Homeசெய்திகள்சென்னைசென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து - பயணிகள் அதிர்ச்சி

சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து – பயணிகள் அதிர்ச்சி

-

- Advertisement -

சென்னை விமான நிலையத்தில் குவைத் மற்றும் மும்பை வழித்தடங்களில் இயக்கப்பட இருந்த 4 பயணிகள் விமானங்கள், போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால் முனையத்தில் காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.சென்னையில் 4 விமானங்கள் திடீர் ரத்து - பயணிகள் அதிர்ச்சி

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு நேற்று இரவு 8.25 மணிக்கு மும்பையில் இருந்து வரவேண்டிய ஏர் இந்தியா விமானமும், அதனைத் தொடர்ந்து இரவு 9.05 மணிக்கு சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய அதே நிறுவனத்தின் விமானமும் ரத்து செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, இன்று அதிகாலை 2.25 மணிக்கு குவைத்தில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையம் வரவேண்டிய குவைத் ஏர்வேஸ் விமானமும், அதிகாலை 3.25 மணிக்கு சென்னையில் இருந்து குவைத் புறப்பட வேண்டிய விமானமும் இயக்கப்படவில்லை.

we-r-hiring

இந்த நான்கு விமானங்களும் போதிய அளவில் பயணிகள் முன்பதிவு செய்யாததால் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. கோடை விடுமுறை காலம் முடிவடைவதால் சில உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான வழித்தடங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்திருப்பதே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே, பெங்களூரு, கொச்சி, கோவை, கோலாலம்பூர் மற்றும் பிராங்க்பர்ட் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல வேண்டிய 12 விமானங்கள் ஒரு மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டன. நிர்வாக மற்றும் செயல்பாட்டு காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கும், தாமதமானதற்கும் பயணிகளுக்கு முன்கூட்டியே தெளிவான தகவல் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பலர் விமான நிலையத்திற்கு வந்த பின்னரே தங்களது விமானம் ரத்து செய்யப்பட்டிருப்பதையோ அல்லது தாமதமாக இயக்கப்படவிருப்பதையோ அறிந்ததாக தெரிவித்தனர்.

இதனால் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளிநாடு செல்ல இருந்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிரமமடைந்தனர். மேலும் சில பயணிகள் விமான நிறுவனங்களின் சேவை மையங்களில் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக இணைப்பு விமானங்கள் மூலம் பிற நகரங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் தங்களது அடுத்தடுத்த பயண திட்டங்கள் பாதிக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தனர்.

விமான சேவைகள் ரத்து மற்றும் தாமதம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவிய நிலையில், பயணிகளுக்கு உரிய நேரத்தில் துல்லியமான தகவல்களை வழங்கவும், திடீர் மாற்றங்கள் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்யவும் விமான நிறுவனங்களுக்கு பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் – “மனுதர்மத்தின் முகமே நீட்” என வீரமணி கடும் தாக்கு

MUST READ