அரசியலில் தனுஷ் குதிக்கிறார் என்ற வதந்தியை ஏற்படுத்திய ‘புதிய கொடி’ சர்ச்சை குறித்து ரசிகர் மன்றத் தலைவர் சுப்பிரமணிய சிவா விளக்கம் அளித்துள்ளார்.


நடிகர் யோகி பாபுவின் 300-வது திரைப்படமான ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் சுசீந்திரன், சுப்பிரமணிய சிவா, இசையமைப்பாளர் டி. இமான், நடிகர் காளி வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநரும், நடிகர் தனுஷ் ரசிகர் மன்றத் தலைவருமான சுப்பிரமணிய சிவா, தனுஷ் அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்தார்.
![]()
அவர் கூறுகையில், “சமூக வலைதளங்களில் பேசப்படும் கொடி புதியது அல்ல. கடந்த 15 ஆண்டுகளாக தனுஷ் ரசிகர் மன்றத்தினர் பயன்படுத்தி வரும் அதே கொடிதான். மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தின்போது ரசிகர்கள் கார்களில் பொருத்தும் வகையில் அதனை புதிய வடிவில் தயாரித்தனர். இதை சிலர் அரசியல் கட்சிக்கான புதிய கொடியாக தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்” என்றார். மேலும், கொடியில் இடம்பெற்றுள்ள நட்சத்திரச் சின்னம் குறித்து விளக்கமளித்த அவர், “ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கான அடையாளமே அந்த நட்சத்திரம். அதற்கு அரசியலுடன் எந்தத் தொடர்பும் இல்லை” என்றார். அதேபோல், “இந்தக் கொடி எப்போது கோட்டைக்குச் செல்லும்?” என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “எது எப்போது நடக்க வேண்டுமோ, அது அப்போது நடக்கும்” என்று சிரித்தபடியே பதிலளித்தார்.
இதனைத் தொடர்ந்து, தனது 300-வது படத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய யோகி பாபு, “எனக்கு காமெடிதான் சோறு போட்டது. அதனால் வாழ்நாள் முழுவதும் காமெடி கதாபாத்திரங்களை பெருமையுடன் தொடர்வேன்” என்றார். மேலும், “2016-லேயே நயன்தாராவுடன் ஜோடியாக நடித்துவிட்டேன். இனி யார் ஹீரோயின் என்பது முக்கியமல்ல; நல்ல கதையே முக்கியம். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் அவர்களுடன் பணியாற்றவும் தயாராக இருக்கிறேன்” என்றும் தெரிவித்தார். செய்தியாளர்கள், “இன்னும் யாருடன் நடிக்க ஆசை?” என்று கேட்டபோது, “இதுவரை கமல் சாருடன் மட்டும் நடிக்கவில்லை. விரைவில் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று தனது விருப்பத்தை யோகி பாபு பகிர்ந்துகொண்டார்.
