தலைவர் 173 படத்தின் புதிய இயக்குனர் மற்றும் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசனின் தயாரிப்பில் புதிய படம் ஒன்று உருவாகப் போவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது. அதன்படி தற்காலிகமாக ‘தலைவர் 173’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சுந்தர்.சி இயக்கப் போவதாகவும், இப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் பிறகு சில நாட்களிலேயே இந்த படத்திலிருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிவித்தார். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ‘தலைவர் 173’ படத்தின் புதிய இயக்குனர் யாராக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்க தொடங்கியது. அதன்படி ஆர்.ஜே. பாலாஜி, கார்த்திக் சுப்பராஜ், தனுஷ் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில் தான் சமீபத்தில் ‘பார்க்கிங்’ படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தலைவர் 173 படத்தை இயக்க வாய்ப்பிருப்பதாகவும் இது தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் கசிந்தது.
தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த படமானது கல்லூரி பின்னணியில் உருவாக இருக்கிறது எனவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2026 மார்ச் மாதத்தில் தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மற்ற தகவல்களும் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


