spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஓபிஎஸ் அதிரடி... அலறும் எடப்பாடி, பாஜக! முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப் போகும் திமுக! உமாபதி நேர்காணல்!

ஓபிஎஸ் அதிரடி… அலறும் எடப்பாடி, பாஜக! முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப் போகும் திமுக! உமாபதி நேர்காணல்!

-

- Advertisement -

ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை திமுகவில் இணையவோ, புதிய கட்சி தொடங்கவோ வாய்ப்புகள் இல்லை என்றும், திமுக அவருக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்க வாய்ப்புகள் உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- காங்கிரஸ் உடனான மோதல் காரணமாக கடந்த வாரத்தில் தேர்தல் களத்தில் பின்தங்கி காணப்பட்ட திமுக, தற்போது தேமுதிக, ஓபிஎஸ் போன்றவர்களின் வரவால் மீண்டும் முன்னிலைக்கு வந்து இருக்கிறது. தேமுதிகவுக்கு 1.5 சதவீதம் வாக்குகள் இருக்கிறது. இருந்தபோதும் அவர்கள் வந்தது திமுக கூட்டணிக்கு பலம்தான். அதன் பிறகு ஓபிஸ் வந்துள்ளார். அவருடைய வருகை என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்க வேண்டும். ஜெயலலிதா உடன் சசிகலா, தினகரன் போன்றவர்கள் இருந்ததால், முக்குலத்தோர் சமுதாயம் அதிமுக உடன் இருந்தது. மேலிடத்தில் லாபி செய்து, அந்த சமுதாயத்தை கட்டுப்படுத்துகிற இடத்தில் அவர்கள் இருந்தனர் என்பதும், அந்த சமுதாயத்திற்கு நிறைய செய்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

முக்குலத்தோரில் மதுரை, தேனி மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருப்பவர்கள் பிரமலைக் கள்ளர்கள் சமூகத்தினர் ஆவர். தஞ்சையில் இருக்கும் முக்குலத்தோரின் வாழ்வியல் முறை என்பது இவர்களில் இருந்து மாறுபட்டதாகும். பிரமலைக் கள்ளர் சமுதாயத்தினர் மதுரையை சேர்ந்தவர்களை தான் ஆதரிப்பார்கள். அவர்கள் இல்லாவிட்டால், தினகரன் – சசிகலாவை ஆதரிப்பார்கள். அதன் காரணமாக தான் ராமநாதபுரம் மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் 2 லட்சம் வாக்குகள் வரை வாங்கினார்.

ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை அவர் ஒருபோதும் திமுகவில் இணைய மாட்டார். திமுக கூட்டணியிலும் இணைய மாட்டார். அதற்கு பதிலாக ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளரான ஐயப்பன் ஆகியோருக்கு திமுக தரப்பில் இடங்கள் தரப்படலாம். அங்கு அவர்களை எதிர்த்து திமுக வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள். இப்படியாக ஓபிஎஸ்க்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதற்கான வாய்ப்புகள் தான் உள்ளன. தென் மாவட்டங்களை பொறுத்தவரை முக்குலத்தோர் வாக்குகளை ஓபிஎஸ் உடைத்து பிரித்து விடுவார். அதேநேரம் பாஜகவின் நோக்கம் என்பது, அதிமுகவை துண்டு துண்டாக உடைத்தாலும் அவர்களுடைய வாக்குகள் எல்லாம் தங்களுக்கே வர வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இப்படிதான் என்டிஏ கூட்டணியில் தினகரன், ஓபிஸ் போன்றவர்களை இணைத்திருந்தனர். தற்போது அதுவே உடைந்துவிட்டது. ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் அவருடைய இலக்கு. தனிக்கட்சி தொடங்கினால், அவரால் மீண்டும் அதிமுகவுக்கு உரிமை கோர முடியாது. அதற்காக தான் ஓபிஸ் தனிக்கட்சி தொடங்காமல் சுயேட்சையாக நிற்கிறார். அதிமுக – பாஜக கூட்டணியை மிரட்டுவதற்காக தான் அவர் திமுக உடன் பேசுகிறார்.

2026 சட்டமன்றத் தேர்தல் வரை அவர் தாக்கு பிடித்தாக வேண்டும். தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தால், எடப்பாடி பழனிசாமியை அவருடைய கட்சியினரே தலைமை பொறுப்பில் இருந்து தூக்கி போட்டுவிடுவார்கள். அப்போது ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தால், பாஜக அவரை மீண்டும் தலைமை பொறுப்புக்கு கொண்டுவந்து விடும். அப்போது கட்சியில் ஏதேனும் ஒரு பதவியை வாங்கிக் கொண்டு மீண்டும் இணைந்துவிடலாம் என்று அவர் நினைக்கிறார். அதன் காரணமாக ஓபிஸ் தனிக்கட்சி தொடங்கவும் மாட்டார். திமுகவில் இணையவும் மாட்டார். ஆனால் திமுகவுக்கு ஆதரவு மட்டும் தெரிவித்துள்ளார். அதையும் வெளிப்படையாக சொல்லாமல் சிறப்பாக 5 ஆண்டுகள் ஆட்சி நடத்துகிறார்கள், அதனால் மக்கள் மீண்டும் திமுகவை தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறுகிறார்.

அப்படி என்றால் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வி அடையப் போகிறது. தென் மாவட்டங்களில் உள்ள அதிமுக வாக்குகள் பிரிக்கப்படுகிறபோது, அதிமுக தாமாகவே தோல்வியை தழுவிவிடும்.  மேற்கு மண்டலத்தில் செங்கோட்டையன் வாக்குகளை பிரிப்பதால் அதிமுக அங்கேயும் பின்னடைவை சந்திக்கும். இவர்களை வைத்து காய்களை நகர்த்தி திமுக மிகப்பெரிய வெற்றியை பெறுவதற்கு முயற்சிக்கிறது.

மற்றொருபுறம் பாஜக திமுக அமைச்சர்களை, சட்டமன்ற உறுப்பினர்களை சிறைக்குள் போட வேண்டும் முயற்சிக்கிற வேளையில், பாமக, தினகரன் என்று எல்லோரும் பிரிந்து கிடக்கிறார்கள். இதனால் தேர்தல் களத்தில் திமுக மீண்டும் முன்னிலைக்கு வந்துள்ளது. தேர்தல் வரை இது தொடரும் என்று நினைக்கலாம். திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டும்தான் பிரச்சினையாக உள்ளது. அவர்களை கழட்டி விட்டாலும் பரவாயில்லை என்கிற நிலைக்கு திமுக வந்துவிட்டது. ஓபிஎஸ், பிரேமலதா போன்றவர்கள் திமுக கூட்டணிக்கு வருகிறபோது தொகுதிக்கு 5 ஆயிரம் வாக்குகளும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் ஆயிரக்கணக்கான வாக்குகளும் வரும். இதனால் திமுக உறுதியாக வெல்வதற்கான சாதகமான வாய்ப்புகள் உள்ளன.

நயினார் நாகேந்திரன் போன்ற ஆளுமையற்ற நபரை பாஜக மாநிலத் தலைவராக நியமித்துள்ளனர். தேர்தல் முடிந்ததும் விரைவில் அவரையும் பொறுப்பில் இருந்து நீக்கிவிடுவார்கள்.  பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று அண்ணாமலை கட்சிக்குள்ளே இருந்து வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். எனவே அனைத்து நிகழ்வுகளையும் ஒப்பிட்டு பார்க்கிறபோது திமுகவுக்கு சாதகமான சூழல் உள்ளது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ