
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் அமெரிக்கா நடத்தி வரும் தொடர் வான்வழித் தாக்குதல்களால் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாகத் தீவிரமடைந்துள்ள இந்தத் தாக்குதல்களில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
5 மாகாணங்களில் கொடூரத் தாக்குதல்: 78 பேர் காயம்

ஈரானின் முக்கிய 5 மாகாணங்களைக் குறிவைத்து அமெரிக்கா இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. நள்ளிரவிலும், பகல் நேரத்திலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட குண்டுமழையினால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் முக்கியக் உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. இந்தக் கொடூரத் தாக்குதல்களில் 14 பேர் பலியானது மட்டுமின்றி, 78க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில் சேவைகள் முற்றிலும் முடக்கம்
அமெரிக்காவின் இந்த வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கியப் போக்குவரத்துப் பாதைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ரயில் தண்டவாளங்கள் குண்டுவெடிப்பில் பலத்த சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக, ஈரானின் தலைநகரான டெஹ்ரான் (Tehran) மற்றும் முக்கிய நகரமான மஷாத் (Mashhad) ஆகிய இரண்டு பகுதிகளுக்கு இடையேயான ரயில் போக்குவரத்துச் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

தலைவர் காமேனியின் அடக்க நாளிலும் ஓயாத குண்டுகள்
கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சக்கட்டத் தலைவர் காமேனியின் உடல் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு இன்று (ஜூலை 09, 2026) ஈரானில் உள்ள புனிதத் தலமான மஷாத் நகரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அவரது உடல் அடக்கம் செய்யப்படும் நாளான இன்றும் கொஞ்சமும் இடைவெளியின்றி அமெரிக்கா தனது தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருவது, ஈரான் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. துக்க நாளிலும் கூட வான்வழித் தாக்குதல்கள் ஓயாமல் நீடித்து வருகின்றன.
ஈரான் கடும் பதிலடி:
அமெரிக்காவின் இந்தத் துணிகரத் தாக்குதலுக்கு ஈரான் ராணுவமும் மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் முக்கிய ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் தனது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குவைத்தில் உள்ள அமெரிக்காவிற்குச் சொந்தமான முக்கியப் பெட்ரோல் நிலையங்கள் (Petrol Stations) மற்றும் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டுத் தளங்கள் (Satellite Stations) மீதும் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தீவிரமாகும் ட்ரோன் தாக்குதல்கள்:
அமெரிக்க நிலைகளைத் தகர்க்கத் தாங்கள் ஏராளமான தற்கொலைப்படை ட்ரோன்களை (Drones) ஏவித் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ஈரான் பாதுகாப்புப் படை தற்பொழுது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இருதரப்பிலும் ஓயாமல் நடந்து வரும் இந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலினால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளும் பெரும் அச்சத்திலும் பதற்றத்திலும் ஆழ்ந்துள்ளன.
