Homeசெய்திகள்தமிழ்நாடுகரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசு வேலையின் நிரந்தரத்தன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது - மதுரைக்கிளை...

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: அரசு வேலையின் நிரந்தரத்தன்மை நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது – மதுரைக்கிளை தீர்ப்பு..!

-

- Advertisement -

Karur Stampede: HC Nods to Govt Jobs, But Permanency Subject to Final Order
கரூரில் தவெக கட்சியின் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, ஏன் அரசு பணி வழங்கக் கூடாது? என உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

வழக்கின் பின்னணி:

we-r-hiring

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக கட்சி நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில், அண்மையில் பொறுப்பேற்ற முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தகுதியுடைய ஒருவருக்கு கருணை அடிப்படையில் நிரந்தர அரசுப் பணி வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த அரசுப் பணி ஆணைகளை, இன்று (ஜூலை 10) மாலை 3 மணியளவில் கரூர் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பயனாளிகளுக்கு நேரடியாக வழங்க இருக்கிறார்.

உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு:

அரசுப் பணி வழங்கும் இந்த அதிரடி முடிவை எதிர்த்து மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது: “பொதுக் கூட்டங்கள் அல்லது தனியார் நிகழ்ச்சிகளில் நடக்கும் விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு நிரந்தர அரசுப் பணி வழங்குவதற்கு எனத் தமிழக அரசிடம் முறையான, பொதுவான சட்ட வழிகாட்டு நெறிமுறைகளோ அல்லது கொள்கைகளோ (Uniform Policy) இல்லை. அவ்வாறு இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் நடந்த விபத்திற்கு மட்டும் அரசுப் பணி வழங்குவது, தகுதி வாய்ந்த பிற குடிமக்களுக்கான சம வேலைவாய்ப்பு உரிமையைப் (அரசியலமைப்புச் சட்டம் 14 மற்றும் 16) பறிப்பதாகும். எனவே, இந்த பணி ஆணைகளை வழங்கத் தடை விதிக்க வேண்டும்.”

கரூர் கூட்ட நெரிசல் பற்றிய கேள்வி.... நடிகர் அஜித் என்ன சொன்னார் தெரியுமா?
நீதிபதிகளின் சரமாரி கேள்விகள்:

இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் , ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை ஆய்வு செய்த நீதிபதிகள், பல்வேறு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். இதுபோன்ற பேரிடர் மற்றும் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்குப் பணி வழங்கத் தற்போதைய அரசிடம் பொதுவான சட்ட விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா? இதில் மட்டும் விதிவிலக்கு ஏன்? அதேநேரம் கரூர் கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பத்திற்கு ஏன் அரசுபணி வழங்கக்கூடாது? முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாத பட்சத்தில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு மட்டும் ஏன் அவசரமாக அரசுப் பணி வழங்க வேண்டும்? சம வாய்ப்பு உரிமை மீறலா? தகுதி வாய்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அரசுப் பணிக்காகக் காத்துக்கொண்டிருக்கும் போது, கருணை அடிப்படையிலான இத்தகைய நியமனங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டதுதானா? இதுகுறித்து சட்டப்பேரவையில் அறிவித்தீர்களா? என கேள்விகளை முன்வைத்தனர்.

மனுதாரர் பதில் :

“கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. அதேபோல் வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தச்சூழலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்கினால், சாட்சிகள் சேதப்படுத்தப்படும்; பாதிக்கப்பட்டவர்களே இதனால் அரசுக்கு எதிராக/ஆதரவாக என சாட்சிகள் மாறுபடும் என்பதால் விசாரணை மட்டுப்படும் அபாயம் உள்ளது.

தனியார் அல்லது அரசியல் கட்சி சார்ந்த கூட்டங்களில் நடக்கும் விபத்துகளுக்கு அரசு வேலை வழங்குவது என்பது தவறான முன்மாதிரியாக மாறிவிடும். தகுதி வாய்ந்த பிற பொதுமக்களின் வேலைவாய்ப்பு உரிமையை இது பாதிக்கும் என்பதால், இன்று வழங்கப்படவிருக்கும் பணி நியமன ஆணைகளுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும். அத்துடன் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, தருமபுரி பஸ் எரிப்பு , கும்பகோணம் மகாமகம் சம்பவங்களில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு தரவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
கள் விற்பனைக்கு தமிழ்நாட்டில் அனுமதிக்கலாமே? - அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

அரசு தரப்பு வாதம் :

சென்னை உயர்நீதிமன்றத்தில் கரூர் விவரகாரம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு பின்னர் அது வாபஸ் பெறப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், கரூரில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றன. அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையிலேயே இந்த வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இதில் எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. எனவே, தடை விதிக்கக் கூடாது என்று வாதத்தை முன்வைத்தனர்.

நீதிபதிகளின் தீர்ப்பு :

“கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு வேலை வழங்குவதற்குத் தடையில்லை. திட்டமிட்டபடி முதலமைச்சர் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கலாம். ஆனால், இந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் தற்காலிகமானதாகவே கருதப்படும். இந்தப் பணியின் நிரந்தரத்தன்மை என்பது, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பிற்கு முற்றிலும் உட்பட்டதாகும்” என்று தெரிவித்த நீதிபதிகள் மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

MUST READ