கடலூர் மாநகராட்சிக் கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படங்களை வைப்பதில் திமுக மற்றும் அதிமுகவினரிடையே ஏற்பட்ட போட்டியும், அதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணியின் போஸ்டரை ஒட்டியதால் திமுக – பாமக இடையே ஏற்பட்ட கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் தலைவர்களின் படங்களால் தொடங்கிய போட்டி:
கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் இன்று மாமன்றக் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, திமுக மாமன்ற உறுப்பினர்கள் திடீரென முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படத்தைக் கொண்டு வந்து, மேயர் அமர்ந்திருக்கும் மேடைக்கு பின்புறமாக வைத்தனர்.
இதனைப் பார்த்துக் சும்மா இருக்காத அதிமுக மாமன்ற உறுப்பினர்கள், உடனடியாகப் போட்டிக்குத் தங்களது தலைவர்களான முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை மேடைக்கு பின்புறம் கொண்டு வந்து வைத்தனர். இதனால் கூட்ட அரங்கிலேயே திமுக – அதிமுக இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது.

நடுவே புகுந்த பாமக – உச்சக்கட்ட பரபரப்பு:
முன்னாள் முதல்வர்களின் படப் போட்டி ஒருபுறம் போய்க்கொண்டிருக்க, பாமக மாமன்ற உறுப்பினர் சரவணன் யாரும் எதிர்பாராத விதமாகப் புதிய அதிரடியைக் கையில் எடுத்தார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காவிரி உரிமைக்காகப் போராடிய விபரங்கள் அடங்கிய போஸ்டர்களை, மேயர் அமர்ந்திருந்த மேடையின் பின்புறச் சுவரில் அதிரடியாக ஒட்டினார்.
மாநகராட்சிக் கூட்ட அரங்கிற்குள் பாமக தலைவரின் போஸ்டர் ஒட்டப்பட்டதைக் கண்டு திமுக மாமன்ற உறுப்பினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
திமுக – பாமக இடையே தள்ளுமுள்ளு:
திமுக மாமன்ற உறுப்பினர்களான சங்கீதா, பிரசன்னா உள்ளிட்டோர், பாமக உறுப்பினர் ஒட்டிய அன்புமணி ராமதாஸின் போஸ்டருக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், “மாநகராட்சி அரங்கிற்குள் இந்தப் போஸ்டரை ஒட்டக் கூடாது” எனக் கூறி, அதனைப் பலவந்தமாக அகற்ற முயன்றனர்.
இதனை பாமக உறுப்பினர் சரவணன் தடுக்க முயன்றதால், திமுக மற்றும் பாமக மாமன்ற உறுப்பினர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் வெடித்தது. ஒருகட்டத்தில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் சட்டையைப் பிடித்துத் தள்ளியதால், அவைக்குள் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டு போர்க்களமாக மாறியது.
மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் இதர உறுப்பினர்கள் தலையிட்டு இருதரப்பினரையும் விலக்கி விட்டனர். மாமன்றக் கூட்டத்தில் அடுத்தடுத்து அரசியல் தலைவர்களின் படங்கள் மற்றும் போஸ்டர்களால் திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் மோதிக்கொண்ட சம்பவம் கடலூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
