நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக முதலமைச்சர் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடும் வரை உடலை வாங்கப் போவதில்லை என்று அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சிறை வார்டன்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும், உறவினர்களின் இந்த முடிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்:
குமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்த சபரிவர்மன் என்ற வாலிபர், குட்கா விற்பனை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிறைக் காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில், சபரிவர்மனின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் மாலை வெளியானது. அதில், அவரது உடலில் 19 இடங்களில் பலத்த காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பது இதன் மூலம் உறுதியானது.
சிறை வார்டன்கள் 3 பேர் அதிரடி கைது!
இதனைத் தொடர்ந்து, நேசமணிநகர் காவல்துறையினர் இந்தச் சம்பவத்தைக் கொலை வழக்காகப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கொலைக் குற்றச்சாட்டின் அடிப்படையில், நாகர்கோவில் கிளைச்சிறை தலைமை வார்டனான திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்த திருமலைநம்பி, வார்டன்களான கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடத்தைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் தேங்காப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெகன் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் இரவில் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.
மனைவிக்கு அரசு வேலை கோரி உறவினர்கள் போராட்டம்:
சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருப்பதாகக் கூறி, சபரிவர்மனின் உடலை வாங்க அவரது உறவினர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இதுகுறித்து உயிரிழந்த சபரிவர்மனின் சகோதரி கிருஷ்ணா கௌதமி செய்தியாளர்களிடம் பேசுகையில்: “சிறைத்துறை முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
அவரது துறையிலேயே ஒரு கைதி அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையிலும், முதல்வர் இதுவரை இதுகுறித்து வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன்? இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சிகள் நடக்கிறதோ என்ற பலத்த சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. எனவே, இந்தச் சம்பவம் குறித்து முதலமைச்சர் உடனடியாக விரிவான அறிக்கை வெளியிட வேண்டும்.
பாதிக்கப்பட்ட சபரிவர்மனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; அதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை முதலமைச்சர் பிறப்பிக்க வேண்டும். அதுவரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம்” என்று அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
