விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் (Median) இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர் மீது லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அருவாப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவர் திண்டிவனம் அருகே கடந்து செல்லும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் மையப் பகுதியில் உள்ள தடுப்புச் சுவர் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றும் பராமரிப்புப் பணியில் இன்று ஈடுபட்டிருந்தார். அப்போது, விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி அதீத வேகத்தில் வந்த லாரி ஒன்று, எதிர்பாராத விதமாகச் சாலையின் மையப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த கார்த்தி மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் கார்த்தி தூக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து நேர்ந்த அடுத்த சில வினாடிகளில், முன்னால் சென்று விபத்தை ஏற்படுத்திய லாரியின் பின்புறமாகப் பின்னால் வந்த மற்றொரு லாரியும் கட்டுப்பாட்டை இழந்து பலமாக மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த விபத்துகளின் காரணமாக, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஒலக்கூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் உயிரிழந்த கார்த்தியின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்துக்குள்ளான வாகனங்களைச் சாலையிலிருந்து அப்புறப்படுத்திப் போக்குவரத்தைச் சீர்செய்த ஒலக்கூர் போலீசார், இக்கோர விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெடுஞ்சாலையில் பணியில் இருந்த ஊழியர் லாரி மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
