Homeசெய்திகள்தமிழ்நாடுபத்திரங்களில் பிழைத்திருத்தல் - கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ நடைமுறைகள் என்ன?

பத்திரங்களில் பிழைத்திருத்தல் – கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ நடைமுறைகள் என்ன?

-

- Advertisement -

கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய பிழைத்திருத்தல் பத்திரத்தின் சட்டப்பூர்வ நடைமுறைகள் குறித்து இங்கே காணலாம்.பத்திரங்களில் பிழைத்திருத்தல் - கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ நடைமுறைகள் என்ன?சொத்து தொடர்பான பத்திரங்களில் ஏற்படும் எழுத்து, வார்த்தை, அளவீடு உள்ளிட்ட பிழைகளை சரிசெய்ய பிழைத்திருத்தல் பத்திரம் (Rectification Deed) பயன்படுத்தப்படுகிறது. இது சட்டப்பூர்வமாகப் பிழைகளைத் திருத்துவதற்கான ஒரே வழியாகும்.

கிரயம், செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில், பவர், அடைமானம், விடுதலை, ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுக்கும் பிழைத்திருத்தல் பத்திரம் போட முடியும்.

we-r-hiring

பிழைத்திருத்தல் பத்திரம் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது:

  • சாதாரண பிழைத்திருத்தல்
  • உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல்

திசைகள், ஊர்ப் பெயர், கதவு எண், இனிஷியல், தந்தை பெயர் போன்றவை தவறாக எழுதப்பட்டால், உரிமை மாற்றம் ஏற்படாத நிலையில், அவை சாதாரண பிழைகள் ஆகக் கருதப்படும். பட்டா மற்றும் பத்திரத்தில் பெயர்கள் பொருந்தாமல் இருந்தால், சொத்து வாங்குவோர் தயங்குவதால், இத்தகைய பிழைகள் திருத்தப்படுகின்றன.

சர்வே எண், பட்டா எண், எல்லைகள், திசைகள், வரைபடம் (Map), மின் இணைப்பு எண், தெருப்பெயர் போன்ற பிழைகள் அனைத்தையும் சாதாரண பிழைத்திருத்தல் பத்திரம் மூலம் திருத்தலாம். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ரூ.100, மொத்த செலவு பொதுவாக ரூ.500-க்குள் முடியும்.

ஆனால் நில அளவு போன்ற பிழைகள் உரிமை மாற்றத்தை பாதிக்கும்போது, உதாரணமாக 2 ஏக்கர் 1 சென்ட் என்பதை 1 ஏக்கர் 2 சென்ட் என தவறாக குறிப்பிடப்பட்டால், அது உரிமை மாறும் பிழைத்திருத்தல் ஆகும். இத்தகைய பிழைகளைத் திருத்த, சரியான அளவுடன் அன்றைய சந்தை மதிப்பின் அடிப்படையில் கட்டணம் செலுத்த வேண்டும்.

ஏற்கனவே அதிக சதுரஅடி அல்லது நில அளவுக்கு முத்திரைத்தாள் கட்டணம் செலுத்தியிருந்தால், பின்னர் திருத்தும்போது அந்த தொகையை திரும்பப் பெற முடியாது.

சொத்தை விற்ற நபர் உயிருடன் இல்லாவிட்டால், அவருடைய வாரிசுகள் மூலம் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம். வாரிசுகள் இல்லாத நிலையில், இரண்டாம் அல்லது மூன்றாம் வாரிசுகள் வழியாக முயற்சி செய்யலாம். அதற்கும் வழியில்லை என்றால், நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படும்.

விற்பனையாளர் உயிருடன் இருந்தும் பிழைத்திருத்தல் செய்ய மறுத்தால், அதுவும் நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காண வேண்டும்.

சர்வே எண், விஸ்தீரணம், நீள–அகலம் போன்ற அனைத்தும் தவறாக இருந்தால், பிழைத்திருத்தல் பத்திரத்திற்கு பதிலாக புதிய கிரய பத்திரம் அவசியமாகும்.

பத்திரப் பதிவு செய்யப்பட்ட பிறகு, அமிலம், ஒயிட்னர், பேனா போன்றவற்றால் திருத்தம் செய்வது முற்றிலும் சட்டவிரோதம். பதிவு அலுவலக ஆவணங்களில் பழைய விவரங்களே செல்லுபடியாகும்.

மேலும், ஆவணங்களில் சொத்து விவரம் அல்லது சர்வே எண்ணில் அடித்தல்–திருத்தல் செய்யப்பட்டிருந்தால், இரு தரப்பினரின் சான்று கையொப்பம் (Attestation) அவசியம். அது இல்லையெனில், அந்த பதிவு நீதிமன்றத்தில் செல்லாது என தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, பத்திரங்களில் ஏற்படும் எந்தப் பிழையையும் சட்டப்பூர்வமாக சரிசெய்ய பிழைத்திருத்தல் பத்திரம் போடுவது மட்டுமே பாதுகாப்பான வழி என சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அஜித் பவாரின் மனைவி முதலமைச்சர் ஆவாரா?

MUST READ