தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஆன்லைன் மதுபான முன்பதிவுத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாகப் புகார்கள் எழுந்துள்ள சூழலில், அரக்கோணத்தில் ஆன்லைனில் பணம் செலுத்தியும் மதுபாட்டில் தர மறுப்பதாகப் பாதிக்கப்பட்ட மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணம் போச்சு… பாட்டில் வரல!
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்குவதற்காகப் பொதுமக்கள் சிலர் ஆன்லைன் மூலம் முன் கூட்டியே பணம் செலுத்திப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தங்களது முன்பதிவுச் சீட்டுடன் டாஸ்மாக் கடைக்குச் சென்று மதுபாட்டில்களைக் கேட்டபோது, “எங்கள் கடையில் ஆன்லைன் கியூ.ஆர் கோடு (QR Code) ரீடர் வசதி இன்னும் வரவில்லை; எனவே ஆன்லைன் ஆர்டருக்கு பாட்டில் தர முடியாது” எனத் டாஸ்மாக் ஊழியர்கள் அடம் பிடித்துள்ளனர். ஆன்லைனில் பணம் பிடித்தம் செய்யப்பட்ட நிலையிலும், பாட்டில் தர மறுத்ததால் அதிர்ச்சியடைந்த மதுப்பிரியர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


கூடுதல் கட்டணப் புகார் & போலிசாரின் பதில்
மேலும், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வழக்கம்போல ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ₹10 வசூலிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டி, பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று புகாரளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், “நாங்கள் புகாரை மட்டுமே பெற முடியும்; இதன் மீது எங்களால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியாது. இது குறித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் (District TASMAC Manager) முறையிடுங்கள்” என அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். அரசின் ஆன்லைன் திட்டம் உரியச் சேவைகளுடன் கடைகளில் நடைமுறைப்படுத்தப்படாததாலும், தொடர்ந்து கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாலும் மதுப்பிரியர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
