சிவகாசி அரசுப் பள்ளி மாணவிகளின் கற்றல் திறனைக் குறைத்து மதிப்பிடும் வகையில் பேசி சர்ச்சையில் சிக்கிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, அதற்கு விளக்கமளிக்கும் போது தான் ஒரு அரசுப் பள்ளி மாணவி என்று கூறியிருந்தார். ஆனால், அவர் தனியார் நடத்தும் அரசு உதவி பெறும் பள்ளியில்தான் படித்தார் என்ற உண்மை தற்போது ஆதாரத்துடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்த விரிவான விபரங்கள் வருமாறு:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பயிலும் மாணவிகளின் கற்றல் திறனைக் குறைத்து மதிப்பிடும் வகையிலும், அவர்களைக் கேலி செய்யும் வகையிலும் அமைச்சர் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுதொடர்பான வீடியோவையும் அவரே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஊடகங்களில் இந்த வீடியோ வெளியாகி, பொதுமக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

தலைவர்கள் கடும் கண்டனம்:
அமைச்சரின் இந்தச் செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர்.
அதேபோல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருந்த அறிக்கையில், “எண்ணூர் அமோனியா கசிந்த ஆலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்யாத தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, பள்ளிக் குழந்தைகளிடம் கேள்வி கேட்கிறேன் என்ற பெயரில் அத்துமீறலாமா? ஆங்கிலம் என்பது வெறும் மொழிதானே தவிர, அது அறிவல்ல என்ற அடிப்படை உண்மை கூட அமைச்சருக்குத் தெரியாதா?” என்று சாடியிருந்தார்.
எக்ஸ் (X) தளத்தில் அமைச்சர் விளக்கம்:
நாளுக்கு நாள் கண்டனங்கள் வலுத்ததைத் தொடர்ந்து, அதற்கு விளக்கமளிக்கும் வகையில் அமைச்சர் கீர்த்தனா தனது எக்ஸ் (X) தள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “இன்று சிலர், ‘அரசுப் பள்ளி மாணவியைக் கேலி செய்தார்’ என்று ஒரு பொய்யான கதையைப் பரப்புகிறார்கள். உண்மை என்ன தெரியுமா? நானே ஒரு அரசுப் பள்ளி மாணவிதான்; நானே தமிழ்வழிக் கல்வியில்தான் படித்தவள். ஒரு அரசுப் பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும், தமிழ்வழி மாணவி எந்த மேடையிலும் தலைநிமிர்ந்து பேச வேண்டும் என்பதற்கான சூழலை உருவாக்குவதே எனது நோக்கம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

உண்மையை உடைத்த ஆசிரியையின் முகநூல் பதிவு:
அமைச்சர் கீர்த்தனா தன்னை ‘அரசுப் பள்ளி மாணவி’ என்று பிரகடனப்படுத்திய நிலையில், அவர் விருதுநகரில் தனியாரால் நடத்தப்படும் அரசு உதவி பெறும் பள்ளியான க்ஷத்திரிய மகளிர் நடுநிலைப்பள்ளியில் (மாங்காமச்சி பள்ளி) தான் படித்தார் என்பது ஆசிரியை ஒருவரின் முகநூல் (Facebook) பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது.
அந்த ஆசிரியை தனது பதிவில், “நம் பள்ளியின் முன்னாள் மாணவி செல்வி ச. கீர்த்தனா அவர்கள், 17-வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதில் எம் பள்ளி பெருமிதம் கொள்கிறது” என்று குறிப்பிட்டு, அமைச்சர் கீர்த்தனாவுடன் தாம் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளார். இதன் மூலம், அமைச்சர் கீர்த்தனா அரசியல் லாபத்திற்காகப் பொய் கூறியுள்ளார் என்பது நிரூபணமாகியுள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
தவெக-வில் இருவேறு நீதியா? – சமூக ஆர்வலர்கள் கேள்வி:
தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசின் அமைச்சர்களும், நிர்வாகிகளும் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் ‘ஆய்வு’ என்ற பெயரில் அத்துமீறி நுழைந்து, அதனை ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்களாக எடுத்து வெளியிடுவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், குழந்தைக்குப் போலியோ சொட்டு மருந்து வழங்கி வீடியோ வெளியிட்ட விருதுநகர் ஒன்றியச் செயலாளரை 3 மாத காலத்திற்குப் பதவியிலிருந்து நீக்கி மாவட்டச் செயலாளர் செல்வம் அதிரடி உத்தரவிட்டிருந்தார். ஆனால், இவ்வளவு பெரிய சர்ச்சையில் சிக்கிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு எச்சரிக்கை விடுக்கவோ அல்லது அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்வரவில்லை.
“கட்சியின் அடிமட்ட நிர்வாகிக்கு ஒரு நீதி, மேல்மட்ட அமைச்சர்களுக்கு ஒரு நீதியா?” என்று தவெக தலைமையின் இந்த இரட்டை நிலைப் போக்கு குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
