சென்னையில் அம்மன் படம் எடுப்பதாகக் கூறி, சின்னத்திரை நடிகை ஒருவரைத் தனியார் விடுதிக்கு வரவழைத்து, அவரை நிர்வாணமாகப் புகைப்படம் எடுக்க முயன்ற போலி தயாரிப்பாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டு பெண்கள் என மொத்தம் 3 பேரை விருகம்பாக்கம் போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினரின் துரித நடவடிக்கையால் அந்த நடிகை பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
’லவ் டுடே’ பட பாணி மோசடி
இயக்குநர் பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’ திரைப்படத்தில், பெண்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறும்படம் எடுப்பதாகக் கூறி ஆபாசமாகப் பேசும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அதே பாணியில், சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை நடிகைகளின் தொலைபேசி எண்கள் அடங்கிய டைரக்டரியை (Directory) கையில் வைத்துக்கொண்டு, போலி தயாரிப்பாளர் ஒருவர் இந்த மோசடி வலையை வீசியுள்ளார்.

சகுனம், ஜாதகம் பார்த்து வலைவீச்சு
சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வரும் ஒரு சின்னத்திரை நடிகையை, சினிமா தயாரிப்பாளர் என்று கூறிக்கொண்டு ஒருவர் அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். தான் ஒரு பக்திப் படம் தயாரிக்க உள்ளதாகவும், அதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகையின் ஜாதகம், நட்சத்திரம், நேரம் ஆகியவை பொருத்தமாக இருப்பதாகவும் கூறி நம்ப வைத்துள்ளார். பூஜைக்கு முந்தைய ‘போட்டோ ஷூட்’ (Photo shoot) நடத்த வேண்டும் எனக் கூறி, அந்த நடிகையைச் சாலிகிராமத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு நேற்று வரவழைத்துள்ளார்.
”கண்ணை மூடிக்கொண்டு ஆடைகளைக் கழற்றுங்கள்”
அவர் கூறியதை நம்பி நடிகை குறிப்பிட்ட விடுதிக்குச் சென்றபோது, அங்குத் தயாரிப்பாளருடன் இரண்டு பெண்களும், 7 வயது சிறுமி ஒருவரும் இருந்துள்ளனர். அங்குத் தொடக்கத்தில் நடிகையைச் சாதாரணமாக மூன்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதன் பின்னர், கூட்டத்தில் இருந்த ஒரு பெண், “இது சாமி படம் என்பதால் உடலில் எந்தக் காயமும், தழும்போ இருக்கக் கூடாது. எனவே, உங்கள் கண்களைக் கைகளால் மூடிக்கொண்டு, ஆடைகளை முழுமையாகக் கழற்றி நிர்வாணமாக போஸ் கொடுக்க வேண்டும். அதை நாங்கள் புகைப்படம் எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
’சிங்கப்பெண்’ அதிரடிப் படையால் மீட்பு
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகை, படத்தில் நடிக்க விரும்பவில்லை எனக் கூறி அங்கிருந்து வெளியேற முயன்றுள்ளார். ஆனால், அங்கிருந்த போலி தயாரிப்பாளரும், அந்த இரு பெண்களும் நடிகையைத் தடுத்து நிறுத்தி, நிர்வாணப் புகைப்படம் எடுக்கக் கட்டாயப்படுத்தி வற்புறுத்தியுள்ளனர். இதனால் அச்சமடைந்த நடிகை, சமயோசிதமாக அங்கிருந்து தப்பியோடி வந்து, உடனடியாகத் தமிழக காவல் துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே, உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீஸ் குழுவினர் அந்தத் தனியார் விடுதிக்கு அதிரடியாகப் புகுந்து நடிகையைப் பத்திரமாக மீட்டனர். மேலும், அங்கிருந்த போலி தயாரிப்பாளர் மற்றும் இரு பெண்களைப் பிடித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மைகள்
போலீஸாரின் தீவிர விசாரணையில் கைதானவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, சென்னை பெருங்குடியைச் சேர்ந்த போலி தயாரிப்பாளர் நந்தி ராமநாதன் (65) என்பவரும், அவருக்கு உடந்தையாக இருந்த தரமணியைச் சேர்ந்த இந்திராணி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கார்த்திகா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், இவர்கள் ஏற்கனவே சில சின்னத்திரை நடிகைகளை இதேபோன்று ஏமாற்றி, ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்திருப்பது அம்பலமாகியுள்ளது. இவ்வாறு எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை வைத்து நடிகைகளை மிரட்டிப் பணம் பறிக்கத் திட்டமிட்டார்களா அல்லது அவற்றை இணையதளங்களில் விற்க முயன்றார்களா என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், அவர்களுடன் தங்கியிருந்த 7 வயது சிறுமி மீட்கப்பட்டு, அடையாறில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். இச்சம்பவம் சினிமா மற்றும் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
