப் பற்றியெல்லாம் கலைஞர் சட்டமன்றத்தில் உரத்த குரல் எழுப்பினார். இக்கொலைகளைவிட எம்.ஜி.ஆர். ஆட்சியை உலுக்கிய கொலை, திருச்செந்தூர் கோயில் அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்டதாகும்.

சுப்பிரமணிய பிள்ளை சாவு குறித்து ஆராய, விசாரணை செய்ய கமிஷன் அமைக்கப்பட்டது. நீதிபதி பால் விசாரணை செய்து தனது அறிக்கையை 18.09.1981ல் அளித்தார். அரசு வெளியிடாமல் இருந்த அறிக்கையை கலைஞர் 24.11.1981ல் வெளியிட்டார். இதனால் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் பெரிதும் பதற்றம் அடைந்தார்.

1983 ஜூனில் சாராயக் கலவை ஆலைகளுக்கு லைசென்சு வழங்கியதில் பயங்கர ஊழல் நடந்திருக்கிறது என்று எம்.ஜி.ஆர் அரசின்மீது குற்றம் சாட்டி சட்டமன்றத்தில் கலைஞர் உரையாற்றினார். ஆகஸ்ட் மாதத்தில் ஈழப் பிரச்சினை மிக மோசமாயிற்று, இதனால், மத்திய அரசின் சுவனத்தையும் அய்.நா. மன்றத்தையும் ஈர்ப்பதற்குரிய வகையில் தி.மு. கழகம் போராடத் தொடங்கியது. இதே சமயம் – இதே நோக்கத்திற்காகக் கலைஞரும் பேராசிரியரும் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினர்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

கலைஞர் 30.03.1984ல் 32 வாக்குகள் பெற்று மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; அவர் 23.04.1984ல் பிற்பகல் 3.29-க்கு மேலவை உறுப்பினராகப் பதவி ஏற்றுக்கொண்டார். கழக மேலவை உறுப்பினர்களாக எஸ்.ஜே.சாதிக்பாட்சா, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், க.மீனாட்சி சுந்தரம், எம்.பி. சங்கரலிங்கம், மிசா.ஆர்.கணேசன் ஆகியோர் இருந்தனர்.

1984 அக்டோபர் முதல் வாரத்தில் எம்.ஜி.ஆர் உடல்நலக் குறைவின் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனை இருந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு இருந்தது. சக அமைச்சர்கள்கூட முதல்வரைப் பார்க்க முடியாமல் இருந்தது. அப்போது, கலைஞர் ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டு இருந்தார். அதனை இரத்து செய்துவிட்டு, சென்னைக்குத் திரும்பினார்.

சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்து அறிக்கை வைக்க துரைமுருகன் தகவல் கோரி விரிவாகப் பேசினார். நாவலர், தற்காலிகபேரவைத் தலைவர் விளக்கம் அளித்தனர். கடைசியில் ஹண்டே இரண்டே வரியில் விளக்கம் அளித்தார்.

“முதல்வரின் உடல்நிலை முன்னேற்றத்திற்குரியதாக இருக்கிறது. மகிழ்ச்சியாக இருக்கிறார், பேசுகிறார்” என்று ஆங்கிலத்தில் அறிக்கை அளித்தார்.

முதன் முதலாக 15.10.1984ல் நாவலர், முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நிலை குறித்த அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல்செய்தார். இதன்பிறகு, தமிழகமெங்கும் வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடந்தன. ‘நானும் பிரார்த்தனை செய்கிறேன்’ எனும் கடிதத்தை ‘முரசொலி’யில் கலைஞர் எழுதினார்.

பிரதமர் இந்திரா காந்தி மருத்துவமனையில் எம்.ஜி.ஆரைப் பார்த்தார். அமெரிக்காவில் சிகிச்சைக்கு ஏற்பாடுசெய்ய வேண்டும் என ஆலோசனை கூறினார். ஆனால், எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பாகவே பிரதமர் இந்திரா காந்தி 31.10.1984 காலை 9:00 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார். இப்படுகொலையைக் கண்டித்து ‘வாழ்க இந்திரா வீழ்க வன்முறை!’ என்று கலைஞர் எழுதினார்.

1984 அக்டோபர் 2ஆவது வாரத்தில் சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆரின் உடல்நிலை குறித்து பிரச்சினை எழுப்பியதன் விளைவு, நவம்பர் முதல் வாரத்தில் எம்.ஜி.ஆரை நியூயார்க்குக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்திரா காந்தியின் மரணத்திற்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசின் அமைச்சரவை முடிவு எடுத்தது. இந்த முடிவை அ.தி.மு.க.வும் வரவேற்றது. நாவலர் டெல்லி கூட்டத்தில் பங்கெடுத்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்றார். இது எம்.ஜி.ஆரின் விருப்பம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்றத்தினுடைய ஆயுட்காலம், 1985 ஜூன் வரை இருந்தது. இருப்பினும் தமிழகச் சட்டமன்றம் 15.11.1984ல் கலைக்கப்பட்டது. கலைக்கப்பட்ட சட்டமன்றத்தில் தி.மு.க.வினர் 32 பேர் இருந்தனர்.”

1984ஆம் ஆண்டு தேர்தல் டிச.24, 27 கட்டங்களாக நடந்தன. எம்.ஜி.ஆர். நியூயார்க்கில் இருந்தார். அவரது வேட்புமனுவில் அவர் கையெழுத்திடா நிலையில் கட்டைவிரலைப் பதிந்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

கலைஞர் தேர்தல் களத்தில் வழக்கம்போல் இயங்கினார். அ.தி.மு.க.வினரின் ஆட்டம் மிக அதிகமாக இருந்தது. ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏடு; தி.மு.க. கட்டுப்பாட்டுடன் திகழ்கிறது என்று எழுதியது. இந்தத் தேர்தலில் பிரதமர் இந்திராவின் மரணமும் எம்.ஜி.ஆரின் நோயும் தி.மு.க.வைத் தோற்கடிக்கச் செய்தன. இதனைச் ‘சாவும் நோவும் நம்மைத் தோற்கடித்துவிட்டன’ எனக் கழகத்தினர் விமர்சித்துக் கொண்டனர். 1984 சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் போட்டியிடவில்லை.

தமிழ்நாட்டில் மூன்றாவது முறையாக எம்.ஜி.ஆர். ஆட்சி அமைந்தது. ஒன்றிய அரசில் ராஜீவ் காந்தி பிரதமர் ஆனார். 1984 சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. 29.49 சதவிகிதம் வாக்குகளைப் பெற்று 24 இடங்களைப் பெற்றது. அ.தி.மு.க 37.09 சதவிகித வாக்குகளைப் பெற்று 133 இடங்களைப் பெற்றது.

1984 டிசம்பர் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. ஆனால், எம்.ஜி.ஆர் பதவியேற்றுக்கொண்டது 10.2.1985ல்! பதவியேற்றது முதல் முதல்வருக்கு துறைகள் எதுவும் ஒதுக்கவில்லை. இது, அரசியல் சட்ட முரண்பாடு என்று அப்போதைய தி.மு.க பொருளாளர் எஸ்.ஜே. சாதிக்பாட்சா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தமிழ்நாட்டின் பிரச்சினைகளைப் பற்றியும் சாதனைகளை நிகழ்த்துவது குறித்தும் எம்.ஜி.ஆர், சட்டமன்றத்தில் விவாதிப்பதைத் தவிர்த்தார். சட்டமன்ற மேலவையிலும் பொது மேடைகளிலும் கலைஞரைப் பற்றியே பேசினார்.

1985ஆம் ஆண்டு நவம்பர் இரண்டாவது வாரத்தில், பெருமழை பெய்தது. சென்னை நகரமெங்கும் வெள்ளக்காடாக மாறி இருந்தது. தமிழகம் முழுவதிலும் பெருத்த சேதம் -இழப்புகள் ஏற்பட்டு மக்கள் பெருந்துன்பத்திற்கு ஆளாகி இருந்தார்கள்.

எம்.ஜி.ஆரின் இராமாவரம் தோட்டம் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவரின் வீட்டின் உள்ளே வெள்ளம். அவரைப் படகில் அழைத்துவந்தனர். நாடு வெள்ளத்தில் மிதக்கிறது. இவர் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. எதிர்க்கட்சிகள் கேட்டுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையே எம்.ஜி.ஆர். நடத்தினார். பெருமழையும் வெள்ளமும் நின்ற பிறகே எம்.ஜி.ஆர். தனது இல்லத்திற்குச் சென்றார் என்று ‘இந்து நாளேடு’ எழுதியது. ஆனால், இந்த வெள்ளக்காலத்தில் கலைஞர் முதல்வரைப் போல பணியாற்றினார். உடைப்பெடுத்த மதுராந்தகம் ஏரியை நேரில் சென்று பார்த்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றிப்பார்த்தார். நடவடிக்கை எடுக்குமாறு அரசினைக் கேட்டுக்கொண்டார். தம்மால் முடிந்த உதவிகளைக் கழக அமைப்புகள் செய்தன.

மீனவர் போராட்டமும் ஆசிரியர்கள் போராட்டமும் மழை காரணமாக நிறுத்திவைக்கப்பட்டன.

1986 பிப்ரவரியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க. மகத்தான வெற்றியைப் பெற்றது. அ.தி.மு.க.வுக்கு இந்த வெற்றி பலத்த சரிவை உண்டாக்கியிருந்தது. இதனை எம்.ஜி.ஆரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மேலவையில் கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகக்கூடாது என்பதற்காகப் பெருமுயற்சி எடுத்துக்கொண்டார். ஆனால், அது நடைபெறவில்லை. 23.04.1986 முதல் கலைஞர் மேலவை எதிர்க்கட்சித் தலைவரானார். இதனால் எம்.ஜி.ஆருக்கு எரிச்சல் அதிகமாயிற்று. முதல்வரான பிறகு, எம்.ஜி.ஆர் பல வேடிக்கைகளை அரங்கேற்றினார். அப்படி அரங்கேற்றிய நிகழ்ச்சி, நிர்மலா எனும் நடிகையை மேலவைக்கு ஆளுநர் மூலமாக நியமனம் செய்தது எம்.ஜி.ஆர் அரசு. அதன்மீது ஆளுநரும் உத்தரவிட்டார்.

ஆனால், நடிகை நிர்மலாவால் மேலவை உறுப்பினர் ஆக முடியவில்லை. ஏனெனில், அவர் ‘திவால்’ ஆனவர்; கடனாளி. ஆனால், அந்த நடிகையோ ரூ.10 இலட்சம் பழைய கடனை ஒரே தவணையில் கட்டினார். இது மேலும் சர்ச்சையாயிற்று. அவர் மேலவை உறுப்பினராகத் தகுதி உடையவர் ஆக்கிக்கொண்டாலும் அந்த நடிகை விலகல் கடிதத்தை ஆளுநரிடம் கொடுக்கவேண்டியதாயிற்று.

உள்ளாட்சித் தேர்தல்களில் தி.மு.க.வின் அமோக வெற்றி, கலைஞர் மேலவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆனது, நடிகை நிர்மலாவை மேலவை உறுப்பினராக்க முடியவில்லை போன்ற எம்.ஜி.ஆரின் தோல்விகள் எல்லாம் எங்கே போய் முடிந்தன?

1986 மே 9 ஆம் நாள் தமிழக சட்டமன்ற மேலவை கலைக்கப்படும் எனும் செய்தியில் முடிந்தது. மேலவை இரத்து செய்யப்படும் எனும் தீர்மானம் 14.05.1986ல் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அதற்கு ஒப்புதல் அளித்தன. குடியரசுத் தலைவரின் இசைவுக்குப் பிறகு, 01.11.1986 மேலவை இரத்து செய்யப்பட்டுவிட்டது.

மேலவை கலைக்கப்படும்போது, அதன் தலைவராக சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் இருந்தார். மேலவை எதிர்க்கட்சித் தலைவராக கலைஞர் இருந்தார்.

கலைஞர் சட்டமன்றத்தில் இல்லை. மேலவையில் அவர் இருக்கிறார் என்பதற்காகவே மேலவையைக் கலைத்தார் எம்.ஜி.ஆர்.

‘எம்.ஜி.ஆர். ஆட்சியின் நிர்வாகம் குலைந்துவிட்டது’ என்று கலைஞர் ஒரு பரபரப்புக் கடிதத்தைக் காட்டினார். 1986 பிப்.2ல் உள்துறை செயலாளர் எழுதிய கடிதம்தான் அது! அதை மே 22 ஆம் தேதி கலைஞர் வெளிப்படுத்தினார். அந்தக் கடிதத்தில் இடமாற்றங்கள், நியமனங்கள், நிதி உதவிகளுக்கு எம்.ஜி.ஆரின் சிபாரிசு கையெழுத்துடன் சில கடிதங்கள் உலா வருகின்றன. இவை, ‘போர்ஜரி’ கையெழுத்தாகும். என்று பொது இலாகா அதிகாரிகளை அவர் எச்சரித்து இருந்தார்.

1986 நவ.17ல் கலைஞர் கழகச் செயற்குழுவினைக் கூட்டினார். புதிய கல்விக்கொள்கையின் மூலம் இந்தி பரப்பப்படுவதை எதிர்த்துப் போராட்டம்அறிவிக்கப்பட்டது. பேராசிரியர் அரசியல் சட்டத்தின் 17-வது பிரிவைக் கொளுத்தினார். 301 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

அரசியல் சட்ட எரிப்புக்காகச் சட்டமன்ற உறுப்பினர்களான பேராசிரியர், சு.பாலன், அ.செல்வராசன், ப.பொன்னுரங்கம், பரிதி. இளம்வழுதி, கோவை மு.இராமநாதன், இராசின்னசாமி ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன. இதற்காகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கலைஞர் 09.12.1986ல் வள்ளுவர் கோட்டத்தின் அருகில் அரசியல் சட்டத்திற்குத் தீ வைத்துப் பொசுக்கினார். 1986ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் 20,068 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இச்சிறைவாசத்தின்போதுதான் கலைஞருக்கு கைதி உடை அணிவிக்கப்பட்டது.

காவல் துறை கலைஞரை விடுதலை செய்யக்கோரி தீக்குளிப்புகள், நஞ்சருந்தியோர், காவல் துறை தாக்குதல்கள், சிறைக் கோட்டங்களில், கலைஞருக்கு கைதி உடை என்று கேள்விப்பட்டவுடன் என இப்படி 15 கழகத் தோழர்கள் தமது இன்னுயிரை இழந்தனர்.

இப்படி நாடெங்கும் பதற்ற நிலை நிலவியது. எம்.ஜி.ஆர் அரசு பயந்தது. தண்டனைக் காலம் முடிவதற்குள் 02.02.1987 காலை 11.05 மணிக்கு கலைஞர் திடீரென்று விடுதலை செய்யப்பட்டார். 1987 ஜூன் மூன்றாம் வாரத்தின் தொடக்கத்திலேயே எம்.ஜி.ஆருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. டிச.24 கிறிஸ்துமஸ் நள்ளிரவு -அதாவது, 25 ஆம் தேதி இரவு 1:00 மணிக்கு, அவருக்கு தூக்கத்திலேயே நெஞ்சுவலி ஏற்பட்டது. மூன்று மணிக்கு அவர் மரணம் அடைந்தார். அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு 5:45 மணிக்கு வெளியிடப்பட்டது எம்.ஜி.ஆர் மறைவுச் செய்தி அறிந்தவுடன் ஆர்க்காடு வீராசாமி, டி.ஆர் பாலு ஆகியோரோடு கலைஞர் இராமாவரம் இல்லம் சென்று தமது அஞ்சலியைச் செலுத்தினார். மிக அருமையான இரங்கல் குறிப்பை எழுதினார். அதில் ஒரு பகுதியை மட்டும் இங்கே தருகின்றோம்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

“என் சிந்தைக்கினிய நண்பர், செல்வாக்கு மிக்க முதலமைச்சர் குறுகிய காலத்தில் ஒரு கட்சியை உருவாக்கி, அதனை ஆளுங்கட்சியாக்கிய ஆற்றல் படைத்தவரின் இழப்பைக் கேட்டு இந்த நாடே துயரத்தில் ஆழ்ந்து இருக்கிறது.

அவரது மறைவால் கண்ணீர் வடிக்கும் இந்த நேரத்தில், தமிழ்மக்கள் அனைவரும் அமைதியாகவும் கசப்புணர்வு காழ்ப்புணர்வுகளையும் தவிர்த்தும் ஒற்றுமையைக் கட்டிக் காப்பதற்கும் உறுதி மேற்கொள்ளுவோமாக!

எம்.ஜி.ஆர் மரணம் அடைந்த அன்று, அண்ணா சாலையில் இருந்த கலைஞர் சிலையை ஒருவன் உடைத்தெறிந்தான். போலீஸ் ஒன்றும் செய்யவில்லை. எம்.ஜி.ஆர் கட்சியின் தலைவர்கள் எவரும் அது குறித்து எந்த வித கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஆனால், தமிழக மக்கள் கலைஞரின் சகிப்புத் தன்மையைப் புரிந்துகொண்டனர்.

எம்.ஜி.ஆர் மரணத்திற்குப் பின் அதி.மு.க இரு அணிகளாகப் பிரிந்தன. தி.மு.கவுக்கு 12 சட்டமன்ற உறுப்பினர்களே இருந்தனர். ஜானகி அணியின் பின்னே ஆர்.எம்.வீயும் ஜெயலலிதா அணியின் பின்னே நாவலரும் இருந்தனர். பிரதமர் ராஜீவை சந்தித்து, ஜானகி எம்.ஜி.ஆர். ஆதரவினைக் கோரினார். இங்கே இ.காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து எந்த வித ஆதரவு சைகையும் ஜானகி எம்.ஜி.ஆருக்குக் கிடைக்கவில்லை. ஆதரவு தரக்கோரி ஆர்.எம்.வீ. கலைஞரின் வீட்டிற்கு வந்தார். கலைஞர் ஆதரவு தரவில்லை.

ஜானகி எம்.ஜி.ஆர் 07.01.1988ல் பதவியேற்றார். 30.01.1988ல் மாலை 6:00 மணிக்கு பதவியை இழந்தார். 28ஆம் தேதி, ஜானகி எம்.ஜி.ஆரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஜானகி எம்.ஜி.ஆர். அதிர்ச்சிக்கு ஆளானார்.

அதி.மு.க, எம்.ஜி.ஆர் மரணத்திற்குப் பிறகு அவர்கள் அணிகளில் யாரை அரியணையில் அமரவைப்பது என்கிற போட்டியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது. ஆனால், தி.மு.கழகம் அமைதியாகத் தனது அமைப்புகளுக்குரிய தேர்தலை நடத்திவந்தது.

1988 பிப்.1 ஆம் தேதி தி.மு.கழகத்தின் 8-வது தேர்தலில் 5-வது முறையாகக் கழகத் தலைவராகக் கலைஞர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்.15ல் கழக நிர்வாகக்குழு கூடியது. சில போராட்டங்களைக் கழகம் மேற்கொண்டது.

ஈழத்தில் இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளைக் கண்டனம் செய்து, கழகத்தினர் பிப்.20ல் கலைஞர் உட்பட உண்ணாநோன்பு மேற்கொண்டனர். பிப்.25ல் தாளடி சம்பாவைக் காப்பாற்ற தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் அறப்போர், மார்ச் 1ல் நெசவாளர்க்குப் பேரணி நடத்தப்பட்டது. பிரதமர் ராஜீவைப் பதவி விலகக் கோரி முழு அடைப்புக்குக் கழக ஆதரவு எனக் கலைஞர் போர்க்களத்திலேயே முகாமிட்டிருந்தார்.

ஆளுநர் ஆட்சியின்போது, கழகமும் கம்யூனிஸ்ட்டுகளும் இணைந்து பல போராட்டங்களை நடத்தின. காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்குத் திட்டமிட்டு, குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்தியது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பிரதமராக இருந்த ராஜீவ் 11 முறை தமிழ்நாட்டிற்கு வந்து சுற்றுப்பயணங்களை மேற்கொண்டார்.

1988 நவம்பருக்குள் இரண்டு முறை தி.மு.கழக நிர்வாகக்குழு கூடியது. அதில் தேசிய முன்னணி அமைப்பது குறித்தும் தமிழ் ஈழ மண்ணிலே தமிழ் இனத்தைக் கருவறுக்கத் துணைபோகும் இந்திய அமைதிப் படையின் அக்கிரமம் குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அக்டோபர் மாதம் முதலே தேர்தலுக்கான வேகம் தி.மு.க.வில் தோன்றிவிட்டது.

இதற்கிடையில் தேர்தலைத் தள்ளிவைக்கப்போவதாகச் செய்திகள் உலாவின. இதனால் 17.11.1988ல் கூடிய பொதுக்குழுவில், ‘தேர்தலைத் தள்ளிவைத்தால் போராட்டம் வெடிக்கும்’ என்று கலைஞர் தீர்மானம் நிறைவேற்றினார். எனினும் தேர்தல் நாள் அறிவிக்கப்படவில்லை.

ஆனால், தி.மு.க. தேர்தலின் அடிப்படை பணிகளைச் செய்துகொண்டே இருந்தது. தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. (ஜெ), அ.தி.மு.க. (ஜா) என்கிற கட்சிகள் தனித்தனியே தேர்தலில் போட்டியிடும் என உறுதியாகத் தெரிந்தது.

இக்கட்சிகளில் தி.மு.க. மட்டுமே தனது தோழமைக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட்டுக் கட்சி, மார்க்சிஸ்ட், அகில இந்திய முஸ்லிம் லீக், ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்டது. மற்ற கட்சிகளில் பெருங்குழப்பங்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் வரையும் நீடித்தன.

1989ஆம் ஆண்டு, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நடந்தது.

தேசிய முன்னணியின் தலைவர்களான வி.பி.சிங், அஜீத் சிங், என்.டி.ராமராவ், தேவிலால் ஆகியோர் தி.மு.க.வை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். இதற்கு முன்பாக, காங்கிரசுக்கு எதிராகத் தேசிய முன்னணி கட்டமைக்கப்பட்டது. கலைஞர் அதில் முக்கியப் பங்கை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. 151 தொகுதிகளில் வென்று பெரும் வெற்றியைப் பெற்றது. எந்த வள்ளுவர் கோட்டத்தை நிர்மாணித்து அதன் திறப்புவிழாவில் புறக்கணிக்கப்பட்டாரோ – அதே வள்ளுவர் கோட்டத்தில் முதல்வராகக் கலைஞர் பதவியேற்றுக்கொண்டார். பதவி ஏற்பு விழாவுக்கு என்.டி.ராமராவ், இ.கே. நாயனார், வி.பி.சிங், ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் வந்து இருந்தனர்.

சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல்வர் பொறுப்பைக் கலைஞர் ஏற்றார். ஒரு பாரம்பரியமுள்ள கொள்கைத் தாக்கமுள்ள ஒரு பண்பாட்டு அரசியல் இயக்கத்தின், கட்சியின் நெடும்பயணம் அதிகாரத்தோடு மீண்டும் தனது பயணத்தைத் தொடங்கியது.

1989-90ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை கலைஞர் 1989 மார்ச் 25ஆம் தேதியன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பேரவைத்தலைவர் தமிழ்க்குடிமகன் திருக்குறளை ஓதி அவை நிகழ்வுகளைத் தொடங்கினார். அப்போது, குமரி அனந்தன் பிரச்சினையைக் கிளப்பினார். சட்டமன்றத்தில் கலைஞரைத் தாக்கிய காட்சி நடப்பதற்கு முன்னால் குமரி அனந்தனும் ஜெயலலிதாவும் உரிமைப் பிரச்சினைகளை எழுப்பி இருந்தார்கள். மார்ச் 18 (1989) ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டதாகப் பேரவைத் தலைவர்க்குக் கடிதம் அனுப்பி இருக்கிறார் என்கிற செய்தி வெளியாகி உள்ளது. பிறகு, இந்தக் கடிதம் ஜெயலலிதாவால் வழங்கப்படவில்லை என்பதாகவும் கூறப்பட்டது. இதில் காவல் துறையினரின் தலையீடு உள்ளதாகவும், அதனால் ஜெயலலிதா பெரிதும் பாதிக்கப்பட்டார் என்பதாகவும் கூறப்பட்டது. இந்தக் கடிதம் பற்றியே உரிமைப் பிரச்சினையை ஒத்திவைப்புத் தீர்மானத்தை குமரி அனந்தனும் ஜெயலலிதாவும் எழுப்பினார்கள்.

ஆனால், பேரவைத்தலைவர் தமிழ்க்குடிமகன் உரிமைப் பிரச்சினையை அனுமதிக்க மறுத்துவிட்டார். மார்ச் 25 ஆம் தேதி, சட்டமன்ற நிரலின்படி நிதிநிலை அறிக்கையை முதல்வரும் நிதியமைச்சருமான கலைஞர் தாக்கல் செய்ய வேண்டும் என்று பேரவைத் தலைவர் கூறினார். அதேபோல தாக்கல் செய்யுமாறு கலைஞரை அழைத்தார். கலைஞர் நிதிநிலை அறிக்கையைப் படிக்கத் தொடங்குகிறார். அ.தி.மு.க. ஜெ. பிரிவினர் நிதிநிலை அறிக்கையைக் கலைஞரின் கரத்திலிருந்து பிடுங்க முயன்றனர். பிறகு, கிழித்து எறிந்தனர். வன்முறையில் இறங்கினர். அவையில் பலத்த அமளி ஏற்பட்டது. புத்தகங்களும் தாள்களும் வீசிக்கொள்ளப்பட்டன.

முதல்வர் கலைஞரைத் தாக்க முயன்றனர். ஜெயலலிதா சட்டமன்றத்தில் அரங்கேற்றிய நிகழ்ச்சிகள் அனைத்தும் நடவடிக்கை குறிப்புகளில் இடம்பெற்று இருக்கின்றன. எம்.ஜி.ஆர் மரணத்திற்குப் பிறகு, தான்தான் அவரின் வாரிசு என்று நிலைநாட்டிக்கொள்ள அதிகாரத்தில அமர ஜெயலலிதா ஆசை கொண்டார். அதனால், அமளியை உண்டாக்கினார்; தோற்றுப்போனார்.

நாடாளு மன்றத்திற்கான தேர்தல் 1989ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.கழக அணி தோல்வியைச் சந்தித்தது.

ஆனால், வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி ஆட்சிதான் அமைந்தது. பாரதீய ஜனதாவும் கம்யூனிஸ்ட்டுகளும் அந்த ஆட்சிக்கு ஆதரவு தந்தனர். 1989 டிச.2ஆம் தேதி பிரதமராகப் பொறுப்பேற்ற வி.பி.சிங் – 1990 நவ. 10ஆம் தேதி வரை பிரதமராக இருந்தார். தமிழகத்தில் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில்கூட தி.மு.க. வெற்றிபெற முடியவில்லை. இருப்பினும் வி.பி.சிங் அமைச்சரவையில் முரசொலி மாறன் ‘கேபினெட்’ அந்தஸ்துள்ள அமைச்சரானார்.

மண்டல் கமிஷன் பரிந்துரையை வி.பி.சிங் அரசு நடைமுறைப்படுத்த முயன்றபோது, பாபர் மசூதி பிரச்சினையைக் காரணம் காட்டி, பா.ஜ.க. அது அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால், ஆட்சி கவிழ்ந்தது. வி.பி.சிங் நம்பிக்கைத் தீர்மானத்தின்மீது ஆதரவாக 112 வாக்குகள்தான் பெற்றார். எதிர்ப்பாக, 346 வாக்குகள் பெற்றார். வி.பி. சிங் தனது விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதன்பிறகு, சந்திரசேகர் இந்தியாவின் 8ஆவது பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

ஆளுநரின் பரிந்துரை இல்லாமலேயே குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் 1991 ஜன.30ஆம் தேதி இரவு, தி.மு.க அரசைக் கலைத்தார். தி.மு.க. அரசு கலைக்கப்பட்டதற்கு முழுமுதற் காரணம் ஜெயலலிதாவே!

ஜெயலலிதாவின் பதவிப் பித்து, சட்டமன்றத் தேர்தலை எதிர் நோக்கி இருந்தது. தேர்தல் நாள் 1991 மே 26ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டது. மே 21ஆம் தேதி, ராஜீவ் காந்தி திருப்பெரும்புதூருக்குத் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தார். பொதுக்கூட்டத்தின் வரவேற்பு நிகழ்வின்போது, இரவு அவர் படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்பட்டதற்குக் காரணம், தி.மு.க.தான் எனும் வதந்தி, ஒரே விதமாகத் திருத்தணி முதல் கன்னியாகுமரி வரை பரப்பப்பட்டது.

கழகத் தோழர்கள் தாக்கப்பட்டனர். கழகத் தேர்தல் அலுவலகங்கள் தீயிடப்பட்டன. கழகத்தவர் சொத்துகள் அடித்து நொறுக்கப்பட்ட ‘முரசொலி’ அலுவலகமும் கடுமையான தாக்குதலுக்கு இலக்காயிற்று.

ராஜீவின் படுகொலை தி.மு.க.வின் தேர்தல் வெற்றியைப் பாதிக்கும் என்பது நன்றாகத் தெரிந்தது. இருப்பினும் கலைஞர் துணிவாகத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். முதலில் சட்டமன்றத் தேர்தல் மே 26ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டது.

தேர்தல் நடந்தது. கலைஞர் மட்டுமே துறைமுகத் தொகுதியிலிருந்து ஒற்றை உறுப்பினராகத் தி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க.வுக்கு வழக்கமாகக் கிடைக்கவேண்டிய வாக்குகளைவிட 12 சதவிகிதம் குறைந்தது. தி.மு.க. மொத்த வாக்குகள் என 75 இலட்சத்தைப் பெற்றது.

ஜெயலலிதா 1991 ஜூனில் முதல்வரானார். ஆம்; தமிழகம் மீண்டும் இருட்டில் தள்ளப்பட்டுவிட்டது. கலைஞர் தோற்றுவிட்டார் என்பதை ஒப்புக்கொண்டார். ‘நாம் வெற்றிகளை இழந்தோம்; வெற்றிக்கான களங்களை இழக்கவில்லை’ எனக் கழகத் தோழர்கள் நெஞ்சுயர்த்தி கலைஞரின் பின்னே தொடர்ந்தனர்.

முதன்முறை கலைஞர் ஈழத்தமிழர்களுக்காகச் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். இரண்டாம் முறையோ, தாய்நாட்டுத் தமிழர்களின் அச்சத்திற்கு ஆட்பட்டு, அவர்களின் ‘சுதேசியமான”இயக்கத்தைப் புறக்கணித்துவிட்டார்களே என்பதற்காகப் பதவியிலிருந்து விலகினார். ஆக, அவர் இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர். பொறுப்பிலிருந்து விலகி இருக்கிறார்.

தேர்தலின்போதே எழும்பூர் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் மரணம் அடைந்துவிட்டார். அந்தத் தொகுதி ‘காலியாக இருந்தது. கலைஞர் துறைமுகம் தொகுதியிலிருந்து விலகியதற்குப் பிறகு, அதுவும் ‘காலி ஆயிற்று. இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. எழும்பூரிலிருந்து பரிதிஇளம்வழுதியும், துறைமுகத்திலிருந்து அ.செல்வராசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

1991ல் தி.மு.க.வுக்குச் சட்டமன்றத்தில் இப்படி வெற்றிபெற்ற இரண்டு உறுப்பினர்களே இடம்பெற்று இருந்தனர். எதிர்க்கட்சி என ஒரு கட்சியைச் செயல்படுத்த முடியாத அளவுக்கு தேர்தல் முடிவுகள் ஏற்படுத்திவிட்டன.

அப்போது, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்த கருத்து என்ன தெரியுமா? பெரிய ஜனநாயகவாதியைப் போல, ‘எதிர்க்கட்சிகள் இல்லாத நிலையைப் பத்திரிகைகள் போக்க வேண்டும்’ என்று கூறினார்.

தி.மு.க சட்டமன்றத்தில் இரண்டு இடங்களிலும், நாடாளுமன்றத்தில் ஓரிடத்தில்கூட இல்லாத நிலை 1991ல் ஏற்பட்டு இருந்தது.

கலைஞர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாமலேயே 1991-1996 கூட்டத்தில் கட்சியை இயக்கினார். பரிதி.இளம்வழுதி ஒற்றைக் குரல் மனிதராகச் செயல்பட்டார். சட்டமன்றத்திற்கு வெளியே கலைஞர், உள்ளே பரிதி இளம்வழுதி என்று இருவரும் பணியாற்றினர்.

கலைஞர் சட்டமன்றத்தில் இல்லாத நிலையில் (1991-1996) 1992ஆம் ஆண்டு ஏப்ரலில் இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் அங்கே நடைபெற்றன. (1) கழகப் பேச்சாளர் வெற்றிகொண்டான் மீது உரிமைப் பிரச்சினை கொண்டுவந்தார்கள். (2) ‘முரசொலி’ ஆசிரியர் செல்வத்தை சட்டமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த ஜனநாயக விரோதப் போக்குகளைக் கலைஞர் வெளியிலிருந்தே எதிர்கொண்டார்.

‘முரசொலி’யின் ஆசிரியர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை அப்போது அவை முன்னவராக இருந்த நாவலர் இரா.நெடுஞ்செழியன் முன்மொழிந்தார். அதற்கான தீர்ப்பைப் பேரவைத் தலைவர் 1992 ஏப்ரல் 27ஆம் தேதி வழங்கினார்.

இது குறித்து முரசொலி செல்வம் விளக்கம் அளித்து, பேரவைத் தலைவருக்குக் கடிதம் எழுதினார். அதில், அவர் இந்தத் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவிருப்பதால், 27.04.1992ல் பேரவையில் ஆஜராக முடியாது. இதைப் பேரவையை அவமதித்ததாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும், பேரவைத் தலைவர் முரசொலி செல்வத்தையும் கோவை மாலைமுரசு ஆசிரியர் சுந்தரையும் ஆஜர்படுத்துமாறு காவல் துறைக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார். இதன்பிறகு, முரசொலி செல்வம் சட்டமன்றத்தில் ஆஜர் ஆனார்.

இப்படி ஜெயலலிதா ‘ஜனநாயக சர்வாதிகாரியாக’த் தன்னை வெளிப்படுத்திக்கொண்டார்.

தி.மு.க. இவற்றையெல்லாம் சந்தித்துக்கொண்டே முன்னேறியது. 1992 டிச.6ஆம் தேதி, இந்திய வரலாற்றில் ஒரு மோசமான நாள். பாபர் மசூதியை இடிப்பதற்காக – ‘கரசேவை’ என்ற பெயரால் ஒரு நடவடிக்கையை அறிவித்து, விஸ்வ இந்து பரிஷத்தினர் பணியைத் தொடங்கினர். அப்போது, பிரதமராக நரசிம்ம ராவ் இருந்தார்.

ஜெயலலிதா கரசேவையை ஆதரித்தார். மசூதியும் அப்படியே இருக்க வேண்டும் என்றார். எங்கே பேசினார். ஜெயலலிதா? ஒருமைப்பாட்டுக் குழுவில்! இதனைக் கலைஞர் அம்பலப்படுத்தினார்.

ஜெயலலிதா – காங்கிரஸ் உறவு முறிந்தது. பா.ஜ.க தலைவர்களோடு ஜெயலலிதாவின் சந்திப்பு நிகழ்ந்தது. ஒருமைப்பாட்டுக் குழுவில் ஜெ. – பேச்சு குறித்து வி.எச்.பி தலைவர்கள் பாராட்டித் தந்தி அனுப்பினர். இப்படி பாபர் மசூதி இடிப்பிற்கு ஆதரவு அளித்தவர்தான் ஜெயலலிதா.

1992, டிசம்பர் 6 மாலை 5:00 மணிக்குள் பாபர் மசூதி இடிக்கப்பட்டு விட்டது. மாநில அரசு பாதுகாப்போடு நடைபெற்றது. மத்திய அரசு வேடிக்கை பார்த்தது.

1993 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கழகப் பொதுக்குழு, கோவையில் கழகத்தின் 7-வது மாநில மாநாடு எனக் கழகப் பணிகள் தொய்வில்லாமல் நடந்துகொண்டு இருந்தன. மாநில மாநாடு வெற்றி மாநாடாக அமைந்தது. இதே காலகட்டத்தில், அன்பில் மரணமும் நிகழ்ந்தது. 1993 அக்டோபரில், கழகத்தின் 4-வது பிளவு உருவாயிற்று. 1994 மே மாதம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் பரப்புரையில் இந்தப் பிளவினைக் கடுமையாக எதிர்த்துப் போராடினார் கலைஞர், சட்டத்துறைப் போராட்டமும் நடந்தது. தி.மு.க. அதனையும் கடந்தது.

தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் என்று ஏதும் இல்லாததால் முதல்வர் ஜெயலலிதா அளவுக்கு மேல் ஆடினார். கரசேவை என்று பா.ஜ.க.வை ஆதரித்தார். காங்கிரஸ் பாபர் மசூதி இடிப்பின்போது நடந்துகொண்ட முறைகளையும் விமர்சனம் செய்தார். பா.ம.க.வுடன் இந்திரா காங்கிரஸ் உறவு வைத்துள்ளதையும் சாடினார், ஜெயலலிதா. தஞ்சைப் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி தமிழகத்தில் இருந்து வரும் 69 சதவிகித இடஒதுக்கீடு நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, சென்னை மாநகரில் 23.04.1994ல் சமூக நீதிப் பேரணி நடத்தப்பட்டது. பேரணி ஓர் இடத்தைக் கடக்க ஐந்து மணி நேரமாயிற்று.

பேரணியில் தமிழகம் முழுவதும் திரண்டுவந்து கலந்துகொண்டனர். பேரணியின் முடிவில் கடற்கரையில் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைஞர், பேராசிரியர், கழக முன்னணியினர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

ஜெயலலிதா ஆட்சி (1991-96) யின்போது, தமிழ காங்கிரஸ் தலைவராக வாழப்பாடி ராமமூர்த்தி இருந்தார். அவர் உட்பட 7 கட்சித் தலைவர்கள் 38 ஊழல் புகார் அடங்கிய மகஜர் ஒன்றை ஆளுநர் சென்னா ரெட்டியிடம் வழங்கினர். ஜெயலலிதா முதல் கட்ட ஆட்சியில் ஊழலில் திளைத்தார். இந்த ஊழல் பட்டியல் பிரதமர் நரசிம்மராவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

1994 மே 12-ஆம் தேதி, கழகப் பொருளாளர் சாதிக்பாட்சா இயற்கை எய்தினார்.

1996 செப்-அக். மாதங்களில் மேயர் தேர்தல் நடைபெற்றது. மு.க.ஸ்டாலின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல மாநகராட்சிகளில் நமது தோழர்களும் கூட்டணிக் கட்சிகளும் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றனர்.

தி.மு.க. 8 ஆவது மாநில மாநாடு 1996ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாகவே நடைபெற வேண்டும் என்று கழகம் கருதியது. இம்மாநாடு நடைபெறுகிறபோது… சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் கழகத்திற்குரிய எண்ணிக்கை பலமில்லை. ஆனால், மாநாடு நடத்த தேர்வுசெய்த நிலத்தின் பரப்பளவு, நான்கரை இலட்சம் சதுர அடி மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் கே.என்.நேரு – அவர்தான் மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவர்.

மூன்று நாள்கள் நடந்த மாநாடு அது! மாநாட்டுப் பந்தல் அமைப்பு வேலைகள் நடந்தபோது, கலைஞர் 7 முறை வந்து பார்வையிட்டுச் சென்றார். இந்த மாநாட்டின் மக்கள் திரள் தன்னெழுச்சி மிக்கதாய் இருந்தது.

தேர்தல் ஆணையம் மார்ச் 19ஆம் தேதி, தேர்தல் தேதிகளை அறிவித்துவிட்டது. 1996 தேர்தல் சட்டமன்ற, நாடாளுமன்றத்திற்கான தேர்தல், தமிழ்நாட்டில் ஏப்ரல் 7, மே 2. புதுவையில் ஏப்ரல் 27, நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் வாக்குப்பதிவு ஒரே சமயத்தில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.

233 இடங்களுக்குத் தேர்தல் நடந்தது. தி.மு.க. கூட்டணி 220 இடங்களில் வெற்றிபெற்றது. நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் முற்போக்கு கூட்டணியே 37 இடங்களிலும் வெற்றிபெற்றது. நான்காவது முறையாக கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். நாடாளுமன்றத் தேர்தலில் எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருக்கிற நிலைமைகளைத் தமிழ்நாடு இல்லத்தில் விவாதித்தனர். கலைஞரை அங்கே தலைவர்கள் சந்தித்து உரையாடினர்.

பொறுப்பேற்றுக்கொள்ளும்படி வி.பி.சிங்கை தலைவர்கள் கோரினர். அவர் மறுத்துவிட்டார். தி.மு.க. அணியினர் தேவகவுடாவை முடிவு செய்தனர். இதனைக் குடியரசுத்தலைவர் சங்கர்தயாள் சர்மாவிடம் தெரிவித்தனர். காங்கிரசும் நிபந்தனையற்ற ஆதரவைத் தருவதாகக் கடிதம் வழங்கியது. ஆனால், குடியரசுத்தலைவரோ வாஜ்பாய் அவர்களை பிரதமராகப் பதவியேற்க அழைப்பு விடுத்தார். 16.05.1996ல் வாஜ்பாய் 11ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றார்.

ஆனால், இந்த அமைச்சரவை பெரும்பான்மை இல்லாததால், 13 நான்களில் பதவி விலகியது. அதன்பிறகு பிரதமர்களாக ஐக்கிய முன்னணித தலைவர் தேவகவுடா பதவி ஏற்றார். இவரும் காங்கிரஸ் ஆதரவைத் திரும்பப் பெற்றதால் பதவியை இழந்தார். பின்னர், ஐ.கே.குஜ்ரால் பிரதமரானார். இந்த அமைச்சரவையில் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருந்தனர்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

கலைஞரின் 1996 2001ஆம் ஆண்டு ஆட்சி பொற்கால ஆட்சியாகத் திகழ்ந்தது. ஓயாமல் உழைத்தார். சாதனைகளைக் குவித்தார்.

1999ல் ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு வாஜ்பாய் பதவியை இழந்தார். அக்டோபர் மாதம் கழகம் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தது. வாஜ்பாய் அமைச்சரவையை அமைத்தார். கழகம் ஒன்றிய அமைச்சரவையில் பங்கேற்றது.

2001ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே தனது வேலைகளைக் காட்டத் தொடங்கிவிட்டார். 2001 ஜூன் 29ஆம் தேதி நள்ளிரவில், கலைஞரை ஜெயலலிதா ஆட்சி கைதுசெய்தது, தமிழ்நாடு அதிர்ச்சிக்கு ஆளாகியது. முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோர் போலீஸ் வண்டியைப் பின்பற்றினர்.

தமிழ்நாடு கொந்தளித்தது. ஏடுகள் அனைத்தும் கண்டித்தன. அறிஞர்கள் கூட்டாகக் கண்டன அறிக்கை தயாரித்து, பொதுவெளியில் வெளியிட்டனர். ஜெயலலிதாவின் முழு சர்வதிகாரம் வெளிப்பட்டது.

ஜெயலலிதா முதலமைச்சராக இருப்பதால், அவர் மீதுள்ள வழக்குகள் வேறு மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் 08.02.2003 அன்று கழகப் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மனுத் தாக்கல் செய்தார். 17.02.2003 தேதியும் மேலும் ஒரு மனுவினைத் தாக்கல் செய்தார்.

முரசொலி மாறன் 2003 ஆம் ஆண்டு நவ.23ஆம் தேதி இரவு 7.00 மணியளவில் மரணம் அடைந்தார். அதுபோது, கலைஞர் அருகேயிருந்தார். படிப்பதும் எழுதுவதும் அவரின் முக்கிய இலட்சியமாகக் கொண்டு இருந்தார். அறிவார்ந்தவர். அவரின் இறப்பு கழகத்தில் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிட்டது.

அவர் மக்களவைக்கு ஐந்து முறையும் மாநிலங்கள் அவைக்கு மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 7 ஆண்டுகள் அமைச்சராக இருந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் 24.11.2003ல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

அவர் எழுதிய ‘ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?’- ‘திராவிட இயக்க வரலாறு’ முதல் பாகம், மாநில சுயாட்சி ஆகிய நூல்கள் இன்றும் நம்மோடு உறவாடி, உரையாடிக்கொண்டிருக்கின்றன.

2004 ஆம் ஆண்டு, தி.மு.கழகம் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தது. தி.மு.க. இடம்பெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 40-க்கு 40 இடங்களில் வெற்றிபெற்றது. இக்கூட்டணியில் காங்கிரஸ், ம.தி. மு.க, பா.ம.க, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தி.மு.க.வோடு அங்கம் வகித்தன.

2006 சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. தி.மு.க. தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. 98 இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. எனினும் கூட்டணிக் கட்சிகளின் பலத்தினால் கலைஞர் 5ஆவது முறையாக முதல்வரானார். ஜெயலலிதா இதை ‘மைனாரிட்டி அரசு என்று விமர்சனம் செய்தார். ஆனாலும் கலைஞர் தமது ஐந்தாண்டுக் காலத்தை நிறைவுசெய்தார். இது, அவருக்கு இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தியது.

2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதா மீண்டும் முதல்வரானார். ஆட்சியில் அவர்மேல் இருந்த ஊழல் வழக்குகளினால் பல குழப்பங்கள் அடிக்கடி நிகழ்ந்தன. பன்னீர் செல்வம் இரண்டு முறையும், எடப்பாடி கடைசியாக ஒரு முறையும் முதல்வர்கள் ஆனார்கள். இவர்கள், மக்கள் முன் நிறுத்தப்படாத முதல்வர்கள் ஆவர்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பவழக்காரத் தெரு முதல் பவள விழா வரை!

2011 -2016-க்குப் பிறகும் மக்கள் ஜெயலலிதாவைத் தேர்ந்தெடுத்தனர். மீண்டும் அவர் முதல்வரானார். 2016-2021 காலகட்டத்தில் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். அதே நேரத்தில், ஸ்டாலின் 2017ஆம் ஆண்டு, கழகத்தின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். கலைஞரின் உடல்நிலை குன்றியதன் காரணமாக, இந்த முடிவு எடுக்கப்பட்டது.

‘முரசொலி’ பொன்விழா மலர் தயாரித்து அச்சடிக்க இருக்கிற அட்டைகளை அவர் பார்வைக்கு வைத்தபோது, மிகுந்த ஆர்வத்தோடு பார்த்துப் பேசி, விவாதித்து, அவற்றுக்கு ஒப்புதல் அளித்தார் கலைஞர். ஆனால், எம்மால் விழா மலர் (2017) முற்றுப்பெற்று, அவரிடம் ‘நாங்கள்’ காட்டியபோது, வெறும் புன்முறுவல் மட்டுமே பூக்க முடிந்தது. ஆம் இயற்கை அவர்மீது தன் கரங்களை நீட்டத் தொடங்கிவிட்டது என்பதை நாம் உணர்ந்தோம்.

கழகத் தலைவர் கலைஞர் அவர்கள், 07.08.2018 அன்று இயற்கை எய்தினார். முரசொலி மாறன் மரணமுற்றபோது இரங்கல் தலையங்கத்தை ‘சின்னகுத்தூசி; எழுதினார். கழகத் தலைவர் கலைஞரை இயற்கை அழைத்துக்கொண்டது. அன்று, முரசொலியில் வெளியான இரங்கல் தலையங்கத்தை நாம் எழுதினோம்.

‘சாதலின் இன்னாதது’ இல்லை என்று பேசுகிற வள்ளுவர். நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு என்றும் கூறுகிறார். இன்னாததைப் பெருமை என்று சொல்வானேன்? ஓர் உரையாசிரியர் எழுதுகிறார், உலகம் தோன்றிய நாள் முதல் இறந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். இருப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆகவே, அது பெருமை பெற்றது’ என்கிறார்.

தமிழினத்திற்கு அந்தப் பெருமை பேரிழப்பை ஏற்படுத்திவிட்டதே! ஆம், கலைஞரை இயற்கை பணி செய்யாமல் தடை செய்துவிட்டது.

மு.க.ஸ்டாலின் கழகத்தலைவர் ஆனார். 2019ஆம் ஆண்டு, ஸ்டாலின் தலைமையின்கீழ், அமைக்கப்பட்ட கழகக் கூட்டணி 39 இடங்களைப் பெற்றது. இந்த வெற்றி,எதிர்வரும் தமிழக சட்டமன்றக் கழக வெற்றிக்குக் கட்டியங் கூறுவதாக அமைந்து இருந்தது.

2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்குக் வெற்றியைப் பெற்றது. தி.மு.க. கூட்டணி 159 கூட்டணி மக்களின் பேராதரவுடன் மாபெரும் இடங்களில் வென்றது. அதில், தி.மு.கழகம் 133 தொகுதிகளை பெற்றது. இது தனிப்பெரும்பான்மையானதாகும்.

முதன் முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வரானார். சாதனைகள் குவிந்துகொண்டிருக்கின்றன. 2022 டிசம்பரில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானார் ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலேயே அவர் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தார். இதிலும் 40-க்கும் 40 இடங்களில் கழகக் கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டியது.

காஞ்சியில் பவள விழா நிறைவுற்ற மறுநாள், 29.09.2024 அன்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பதவி ஏற்றார். நமது நெடும் பயணத்தில் முழுமையாகப் பங்கேற்றுள்ள அவருக்கு. நமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கழகம் 75 ஆண்டை நிறைவுசெய்துவிட்டு, 76 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டது. அதன் பலம் கட்சிரீதியில் அறிஞர் அண்ணா, கலைஞர் காலத்து நிலையினும் மிக வலுவாக இப்போது அமைந்திருக்கிறது. ஆங்காங்கே கழகத்தின் பொது உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறுகின்ற செய்திகள் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இது, கீழ் மண்ணை மேலுக்குக் கொண்டுவரும் முயற்சியினைப் போன்றது.

அறிஞர் அண்ணா காலத்தில், நம்மிடம் கழகத்தையும் ஆட்சியையும் அவர் ஒப்படைத்துச் சென்றார். இப்போதும் கழகம் வலுவாக இருக்கிறது. ஆட்சியில் நாம் இருக்கின்றோம். நாடாளுமன்ற இரு அவைகளிலும் பலம் வாய்ந்த கட்சியாக இருக்கிறோம். இதைவிட கழகத்தின் மாட்சிக்கு வேறென்ன அடையாளத்தை எடுத்துச்சொல்லிவிட முடியும்?

அறிஞர் அண்ணாவும் கலைஞரும் வலியுறுத்திய மாநில சுயாட்சி கொள்கையை எடுத்துரைக்க, அவர்கள் சில படிகளை நமக்கு அமைத்துக்முகத்தின் நூற்றாண்டைக் கொடுத்திருக்கிறார்கள். அதை மேலும் சிறக்கச் செய்யும் விதமாக, 2024 செப். 28ஆம் தேதி, காஞ்சியில் நடைபெற்ற கழகப் பவள விழா நிறைவு கூட்டத்தில் மாநில சுயாட்சி தொடர்பாக, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறார். “தி.மு.கழகத்தின் நூற்றாண்டைக் கடப்பதற்குள் மாநில சுயாட்சியை வென்றெடுக்க உறுதி என்று அறிவித்திருக்கிறார். காஞ்சியில் உள்ள அறிஞர் அண்ணா நினைவகத்தில் உள்ள பார்வையாளர் குறிப்பிலும் மாநில சுயாட்சியைப் பெறுவது தொடர்பாகக் குறிப்பிட்டு, கையெழுத்திட்டிருக்கிறார்.

அதற்கான போர்க்குரலைக் கழகத் தலைவர் எழுப்பியிருக்கிறார். அதை அகில இந்திய அளவில் வடிவம் பெற நாம் பணியாற்ற வேண்டும் என்பதே இந்தப் பவள விழா நிறைவு நேரத்தில் எமது பேரவா ஆகும். இப்பிரகடனத்தை நிறைவேற்ற கழகத் தலைவருக்கு அனைவரும் துணை நிற்போம்.

மேலும், தி.மு.க. ஒரு பண்பாட்டு அரசியல் இயக்கத்தின் அடையாளம். அதன் பயணம் நெடும் பயணமாகும். அதைத்தான் கட்டுரையின் தொடக்கத்தில், ‘திராவிட இயக்கவியல்’ எனக் குறிப்பிட்டிருந்தோம். அது தொடர்ந்துகொண்டே இருக்கும். இதுவன்றி, அதன் அரசியல் செயல்பாட்டில் அதற்குரிய பணிகளை நிகழ்த்திக்கொண்டே தி.மு.க. முன்னேறும். அதை, தலைவர் ஸ்டாலின் இப்போது நிறைவேற்றி வருகிறார்! அவர் வாழ்க, வாழ்கவெனக் கழகப் பவள விழா நிறைவு ஆண்டில் வாழ்த்துகின்றோம்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழா துஞற்று பவர் -திருக்குறள் (620)

MUST READ