ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜூலி, சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுவதாக குற்றம் சாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசிய கருத்தை விமர்சித்து ஜூலி சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன. இதற்கிடையில், ஜூலி சிறுநீரக (கிட்னி) விற்பனை மோசடியில் தொடர்புடையவர் என சிலர் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியிட்டு குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆதாரங்கள் இருப்பதாக கூறி சில யூடியூப் சேனல்களிலும் தொடர்ந்து வீடியோக்கள் வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தன்னை பற்றி பொய்யான குற்றச்சாட்டுகள் மற்றும் அவதூறு கருத்துகளை பரப்புவதாக குற்றம் சாட்டி ஜூலி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் வந்து புகார் அளித்துள்ளார். குறிப்பாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தன்னை அவதூறாக பேசுவதாக கார்த்திக் குமார், பிலிப்ஸ் ஜெரால்ட் உள்ளிட்டோர் மீது அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியாக உள்ள பிலிப்ஸ் ஜெரால்ட் தனது யூடியூப் சேனல் மூலம் தன்னை பற்றி பொய்யான தகவல்கள் வெளியிட்டு வருவதாகவும், தன்னை எதிர்க்கும் நபர்களை பேட்டி எடுத்து அவதூறு பரப்புவதாகவும் ஜூலி குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னை மனித கடத்தல், உடல் உறுப்பு கடத்தல் அல்லது சட்டவிரோத பண பரிமாற்றம் உள்ளிட்ட எந்தவித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை என்றும், பொய்யாக குற்றம் சாட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே தன்னை பற்றி அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட உரிய சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட அவதூறு வீடியோக்கள் மற்றும் பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜூலி தனது புகாரில் கேட்டுக் கொண்டுள்ளார்.
விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்
