ஓபிஎஸ் திமுகவில் இணைந்திருப்பதன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ள 200 இடங்களில் வெற்றி என்ற இலக்கு சாத்தியம் ஆவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்மார்ட் மூவ் ஆகும். ஓபிஎஸ் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர், மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். அவரை திமுகவில் சேர்த்துக் கொள்வதற்கு ஒரு அரசியல் சாதுரியம் வேண்டும். அது மிகவும் கடினமான முடிவும் கூட. சொந்த கட்சியினரையும் திருப்திபடுத்தி, திமுகவில் இணைந்துள்ள ஓபிஎஸ்-யும் திருப்திப்படுத்த வேண்டும். இதன் காரணமாக தான் மு.க.ஸ்டாலின் பிராண்ட் இமேஜ் தேசிய அளவில் உயர்கிறது. முதலமைச்சரின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும்.

அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது. ஓ.பன்னீர்செல்வமே மு.க.ஸ்டாலினின் தலைமையை ஏற்றுக்கொண்டுவிட்டார். மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகப் போகிறார் என்று சொல்லப் போகிறார். ஏற்கனவே அதை சட்டமன்றத்திலும் எதிரொலித்துவிட்டார். அதனால் ஓபிஎஸ்க்கான நெருடல்கள் களையப்பட்டு விட்டதாக தான் நினைக்கிறேன். கட்சியில் என்ன பதவி? எந்த தொகுதியில் எம்எல்ஏ சீட் வழங்குவார்கள் என்பது போக போகத்தான் தெரியும். அதை தலைவர்கள் திரை மறைவில் தான் பேசியிருப்பார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளதால் ஏற்பட போகும் விளைவுகளை தான் நாம் பார்க்க வேண்டும். இது அதிமுகவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக தான் இருக்கும். அண்ணாமலை நேற்று வரை ஓ.பன்னீர்செல்வம் என்டிஏவில் தான் இருப்பார் என்று சொன்னார். ஆனால் அவருக்கு எந்தவித மரியாதையும் கொடுக்கவில்லை. ஒரு அடிமை போன்று காலம் காலமாக என்டிஏவில் தொடர வேண்டும். அப்படிதான் நினைத்தார்கள். அப்படி தான் செய்தார்கள். அந்த வகையில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தது ஒரு துணிச்சலான முடிவு ஆகும். அரசியல் ரீதியாக ஓ.பன்னீர்செல்வம் இந்த முடிவை எடுப்பது மிகவும் கடினமானதாகும்.
அவர் 1973ல் அதிமுகவில் இணைந்து பல உயர்வுகளை பெற்றார். 3 முறை முதலமைச்சராகவும், எதிர்க்கட்சி தலைவராக, துணைத் தலைவர், ஒருங்கிணைப்பாளர் என்று பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். கடைசியாக அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு என்ற ஒன்றை உருவாக்கி நடத்தி வந்தார். இந்த நிலையில், ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளது, அந்த கட்சிக்கு அரசியல் ரீதியாக மயிலேஜ் கொடுக்கும். திமுக 200 தொகுதிகள் என்று இலக்கு வைத்திருந்த நிலையில், அது சாத்தியமா? என்று வாக்காளர்கள் மத்தியில் கேள்வி இருந்தது. ஆனால் தற்போது அதற்கு சாத்தியம் உள்ளதாக அவர்கள் நினைப்பார்கள்.

1979-ல் திமுக மற்றும் அதிமுகவை இணைக்கும் முயற்சியை ஒடிசா முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக் மேற்கொண்டார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எம்ஜிஆர், கலைஞர் என இரண்டு தலைவர்களும் கலந்துகொண்டார்கள். மறுநாள் தமிழிசை திருமண நிகழ்விலும் ஒன்றாக பங்கேற்றனர். இணைப்பு முயற்சி நடந்துவிடும் என்றுதான் நாங்கள் எல்லோரும் நினைத்தோம். அது திராவிட இயக்கத்திற்கும் நல்லது. திராவிட இயக்க உணர்வுடையவர்கள் திராவிட இயக்கத்தில் தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தேசிய வாக்கு வங்கி என்பன உள்ளிட்ட பல்வேறு குழப்பங்களை பார்க்கிறோம்.
இந்த குழப்பங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து தலை எடுக்கக்கூடாது என்பது தான் எங்களுடை கருத்து. 1979ல் கலைஞர் தொடங்கிய முயற்சி 2026-ல் அது சாத்தியத்தை நோக்கி போகிறது என்கிற மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக கைவிட்டுவிட்டது என்பது உண்மை. பிரதமரை சந்திக்கக்கூட அனுமதி கிடைக்கவில்லை.முன்பு இதே ஓபிஎஸ் உடன் மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். கவர்னர் மாளிகையில் இணைப்பு விழா நடைபெற்றது. அதை யாரும் மறக்கவில்லை. அப்படி இருக்கும்போது ஓ.பன்னீர்செல்வத்தை அவர் புறந்தள்ளினார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைந்திருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாகும். என்.டி.ஏ கூட்டணிக்கு இது மிகப்பெரிய பின்னடைவு ஆகும். காரணம் தென் மாவட்ட வாக்கு வங்கி பாதிக்கும். நயினார் நாகேந்திரனே திருநெல்வேலியில் ஜெயிப்பாரா? என்பது கேள்விக்குரியாக மாறிவிடும். அதேவேளையில் சசிகலா தனிக்கட்சி தொடங்கியுள்ளார். மேற்கொண்டு என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. ஆனால் அதிமுக கொடியை காரில் இருந்து அகற்றிவிட்டார். அப்போது என்டிஏ பலவீனமாகி வருவது வெளிப்படையாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை எதிர்க்கட்சி தலைவர் பதவியை அவர் தக்க வைத்தாக வேண்டும். அதற்கு குறைந்தபட்சம் 30 தொகுதிகளிலாவது அவர் வெற்றி பெற வேண்டும். அதற்கான வாய்ப்புகளை தான் இனிமேல் அவர் தேட வேண்டும்.
அந்த வாய்ப்பில் பாமக வாக்கு வங்கி பிளவுபடுகிறது. அது எப்படியான விளைவுகளை சேலத்தில் ஏற்படுத்தும் என்பது தெரியாது. கோவையில் கடுமையான போட்டி நிலவுகிறது. முன்பு போல 10 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற முடியாது. எனவே எடப்பாடி பழனிசாமி தன்னுடைய அரசியல் கணக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். எப்படியாக இருந்தாலும் மே முதல் வாரத்தில் தேர்தல் வந்துவிடும். திமுக கூட்டணியில் மார்ச் 1,2ஆம் தேதிக்குள் தொகுதி பங்கீடு இறுதியாகிவிடும். அதற்கு பிறகு அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தை நோக்கி சென்றுவிடுவார்கள். ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை தென் மாவட்டங்களில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார். சசிகலாவும் பிரச்சாரம் மேற்கொள்வார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


