Homeசெய்திகள்தமிழ்நாடுஈரோட்டில் தனியார் பேருந்துகள் கட்டண உயர்வு.. அபராதம் விதிக்க தயங்கும் ஆர்.டி.ஓ!ஜ்

ஈரோட்டில் தனியார் பேருந்துகள் கட்டண உயர்வு.. அபராதம் விதிக்க தயங்கும் ஆர்.டி.ஓ!ஜ்

-

- Advertisement -

ஈரோட்டில் தனியார் பேருந்துகள் கட்டண உயர்வு.. அபராதம் விதிக்க தயங்கும் ஆர்.டி.ஓ!

​தமிழக அரசின் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லாத நிலையிலும், ஈரோட்டில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் வழித்தடங்களில் இயங்கும் தனியார் பேருந்துகள் தன்னிச்சையாகக் கட்டண உயர்வை அமல்படுத்தி பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. வட்டாரப் போக்குவரத்துத் துறை (RTO) அதிகாரிகள் எச்சரித்தும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து அட்ராசிட்டி செய்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

தனியார் பேருந்து கட்டண உயர்வு விவரம்:

​ஈரோடு மாவட்ட பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்களுக்குள் ஒரு முடிவெடுத்து, அரசின் அனுமதியின்றி இந்த கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளனர்.

ஈரோடு – கோவை: வழக்கமான கட்டணம் 64 ரூபாயில் இருந்து, தற்போது 75 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது (11 ரூபாய் உயர்வு).
​ஈரோடு – திருப்பூர்: வழக்கமான கட்டணம் 34 ரூபாயில் இருந்து, தற்போது 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது (6 ரூபாய் உயர்வு).

இந்தக் கட்டண உயர்வால் தினமும் வேலைக்காகவும், வியாபார நிமித்தமாகவும் ஈரோட்டில் இருந்து திருப்பூர், கோவை செல்லும் ஆயிரக்கணக்கான நடுத்தர வர்க்கப் பயணிகள் இந்த திடீர் கட்டண உயர்வால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

​எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்ட உரிமையாளர்கள்:

​அரசின் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் தரப்பில் வட்டாரப் போக்குவரத்துத் துறைக்கு அடுக்கடுக்கான புகார்கள் அனுப்பப்பட்டன. இந்தப் புகார்களின் அடிப்படையில், “தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது; மீறி வசூலித்தால் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் பேருந்து உரிமையாளர்களுக்கு அண்மையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

​ஆனால், அதிகாரிகளின் இந்த எச்சரிக்கையைத் தனியார் பேருந்து நிர்வாகங்கள் துளசி இலையாகக் கூட மதிக்கவில்லை. இன்று காலை முதலே ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை மற்றும் திருப்பூர் நோக்கிப் புறப்பட்ட அனைத்து தனியார் பேருந்துகளிலும், நடத்துநர்கள் எவ்வித பயமுமின்றி அதே கூடுதல் கட்டணத்தையே பயணிகளிடம் கட்டாயப்படுத்தி வசூலித்து வருகின்றனர்.

​அபராதம் விதிக்கத் தயங்குவது ஏன்? பயணிகள் கேள்வி:

​அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறியும் தொடர்ந்து பகல் கொள்ளை அரங்கேறி வரும் நிலையில், ஈரோடு வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேருந்து நிலையத்திற்கு நேரில் வந்து ஆய்வு நடத்தவோ, சம்பந்தப்பட்ட பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கவோ, தகுதி நீக்கம் செய்யவோ தயக்கம் காட்டி வருகின்றனர்.

​ஆர்.டி.ஓ அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கே தனியார் பேருந்து உரிமையாளர்களின் துணிச்சலுக்குக் காரணம் எனப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். இனியாவது போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்திய தனியார் பேருந்துகள் மீது கடுமையான சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ