சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட இருந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தண்டனை அறிவிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீஸாரும் குற்றவாளிகள் என அறிவித்தார். அதன்படி, அவர்களுக்கான தண்டனை விவரம் மார்ச் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், குற்றவாளிகளின் சொத்து விவரம், முந்தைய சம்பளம் மற்றும் உடல்நிலை உள்ளிட்ட விவரங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இன்று காலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் தேவையான அறிக்கைகளை தாக்கல் செய்ய முடியவில்லை என அரசு தரப்பு தெரிவித்தது. இதையடுத்து, முதலில் மதியம் 2.30 மணிக்கு தண்டனை அறிவிக்கப்படும் என கூறி வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, பின்னர் அரசு தரப்பிற்கு கூடுதல் அவகாசம் வழங்கி, தண்டனை அறிவிப்பை ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு, கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்பட்டது. சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், ஊரடங்கு விதிகளை மீறி கடை திறந்ததாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் காவல் நிலையத்தில் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நீதிமன்ற காவலில் இருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், 2020 ஜூன் 22 ஆம் தேதி பென்னிக்ஸ் உயிரிழந்தார்; மறுநாள் ஜெயராஜும் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி, காவல் துறையின் செயல்பாடு குறித்து கடும் விமர்சனங்களை எழுப்பியது.
கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கில், 9 போலீஸார் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், தண்டனை அறிவிப்பு ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
