மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகை ஒரு “தற்காலிக நடவடிக்கை” மட்டுமே என்று வெள்ளை மாளிகை இன்று மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஹார்மோஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, மார்ச் 5 முதல் ஏப்ரல் 4 வரை (30 நாட்கள்) ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்ய இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்க நிதித்துறை சிறப்பு விலக்கு அளித்திருந்தது.
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரின் விளக்கம்

இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் காரோலின் லீவிட் (Karoline Leavitt) கூறியதாவது: “இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அனுமதி நிரந்தரமானது அல்ல. உலகளாவிய எரிசக்தி தேவையில் ஏற்பட்டுள்ள தற்காலிக இடைவெளியை நிரப்பவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.”
”முன்னதாக ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்துமாறு நாங்கள் கூறியபோது, ஒரு நல்ல கூட்டாளியாக இந்தியா அதனை ஏற்றுச் செயல்பட்டது. அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த 30 நாள் சலுகை வழங்கப்பட்டுள்ளது.”
“ஏற்கனவே கடலில் கப்பல்களில் ஏற்றப்பட்டு, விநியோகிக்க முடியாமல் தேங்கிக் கிடக்கும் ரஷ்ய எண்ணெயை மட்டுமே இந்தியா வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரஷ்ய அரசுக்கு எந்தப் புதிய நிதி ஆதாயமும் கிடைக்காது.”
அமெரிக்காவின் இந்த “அனுமதி” (Permission) என்ற வார்த்தை பிரயோகம் இந்தியாவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் இறையாண்மையை அமெரிக்கா கட்டுப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மோடி அரசு இதனை ஒரு ‘ராஜதந்திர வெற்றி’ என்று குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், இந்தியா அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் எரிசக்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பெயரிலேயே இந்த தற்காலிக விலக்கை அளித்துள்ளதாகத் தெரிகிறது.
நெல்லையில் சிலிண்டர் முன்பதிவு முடங்கியது… புக் செய்ய முடியாமல் மக்கள் தவிப்பு
