திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும் சட்டப்பேரவைக்கு கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் நகர்வு வரவேற்கத்தக்கது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


ஓபிஎஸ் முதலமைச்சரை சந்தித்து பேசியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். இது மரியாதை நிமித்தமானது அல்ல. அதையும் தாண்டி வந்துவிட்டார்கள். இன்றைக்கு சட்டப்பேரவையில் ஓபிஎஸ் ஆதரவு அதிமுக எம்எல்ஏ ஐயப்பன், முதலமைச்சரை பாராட்டி பேசுகிறபோது ஓபிஎஸ் சிரித்தார். அப்போதே தெரிந்துவிட்டது அவர் எங்கே வரப் போகிறார் என்று. ஜனநாயக அரசியலை பொருத்தவரை என்ன என்ன ஆற்றல்கள் உள்ளதோ அவை கொள்கை ரீதியாக ஒருங்கிணைய வேண்டும். திராவிட சக்தியான ஓபிஎஸ் திமுக உடன் ஒருங்கிணைவது வரவேற்கத்தக்கது. இதற்காக இருவரையும் பாராட்ட வேண்டும்.
கடந்த மக்களவை தேர்தலின்போது, ஓபிஎஸ்க்கு ஒரே ஒரு இடத்தை மட்டும் கொடுத்து விட்டு, முடிந்தால் வெற்றி பெறுங்கள் என்று அவரை பாஜக தனிமைப்படுத்தியது. இன்றைக்கு ஸ்டாலின் அவருக்கு உரிய இடத்தை தரப் போகிறார் என்பதே பெரிய மகிழ்ச்சிகரமான செய்தியாகும். ஓபிஎஸ் மீது அரசியல் ரீதியாக பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், தென் மாவட்ட மக்கள் மத்தியில் அவர் மதிப்பிற்குரியவர். திமுகவை எதிர்த்து வெற்றி பெற்றவரை, திமுக ஆதரவாளராக மீண்டும் சட்டப்பேரவைக்கு கொண்டுவந்து, பாஜகவின் முகத்திரையை கிழித்த ஸ்டாலினின் அரசியல் நகர்வு வரவேற்கத்தக்கது.

30 ஆண்டுகளாக அரசியலில் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய ஓபிஎஸ்-ஐ சேர்க்கும் போது, அந்த கட்சிக்காரர்களே ஏற்றுக்கொள்வார்கள். ஒரு சிட்டிங் எம்.பிக்கு தேர்தலில் இடம் தர வேண்டும் என்பது மரபு. தாமரை சின்னத்தில் நிற்க மறுத்த காரணத்திற்காக ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு சீட் தர மறுத்தார்கள். ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிட மறுத்தார்கள். தங்களுடைய தனித்த அடையாளத்தை விட்டுத்தர மறுத்தவர்கள் தான், இன்றைக்கு தங்களுடைய தனித்த அடையாளத்தை காப்பாற்றி கொள்வதற்காக திமுக கூட்டணிக்கு வருகிறார்கள்.
அதிமுகவின் அடையாளமாக இருந்த அன்வர் ராஜா, கலைராஜன், தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி, முத்துச்சாமி, சேகர்பாபு போன்ற முக்கிய அதிமுக தலைவர்கள் வந்தபோது ஏற்றுக் கொண்டவர்கள், அதிமுகவில் முதலிடத்தில் இருந்த ஓபிஎஸ் திமுகவுக்கு வரும்போது கடுமையாக எதிர்ப்பு எழுகிறது. சுய மரியாதையை விட்டுத்தர தயாராக இல்லை என்றுதான் ஓபிஎஸ் என்டிஏ கூட்டணியில் இருந்து வெளியே வந்தார். அப்போதும் அவருடைய அரசியல் நடவடிக்கைகளை ஒடுக்கி வைத்தனர்.

ஓபிஎஸ்-ஐ பாஜக ஒதுக்க முயற்சித்தபோது, மற்றொரு திராவிட கட்சியான திமுக அவரை அரவணைப்பதற்கு காரணம் கலைஞர் அதிமுகவினரை எதிரியாக காட்டி வளர்க்கவில்லை என்பதுதான். சேகர்பாபு, திமுகவில் பெரிய பொறுப்புக்கு வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. திமுக மீது கடும் எதிர்ப்பை வெளிப் படுத்தியவர். இன்றைக்கு அறநிலையத்துறை அமைச்சராக ஆகி கிட்டத்தட்ட 8000 ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டு, ஆட்சிக்கு பெருமையை ஏற்படுத்தியுள்ளார்.
இரு கட்சிகளுக்கும் இடையே ஒன்னும் பெரிய கொள்கை வித்தியாசம் எல்லாம் கிடையாது. கட்டும் வேட்டியிலும், கொடியிலும் தான் வேற்றுமை இருந்தது. ஓபிஎஸ் திமுகவில் இணைகிறபோது பாசிச சக்திகள் எல்லாம் பலவீனமாகிறது. பிரேமலதா விஜயகாந்தை திமுக கூட்டணியில் சேர்ப்பதற்கு முக்கிய காரணம், விஜயகாந்தை மக்கள் அங்கீகரிக்கிறார்கள் என்பது அவருடைய மரணத்தின் போதே தெரிந்துவிட்டது. அப்போது அதை நாம் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான முகம் தான் பிரேமலதாவுக்கு ஒரு ராஜ்யசபா இடமும், எம்எல்ஏ சீட்டுகளும் வழங்கப்பட உள்ளன.

விசிகவை பொருத்தவரை நிறைய பொதுத்தொகுதிகள் கேட்பார்கள். அவர்களுக்கு வழங்க வேண்டும். திருமாவளவன் பொதுத் தொகுதியில் வன்னியரை நிறுத்தி வெற்றி பெற வைத்தார். ராமதாசும், அன்புமணியும் தான் விசிகவுக்கு எதிராக பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனர். கடந்த முறை சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திருமாவளவன், தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தமிழ்நாட்டு மக்களிடையே அரசியல் ரீதியாக சிந்தனை வளப்பட்டதன் அடையாளம் இது. ஒரே ஒரு முறை பாஜக வெற்றி பெற்றால் இவற்றை எல்லாம் நாம் இழப்போம்.
திமுக – தேமுதிக கூட்டணி ஜெல் ஆகுமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் விஜயகாந்தை நன்றாக தெரிந்தவர்களுக்கு தெரியும், அவர் கலைஞர் மீது அவர் வைத்திருக்கும் மரியாதை. கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது நடிகர் சங்கம் சார்பில் பாராட்டுவிழா நடத்தியவர் விஜயகாந்த். அரசியல் ரீதியாக விஜயகாந்துக்கு அணுக்கமான தலைவர் கலைஞர்தான். அதிமுக கூட்டணி என்பது வேண்டா வெறுப்பாக அமைந்தது. அதன் காரணமாக அவருடைய அரசியல் வாழ்க்கையே போய்விட்டது. இது தேமுதிக தொண்டர்களுக்கு தெரியும்.

திமுகவை பொறுத்தவரை எதிரி அரசியல் என்பதை செய்யவே இல்லை. அதன் காரணமாக தான் அவர்களால் எல்லோரையும் ஒருங்கிணைக்க முடிகிறது. அப்படிதான் தமிழர் சமூகம் உள்ளது. திமுக பொறுத்தவரை பாஜகவுக்கு எதிராக தமிழர்களின் ஒருங்கிணைப்பை எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு வெல்லும், தமிழ்நாடு போராடும் என்ற வாசகத்தை சொல்கிறார். அதிமுக – பாஜகவுக்கு இந்த ஒருமுறை கொடுத்தோம் என்றால், தமிழ்நாடு மூன்றாகும். மும்மொழி கொள்கை இங்கே வரும். பள்ளிகளில் மனுஸ்மிருதி வரும். தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு இருக்காது. அதிகார மட்டத்தில் இருந்து தமிழன் சாய்க்கப்படுவான். கீழடி போன்ற அகழாய்வுகள் நிறுத்தப்படும். இவ்வளவும் பாஜக – அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நடைபெறும்.
அதன் காரணமாக தான் முதலமைச்சர் என்.டி.ஏ வெர்சஸ் தமிழ்நாடு என்று முழக்கமிட்டார். கடந்த முறை தமிழ்நாடு ஜனநாயகத்திற்காக போட்டியிட்டது. ஆனால் இம்முறை அடிப்படை விஷயங்களுக்கே போராட வேண்டிய அளவுக்கு தமிழ்நாடு வந்துவிட்டது. ஒவ்வொரு விஷயத்திற்கும் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தான் இப்படி ஒரு முழக்கத்தை முதலமைச்சர் வைத்துள்ளார். இது முக்கியமானது என்று நினைக்கிறேன். அரசியலை தாண்டி நாம் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


