தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் பெயர்களைத் தொடர்ந்து மாற்றி வருவதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டப் பெயரைத் தொடர்ந்து, தற்போது திமுகவின் மிக முக்கியத் திட்டமான ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டத்தில் இருந்த ‘விடியல்’ என்ற வார்த்தை பேருந்துகளில் இருந்து நீக்கப்பட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக திமுக மற்றும் அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்கள் தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
திமுகவின் ‘விடியல்’ பெயர் நீக்கம் – பின்னணி என்ன?
கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன், முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அவர்கள் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தில் தான் தனது முதல் கையெழுத்திட்டார். பெண்களுக்குப் பெரும் பொருளாதார உதவியாக அமைந்த இத்திட்டத்திற்கு ‘மகளிர் விடியல் பயணம்’ என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில், தற்போதைய தவெக ஆட்சியில் பல அரசு நகரப் பேருந்துகளில் முகப்பில் இருந்த ‘விடியல்’ என்ற வார்த்தை அதிரடியாக நீக்கப்பட்டு, வெறும் ‘மகளிர் பயணம்’ என்று மட்டுமே மாற்றி எழுதப்பட்டு வருகிறது. இந்தத் தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, திமுகவினர் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர்.


“சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடாது” – திமுக ஐடி விங் காட்டம்!
இது குறித்து திமுகவின் அதிகாரப்பூர்வ ஐடி விங் (IT Wing) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தவெக அரசை மிகக் காட்டமாக விமர்சித்துள்ளனர். “மேடைக்கு மேடை மாற்றம் மாற்றம் என்று முழங்கிவிட்டு, கடைசியில் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களுக்கு பெயர் மாற்றுவது தான் தவெக அரசின் சாதனையா? தமிழ்நாட்டில் ‘விடியல்’ இல்லாத ஆட்சி நடப்பதை உணர்ந்த இந்த சோஃபா மாடல் அரசு, பேருந்துகளில் இருந்து விடியல் என்ற வார்த்தையை நீக்கியுள்ளது. திட்டத்தின் பெயரை மாற்றிவிட்டால் கொண்டு வந்தவருடைய புகழ் மங்கிவிடும் என்று நினைக்கும் முதலமைச்சர் விஜய் அவர்களே… சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடாது! தமிழ்நாட்டில் எந்த பேருந்தில் ஏறினாலும் பெண்களுக்கு இலவசம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே, அதை நிறைவேற்ற வக்கில்லை. ஆனால் முந்தைய ஆட்சியின் உழைப்புக்கு ஸ்டிக்கர் ஒட்டி, பெயர் பலகையை மாற்றுவதில் மட்டும் தவெக அரசு படுவேகமாக செயல்படுகிறது.”

“இவ்வளவு இன்செக்யூரிட்டி எதற்கு ப்ரோ?” – திமுக என்ஆர்ஐ விங் கேள்வி
இதேபோல் திமுகவின் வெளிநாடு வாழ் தமிழர் அணியான என்ஆர்ஐ விங் (NRI Wing) வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டில் இருந்த விடியலை நீக்கியதன் அடையாளமாக, ‘விடியல்’ என்ற வார்த்தையைத் திட்டங்களில் இருந்து இந்த சோஃபா மாடல் அரசு நீக்கி வருகிறது. தற்போதைய முதலமைச்சருக்கு, ‘முதல்வர்’ என்றால் ஸ்டாலினும், ‘விடியல்’ என்றால் திமுக ஆட்சியும் நினைவுக்கு வருகிறது போல. இவ்வளவு இன்செக்யூரிட்டி (Insecurity) எதற்கு ப்ரோ?” என்று கேலியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே ‘நான் முதல்வன்’ திட்டத்தின் பெயர் மாற்றப்பட்ட போதே இரு தரப்பிற்கும் இடையே சோஷியல் மீடியாவில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. தற்போது பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘விடியல் பயணம்’ திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டிருப்பது, தவெக – திமுக இடையேயான அரசியல் மோதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
திருமாவளவனுக்கு நோபல் பரிசு பேச்சு: “கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்” – வைகோ அதிரடி விளக்கம்!
