வணிகக் கப்பல்களைக் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், சர்வதேச கடல் வழிப்பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) வணிகக் கப்பல்கள் தாக்கப்படுவதற்கும், போக்குவரத்து முடக்கப்படுவதற்கும் இந்தியா தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசிய இந்தியப் பிரதிநிதி, சர்வதேச வர்த்தகத்திற்குப் பாதுகாப்பான கடல் போக்குவரத்து எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தினார்.

ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியா பேசுகையில், “சர்வதேச கடல் எல்லைகளில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேச விதிகளுக்கு முரணானது. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி போன்ற முக்கியமான நீர்நிலைகளில் பாதுகாப்பை உறுதி செய்வது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் அவசியமானது” என்று தெரிவித்தது. எந்தவொரு நாடும் அல்லது அமைப்பும் வணிகக் கப்பல்களைத் தனது அரசியல் மற்றும் ராணுவ நோக்கங்களுக்காகக் குறிவைப்பதை ஏற்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
உலகின் மொத்த கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% முதல் 30% வரை ஹார்முஸ் ஜலசந்தி பாதை வழியாகவே செல்கிறது. இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் பெரும்பகுதி பாரசீக வளைகுடா நாடுகளிலிருந்து இந்த ஜலசந்தி வழியாகவே வருகிறது. இங்கே ஏற்படும் சிறு தடையும்கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தக்கூடும்.
மத்திய கிழக்கு போரின் ஒரு பகுதியாக, ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான மோதலில், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவோம் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. மேலும், செங்கடல் பகுதியில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலைப் போலவே, இந்தப் பகுதியிலும் கப்பல்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.
இந்த நிலையில் அனைத்து நாடுகளும் சர்வதேச கடல் சட்டங்களை (UNCLOS) மதிக்க வேண்டும். போரை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த வேண்டும். கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்திய கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா ஏற்கனவே பாரசீக வளைகுடா பகுதியில் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘ஆபரேஷன் சங்கல்ப்’ (Operation Sankalp) என்ற பெயரில் தனது போர்க்கப்பல்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானியத் துறைமுகங்களை ‘முழுமையாக முடக்கிவிட்டதாக’ அமெரிக்கா அறிவிப்பு
