மத்திய கிழக்கில் பல வாரங்களாக நீடித்து வந்த போர் பதற்றம் இன்று உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகள் மற்றும் ஏணுசக்தி மையங்கள் மீது இன்று (பிப்ரவரி 28, 2026) மிகப்பெரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தத் தாக்குதலை “பெரிய அளவிலான போர் நடவடிக்கை” (Major Combat Operations) என்று வர்ணித்துள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களை முடக்குவதே இதன் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் மௌனம் காக்கும் நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

”அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் ஈரான் நாட்டு மக்களுடன் ஆஸ்திரேலியா நிற்கிறது. பல தசாப்தங்களாக ஈரான் அரசு தனது பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் அணுசக்தித் திட்டங்கள் மூலம் பிராந்தியத்தில் அமைதியற்ற சூழலை உருவாக்கி வருகிறது. ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுப்பதற்கும், சர்வதேச அமைதியைக் காப்பதற்கும் அமெரிக்கா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை நாங்கள் ஆதரிக்கிறோம்.”
மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் ஈரான் நடத்திய அச்சுறுத்தல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ஏவுகணைத் தளங்களை தரைமட்டமாக்குவதே இலக்கு என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் மற்றும் ஈரானில் வான்வழிப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு, 48 மணி நேர அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்தப் போர் நடவடிக்கையினால் சர்வதேசப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கவலை தெரிவித்துள்ளார். ரஷியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் இத்தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளன. ஈரானில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலியர்கள் மற்றும் பிற வெளிநாட்டினர் உடனடியாக வெளியேறும்படி அந்தந்த நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன.
ஈரானில் உள்ள அனைத்து இடங்களிலும் குண்டு மழை பொழியும் – டிரம்ப் அறிவிப்பு


