Homeசெய்திகள்சென்னைசென்னை மாநகராட்சி மன்றத்தில் காரசார விவாதம்: உறுப்பினர் நிதி விவகாரத்தில் உண்ணாவிரத எச்சரிக்கை!

சென்னை மாநகராட்சி மன்றத்தில் காரசார விவாதம்: உறுப்பினர் நிதி விவகாரத்தில் உண்ணாவிரத எச்சரிக்கை!

-

- Advertisement -

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், மாமன்ற உறுப்பினர்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படாதது குறித்து அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது. நிதியை உடனடியாக ஒதுக்கீடு செய்யாவிட்டால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என திமுக உறுப்பினர் பரிதி இளம் சுருதி எச்சரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகராட்சி மன்றத்தில் காரசார விவாதம்: உறுப்பினர் நிதி விவகாரத்தில் உண்ணாவிரத எச்சரிக்கை!

“ஒரே நாளில் உண்ணாவிரதம் நடத்துவோம்” – பரிதி இளம் சுருதி எச்சரிக்கை
மாமன்றக் கூட்டத்தின் கேள்வி நேரத்தில் பேசிய திமுக உறுப்பினர் பரிதி இளம் சுருதி, “2026-27 ஆம் நிதியாண்டுக்கான உறுப்பினர் நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை. வரும் 5-ம் தேதி புதிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மாநகராட்சிக்கு எவ்வளவு நிதி வரும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. எங்கள் வார்டு குழுவில் நிதி இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். இன்னும் ஆறு மாத காலங்கள் மட்டுமே இருப்பதால், இப்போதே நிதி ஒதுக்கப்பட்டால்தான் பணிகளை முடிக்க முடியும். எனவே, நிதி ஒதுக்காததைக் கண்டித்து கட்சியின் தலைமை அனுமதி பெற்று, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனப் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

we-r-hiring

திமுக உறுப்பினர் பரிதி இளம் சுருதியால் பரபரப்பு; மேயர் பிரியா, துணை மேயர் விளக்கம்!
உறுப்பினரின் குற்றச்சாட்டிற்குப் பதிலளித்துப் பேசிய மேயர் பிரியா, “இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி மாதமே சமர்ப்பித்துவிட்டோம். ஆனால், மாநில அரசு வரும் ஆகஸ்ட் மாதத்தில்தான் பட்ஜெட்டைச் சமர்ப்பிக்க உள்ளது. தற்போது மாநகராட்சிக்கு மாநில அரசிடமிருந்து நிதி எதுவும் வந்து சேரவில்லை. இது குறித்து மாநகராட்சி ஆணையரிடமும், துறைச் செயலரிடமும் பேசியுள்ளேன். ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதியைப் பயன்படுத்த உறுப்பினர்களுக்கு முழு உரிமை உண்டு. இந்த விவகாரத்தை மீண்டும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம்” எனக் கூறினார்.

நிதி நெருக்கடி காரணம் – துணை மேயர் மகேஷ்குமார்
விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய துணை மேயர் மகேஷ்குமார், “மாநகராட்சிக்குத் தற்போது கடும் நிதி நெருக்கடி நிலவி வருகிறது. அதேநேரம், மன்ற உறுப்பினர்களுக்கான நிதியை யாருமே நிறுத்தவில்லை. அத்தியாவசியத் தேவைகளுக்கான கோரிக்கைகள் வரும்போது முன்னுரிமை கொடுத்துச் செய்து தருகிறோம். நிதி நிலைமைக்கு ஏற்ப நிதி நிச்சயமாக வழங்கப்படும்” எனத் தெளிவுபடுத்தினார். மாமன்றக் கூட்டத்திலேயே ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பை வெளியிட்ட சம்பவம், சென்னை மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் இன்று EVM, VVPAT இயந்திரங்கள் சரிபார்ப்பு: 14 இயந்திரங்கள் பரிசோதனை!

MUST READ