பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் காரின் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவத்தில் அரசியல் தொடர்பு எதுவும் இல்லை என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.


சுப்ரமணியபுரம், பசங்க உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். சமீப காலமாக விஜய் மற்றும் அவரது அரசியல் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சன கருத்துகளை பதிவிட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் நேற்று ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு, “நான் உணவகத்திற்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இது யாருடைய செயல் என தெரியவில்லை” என குறிப்பிட்டிருந்தார். மேலும், தன்னை விமர்சித்த அரசியல் கட்சியினருடன் இந்த சம்பவம் தொடர்புடையதாக இருக்கக்கூடும் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஜேம்ஸ் வசந்தன் தனது காரை உணவகத்தின் முன்பு நிறுத்த இடம் இல்லாததால் சாலை ஓரத்தில் நிறுத்தியதாக தெரியவந்தது. இதனால், அங்கு வசிக்கும் பெண் ஒருவர் வீட்டிற்குள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால் ஆத்திரத்தில் கார் கண்ணாடியை உடைத்ததாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதன் அடிப்படையில், இந்த சம்பவத்தில் எந்தவித அரசியல் தொடர்பும் இல்லை என காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும் திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
”கர” படத்திற்கு எதிர்ப்பு – தலைப்பை மாற்றாமல் படத்தை வெளியிட கூடாது…உயர்நீதிமன்றத்தில் வழக்கு
