“எதிர்க்கட்சிகளைச் சுரண்டுவதை விடுத்து மக்கள் பிரச்சினைகளில் முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்த வேண்டும்; திமுக, அதிமுகவைக் கூட்டு களவாணிகள் என்று விமர்சிக்கும் அவர்தான் மாபெரும் எம்.எல்.ஏ களவாணி” என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மேலும் மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து டி.டி.வி.தினகரன் அளித்த பேட்டியின் தொடர்ச்சி விவரம் பின்வருமாறு,

”விஜய்க்கு கூட்டணிக் கட்சிகள் மேல் நம்பிக்கை இல்லை”
”முதலமைச்சர் விஜய்க்குத் தனக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் மீது எவ்வித நம்பிக்கையும் இல்லை. அதனால்தான், தந்திரமாக அதிமுக உறுப்பினர்களைத் தனது கட்சியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அந்த அதிமுக உறுப்பினர்களுக்கு ஏதோ ஒரு பெரிய பலன் (Consideration) செய்யப்பட்டுள்ளது. இதையே நாம் அரசியல் மொழியில் ‘குதிரை பேரம்’ என்கிறோம். இன்னொரு கட்சியில் போட்டியிட்டு மக்கள் வாக்குகளைப் பெற்று வென்றவர்களைத் தங்களின் சுயநலத்திற்காகச் சதி செய்து, தங்களின் கட்சியில் சேர்த்து வைத்திருப்பதே ஒரு பெரும் ஊழல்தான். அதிமுக உறுப்பினர்களைத் திட்டமிட்டு ராஜினாமா செய்ய வைத்ததும் ஊழலின் கீழ்தான் வரும்,” எனக் குற்றம் சாட்டினார்.
”எம்.எல்.ஏ-க்களைத் திருடுபவர் நீங்கள்!” – தினகரன் சாடல்
தொடர்ந்து முதலமைச்சரின் பேச்சுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்த தினகரன், “திமுக மற்றும் அதிமுகவை கூட்டு களவாணிகள் என்று விஜய் விமர்சிக்கிறார். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பவர் பேசும் பேச்சா இது? உண்மையில் விஜய் தான் மிகப்பெரிய களவாணி. கிராமங்களில் ஆடு திருடன், மாடு திருடன் என்று சொல்வார்களே, அதைப் போல மாற்றுக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் திருடும் ‘எம்.எல்.ஏ களவாணி’ நீங்கள் தான். தவெக ஒன்றும் தமிழ்நாட்டைப் பாதுகாக்க வந்த தூய சக்தி அல்ல; அது தமிழ்நாட்டை முற்றிலும் அழிக்க வந்த ஒரு நாசகார சக்தி. எதிர்க்கட்சிகளைச் சிதைப்பதிலேயே குறியாக இருக்காமல், மக்கள் படும் இன்னல்களையும் அவர்களின் பிரச்சினைகளையும் தீர்ப்பதில் விஜய் கவனம் செலுத்த வேண்டும்,” என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது பேட்டியில் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
