கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
கரூரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால், சட்ட விதிகளைக் சுட்டிக்காட்டி, தமிழ்நாடு அரசின் இந்த அரசாணையைச் செல்லாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

தமிழ்நாடு அரசு மேல்முறையீடு
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில், “பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூகப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, முற்றிலும் மனிதநேய அடிப்படையில் மட்டுமே அரசுப் பணி வழங்கும் முடிவு எடுக்கப்பட்டது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் ரத்து உத்தரவை நீக்க வேண்டும்” எனக் கோரப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தடை
இந்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களின் வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பினர். உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடையைத் தொடர்ந்து, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மீண்டும் அரசுப் பணி கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
