திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட முடியாது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு அருகே உள்ளது தீபத் தூண் அல்ல சர்வே தூண்தான். திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப நாளன்று உச்சி பிள்ளையார் அருகே தீபம் ஏற்றுவதுதான் வழக்கம் என்றும் ஆனால் வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் தீபம் ஏற்ற அனுமதி கோரி மதுரையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சியில் உள்ள விளக்குத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சொத்து உரிமை சார்ந்தது என்பதால் உரிமையியல் வழக்கு மூலமே தீர்வு காண முடியும் என்று கோயில் நிர்வாகம் தரப்பில் முறையிடப்பட்டிருந்தது.
இதேபோன்று தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எதிர்மனுதாரர்களுக்கு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, மேல்முறையீட்டு வழக்கை இன்று ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இன்றைய விசாரணையில் அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்,
திருப்பரங்குன்றம் 74 ஆண்டுகள் அமைதியாக இருந்த நிலையில் 1994 ஆம் ஆண்டில் இருந்துதான் தீபம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது. தீபம் ஏற்றுவது குறித்தும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. திருப்பரங்குன்றம் தீப வழக்கு தொடர்பாக 2014 ஆம் ஆண்டுஉச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்ற வேண்டும் என விரிவான தீர்ப்புகள் வந்துள்ளன.
சிக்கந்தர் தர்காவை இடமாற்றம் செய்ய வேண்டுமென சில இந்து அமைப்புகள் நோட்டீஸ் வழங்கினர். அதனால், மனுதாரர் உள்நோக்கத்துடன் வழக்கை தாக்கல் செய்துள்ளாா். இந்து முன்னணி என்ன சொல்லி உள்ளதோ அதையும் மனுதாரரும் தெரிவித்துள்ளாா் என்று திடமாக தெரிவித்தது.
திட்டமிட்டே திருப்பரங்குன்றம் மலை விவகாரம் பிரச்சனை பெரிதாக்கப்பட்டுள்ளது என்றும், மலை உச்சியில் உள்ளது தீபத்தூண் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை என்றும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
பொதுமக்கள் நலன் கருதி சில முடிவுகளை எடுக்கு சூழ்நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. மதநல்லிணக்கம், பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிலவும் பதட்ட நிலையை சீர்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தாா்.
அதேபோன்று, ஆகம விதிகளுக்கு எதிராக செயல்பட முடியாது என்றும் தீபம் எற்றுவது போன்ற விவகாரத்தில் ஆகம் விதிகளைதான் கடைபிடிக்க வேண்டும் என அரசு வாதாடியது.
தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடுவது தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கும். உச்சநீதிமன்றம் கூறியுள்ள அறிவுரைகளை நீதிபதிகள் பின்பற்ற வேண்டும். கோயில் வழிபாடுகள் தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனவும் நீதிமன்றத்தின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது எனவும் பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது என்றும் அரசு தரப்பில் மேற்கோள் காட்டப்பட்டது.
இருதரப்பினரும் அமைதியான வாழக்கூடிய சூழ்நிலையில் தேவையில்லாமல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கக் கூடாது. அதனால் இவ்வழக்கில் திருப்பரங்குன்றம் மலையில் மற்ற இடங்களில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கக் கூடாது என்ற வாதங்கள் அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது.
கோவில் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்,
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா அருகில் தீபம் எற்ற கோர தனி நபருக்கு உரிமையே கிடையாது. அப்படி தர்கா அருகே தீபம் ஏற்ற அனுமதித்தால் இதுபோன்ற பல வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் 1920 ஆம் ஆண்டு முதல் பிரச்சனைகள் தொடர்ந்து வருகின்றன. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு மின் இணைப்பைச் சரிவர வழங்காதது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி


