மனு தர்மத்தின் இன்னொரு முகமாக உள்ள நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி வலியுறுத்தியுள்ளாா்.
நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற முக்கிய ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையேற்றார்.

இந்த போராட்டத்தில் திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு நீட் தேர்வுக்கு எதிராக கடுமையான கருத்துகளை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், தமிழகத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் இருப்பதால் அவற்றின் இடங்களை கைப்பற்றவே நீட் தேர்வை ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என குற்றம்சாட்டினார். 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட நீட் தேர்வில் தோல்வியடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றும், பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், வடமாநிலங்களில் பலமுறை நீட் வினாத்தாள் கசிந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் அத்தகைய சம்பவங்கள் நடைபெறவில்லை என்றும், வடமாநில மாணவர்களை தமிழகத்தில் படிக்க வைக்க மத்திய அரசு முயற்சி செய்வது “பச்சை அயோக்கியத்தனம்” என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, “மனுதர்மத்தின் இன்னொரு முகமே நீட் தேர்வு” என சாடினார். உயர்சாதி மற்றும் பணக்கார மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் கல்வி முறையை மீண்டும் உருவாக்கும் நோக்கத்தில்தான் நீட் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் வளர்ச்சி அடைவதை ஒன்றிய அரசு பொறுத்துக்கொள்ள முடியாமல் இருப்பதாக கூறிய அவர், “தந்தை பெரியார் மண்ணில் மனுதர்மத்திற்கு இடமில்லை” என்றும், “குலக் கல்வியை தடுத்த மண்ணில் நீட் என்ற கண்ணிவெடியை உடைக்கவே இந்த போராட்டம்” என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் நீட் தேர்வு நடத்தப்படுவது நிலைமையை மேலும் மோசமாக்கும் என எச்சரித்த வீரமணி, “நீட் தேர்வே ஒரு ஊழல்” என்றும், “மாநில உரிமையை பறிக்கும் கருவியாக அது மாறியுள்ளது” என்றும் குற்றம்சாட்டினார்.
இறுதியாக உரையாற்றிய விசிக தலைவர் தொல்.திருமாவளவன், “நீட் தேர்வு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கே எதிரானது” என சாடினார். கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் பணம் கொடுத்து தேர்வு எழுதியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு சில மாநிலங்களில் நடைபெற்ற முறைகேடுகளுக்காக 22 லட்சம் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய திருமாவளவன், “நீட் தொடர்ந்தால் மோசடிகளும் தொடரும்” என எச்சரித்தார். மேலும், நீட் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் மதிப்பு குறைந்து விட்டதாகவும், மாணவர்கள் பள்ளிப்படிப்பை விட பயிற்சி மையங்களையே நம்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலையுடன் தெரிவித்தார்.

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை சம்பவத்தை நினைவுகூர்ந்த அவர், நீட் தேர்வு மாணவர்களின் மனநலத்தையும் பாதிக்கிறது என்றும் கூறினார். கல்வி தொடர்பான மாநில அரசின் அதிகாரங்களில் ஒன்றிய அரசு தலையிடுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் அவர் வலியுறுத்தினார். 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், “நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையுடன் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடு – புதிய அமைச்சர்கள் யார் யாருக்கு எந்த துறை? முழு பட்டியல்…
