நெல்லை டவுன் பகுதியில், சமூக வலைதளங்களில் `ரீல்ஸ்’ வெளியிடுவதற்காக அரிவாள்களுடன் வீடியோ எடுத்த 4 பேரை டவுன் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஊருக்கு வெளியே உள்ள ஒரு கோயிலுக்கு பின்புறம் சென்றுள்ளனர். அங்கு கைகளில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்துக்கொண்டு, தங்களை பெரிய ரவுடிகள் போல சித்தரித்து வீடியோ எடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், ஆயுதங்களை சுழற்றிக்கொண்டு உற்சாகமாக கத்திக்கொண்டே இந்த வீடியோவை பதிவு செய்துள்ளனர்.
பின்னர், பதிவு செய்த வீடியோவை சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக பதிவேற்றியுள்ளனர். சமூக வலைதளங்களில் ஆயுதங்களுடன் கூடிய இந்த வீடியோ வேகமாக பரவியது. இது நெல்லை டவுன் போலீசாரின் கவனத்திற்குச் சென்றது. உடனடியாக செயல்பட்ட போலீசார், வீடியோவில் இருந்த இளைஞர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையது டவுன், சிஎன் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் அருண் (35), சாலியர் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் முருகராஜ் (32), பகவத்சிங் தெருவைச் சேர்ந்த இசக்கிபாலாஜி மகன் தினேஷ் (24), கீழத்தடி வீரன் கோவில் தெருவைச் சேர்ந்த மணி ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.



