அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கூட்டு ராணுவப் பயிற்சிகளுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, வடகொரியா தனது புதிய கடற்படைப் போர்க்கப்பலில் இருந்து அதிநவீன ஏவுகணைகளைச் சோதித்து தனது ராணுவ பலத்தைப் பறைசாற்றியுள்ளது.வடகொரியாவின் அதிநவீன மற்றும் மிகப்பெரிய போர்க்கப்பலான ‘சோ ஹியோன்’ (Choe Hyon) என்ற டிஸ்ட்ராயர் (Destroyer) கப்பலில் இருந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது.
கடலில் இருந்து தரைப்பகுதியைத் துல்லியமாகத் தாக்கும் ‘வியூக ரீதியிலான குரூஸ் ஏவுகணைகள்’ (Strategic Cruise Missiles) சோதிக்கப்பட்டன.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளுடன் இணைந்து இந்த ஏவுகணை ஏவப்படுவதை வீடியோ இணைப்பு மூலம் நேரில் பார்வையிட்டார்.

கடல் பாதுகாப்பின் புதிய சின்னம்:
இந்தச் சோதனை குறித்துப் பேசிய கிம் ஜாங் உன், இந்த புதிய போர்க்கப்பல் வடகொரியாவின் “கடல் பாதுகாப்பின் புதிய சின்னம்” என்று வர்ணித்தார். கடந்த அரை நூற்றாண்டு காலமாக அடைய முடியாத ஒரு மைல்கல்லை வடகொரியக் கடற்படை தற்போது எட்டியுள்ளதாகவும், இது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பின்னணி:
அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நடத்தி வரும் ‘ஃப்ரீடம் ஷீல்ட்’ (Freedom Shield) என்ற 11 நாள் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தங்களுக்கு எதிரான “போர் ஒத்திகை” என்று வடகொரியா கடுமையாகச் சாடியுள்ளது. இதற்குப் பதிலடியாகவே, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு முறை தனது கடற்படை பலத்தை நிரூபிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு ‘தற்காலிக அனுமதி’ மட்டுமே: வெள்ளை மாளிகை அதிரடி விளக்கம்
