Homeசெய்திகள்சினிமா"திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கிறேன்!" - காஞ்சிபுரத்தில் நடிகர் ரமேஷ் திலக் பேட்டி

“திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கிறேன்!” – காஞ்சிபுரத்தில் நடிகர் ரமேஷ் திலக் பேட்டி

-

- Advertisement -

திரைப்படங்களில் சமூகப் பொறுப்புடன் என்னால் முடிந்தவரை புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்து வருகிறேன் என்றும், பொதுமக்கள் தங்களது உடல்நலனைத் தாங்களே விழிப்புணர்வுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரபல திரைப்பட நடிகர் ஆர். ரமேஷ் திலக் தெரிவித்துள்ளார்.

"திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கிறேன்!" - காஞ்சிபுரத்தில் நடிகர் ரமேஷ் திலக் பேட்டி

we-r-hiring

காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘ஜெஸ் ஆன்கோ’ (Jess Onco) புற்றுநோய் சிகிச்சை மையத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் புற்றுநோய் சிகிச்சைகளுக்காக சென்னை போன்ற வெளிஊர்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, உள்ளூரிலேயே நவீன மற்றும் தரமான சிகிச்சையைப் பெறும் நோக்கில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது. ​இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகப் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. விஸ்வநாதன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் மருத்துவருமான டாக்டர் கனிமொழி என்.வி.என். சேது மற்றும் நடிகர் ஆர். ரமேஷ் திலக் ஆகியோர் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி மருத்துவ மையத்தைத் திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

விழாவிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரமேஷ் திலக்கிடம், சினிமாவில் புகைப்பிடிக்கும் காட்சிகள் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ​”என்னால் முடிந்தவரை என்னுடைய படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறேன். அது ஒரு நடிகராக நாம் பொறுப்புடன் செய்ய வேண்டிய விஷயம். அதேநேரம், படத்தைப் பார்த்துவிட்டு யாராவது அந்தப் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்காக ஒட்டுமொத்தத் திரைத்துறையையும் நாம் பொறுப்பாக்க முடியாது. ஒவ்வொருவரும் தங்களது உடல்நலத்தை அவர்களே கவனித்துக் கொள்ள வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து உடல்நலனைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.”

"திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கிறேன்!" - காஞ்சிபுரத்தில் நடிகர் ரமேஷ் திலக் பேட்டி

திரைத்துறையிலிருந்து வந்து தற்பொழுது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “மக்கள் அவருக்குத் தங்களது ஆதரவை அளித்துத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். அவர் நல்லபடியாக, சிறப்பாக ஆட்சி நடத்தினால் மக்களின் ஆதரவு அவருக்குத் தொடர்ந்து கிடைக்கும்” என்று சுருக்கமாகப் பதிலளித்தார். சமீபத்தில் காலமான பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் குறித்துப் பேசிய அவர், “அவருடைய ‘டூ லெட்’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அவருடன் இணைந்து நான் பணியாற்றவில்லை என்றாலும், அவரது மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நேரடியாக அவரது இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற உள்ளேன்” என்றார்.

மேலும், தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்துப் பகிர்ந்துகொண்ட ரமேஷ் திலக், தான் நடித்துள்ள இரண்டு வெப் சீரிஸ்கள் முறையே நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் தளங்களில் வெளியாக உள்ளதாகவும், ஆறு திரைப்படங்கள் ரிலீசுக்குத் தயாராக இருப்பதாகவும் கூறினார். மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணைவது குறித்த கேள்விக்கு, “ஆமாம், லோகேஷ் கனகராஜின் இயக்கத்திலும், அவரது தயாரிப்பிலும் நான் பணியாற்றி வருகிறேன். அது பெரும்பாலும் திரைப்படமாக இருக்கும். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

தேசிய விருது பெற்ற ‘டூலெட்’ பட இயக்குநர் செழியன் காலமானார்..!

MUST READ