சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை 3° செல்சியஸ் வரை குறையலாம் எனவும், சில இடங்களில் லேசான மழை, பனிமூட்டம் ஏற்படும் என அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் குறையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில பகுதிகளில் லேசான மழை, அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக சென்னையில் காலையில் லேசான பனிமூட்டம் காணப்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தின் சில பகுதிகள், குறிப்பாக திருநெல்வேலி மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது. நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் லேசான மழை பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.
அடுத்த 7 நாட்களுக்கான முன்னறிவிப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாற்றம் காரணமாக,
டிசம்பர் 13, 14: தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும்.
டிசம்பர் 15: கடலோர தமிழகத்திலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை.
டிசம்பர் 16: கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 17: தென் தமிழகத்தின் சில பகுதிகளிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு.
டிசம்பர் 18, 19: தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், தமிழகம் முழுவதும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு
டிசம்பர் 13 முதல் 15 வரை குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றாலும், சில பகுதிகளில் சற்றே குறையக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பை விட 2–3 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த வெப்பநிலை பதிவாகலாம்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை
இன்று (13-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் ஏற்படலாம். அதிகபட்ச வெப்பநிலை 29° செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸ்.
நாளை (14-12-2025): இதேபோன்ற வானிலை தொடரும். பனிமூட்டம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
டிசம்பர் 13 முதல் 15 வரை தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35–45 கிலோ மீட்டர் வேகத்தில், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
இதனால், மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


