அரசியல் ஆலோசகர் சபரீசனுக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்ததற்காக, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவருக்கும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கக் கோரி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து சபரீசன் தரப்பில் அனுப்பப்பட்டுள்ள வக்கீல் நோட்டீஸில் கூறப்பட்டிருப்பதாவது:


”மு.க.ஸ்டாலினின் மருமகன் என்பதால் அவதூறா?”
”திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் என்ற ஒரே காரணத்திற்காக, என் மீது தொடர்ந்து அவதூறுகளைப் பரப்புவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் உள்நோக்கத்துடனும், எவ்வித ஆதாரமுமின்றியும் எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
நற்பெயருக்குக் களங்கம்
இவர்கள் பேசிய அவதூறு கருத்துக்கள் தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி, பொதுவெளியில் எனது நற்பெயருக்குக் கடுமையான களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
சபரீசன் விதித்துள்ள நிபந்தனைகள்:
எனவே, சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சர்களும் தங்களது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகப் பின்வரும் காரியங்களை உடனடியாகச் செய்ய வேண்டும்: தங்களது அவதூறு கருத்துக்களை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். சமூக ஊடகங்களில் பரவி வரும் தங்களின் அவதூறு வீடியோ பதிவுகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் எனக்கு எதிராக இதுபோன்ற அவதூறு கருத்துக்களை வெளியிட மாட்டோம் என உறுதிமொழி அளிக்க வேண்டும்.”
15 நாட்கள் கெடு; மீறினால் நீதிமன்ற நடவடிக்கை!
இந்த நோட்டீஸ் கிடைத்த 15 நாட்களுக்குள் இரு அமைச்சர்களும் தங்களது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கத் தவறினால், அவர்கள் மீது உரிய சிவில் மற்றும் கிரிமினல் சட்டரீதியான நடவடிக்கைகள் பாயும் என அந்த வக்கீல் நோட்டீஸில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
