மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ஆஸ்திரேலியாவின் முக்கிய மாகாணங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட நியூ சவுத் வேல்ஸ் (NSW) மற்றும் விக்டோரியா மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு மாகாணங்களிலும் சேர்த்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் எரிபொருள் தீர்ந்ததால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன அல்லது ‘இயங்கவில்லை’ (Out of Order) என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. பல இடங்களில் டீசல் கிடைப்பது பெரும் சவாலாக மாறியுள்ளதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால், சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தனது எரிபொருள் தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்வதால், இந்த உலகளாவிய நெருக்கடி அந்நாட்டை நேரடியாகப் பாதித்துள்ளது.
நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ள எரிசக்தி துறை அதிகாரிகள், “எண்ணெய் வரத்து சீராக இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதுவரை மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், எரிபொருளைச் சேமித்து வைப்பதைத் தவிர்க்குமாறும்” கேட்டுக் கொண்டுள்ளனர். தட்டுப்பாடு வரும் நாட்களில் மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஆஸ்திரேலிய மக்கள் பெரும் கவலையில் உள்ளனர்.
