தயாரிப்பாளர்கள் சங்க முடிவுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பதிலடி தமிழ் திரையுலகில் பரபரப்பு
புதிய திரைப்படங்களை ஓடிடி-யில் (OTT) வெளியிடுவது தொடர்பான விவகாரத்தில், தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் “நாங்கள் ஸ்ட்ரைக் பண்ணப்போவது கிடையாது” என திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெளிவாக அறிவித்துள்ளார்.
புதிய படங்கள் வெளியான 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி-யில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுத் தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம் தந்தால் மட்டுமே செப்டம்பர் 1 முதல் படங்களை திரையரங்குகளில் வெளியிடுவோம் என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு — பெப்சி கோரிக்கை
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டன. அதில்:
படப்பிடிப்பு நிறுத்தம்: செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய படங்கள் ரிலீஸ் செய்யப்படாது, படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் அனைத்தும் நிறுத்தப்படும்.
அரசிடம் முறையீடு: இந்த விவகாரத்தை முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கொண்டு சென்று தீர்வு காண இருப்பதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், தயாரிப்பாளர்கள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு இதில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும் என்றும் பெப்சி (FEPSI) தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார்.
திருப்பூர் சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பு:
இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது:
தியேட்டர்கள் தொடர்ந்து இயங்கும்: “நாங்கள் ஸ்ட்ரைக் பண்ணப்போவது கிடையாது. தொடர்ந்து திரையரங்குகளை நடத்திக்கொண்டு தான் இருப்போம். எந்தப் படம் வந்தாலும் அதைத் திரையரங்குகளில் வெளியிடுவோம். படங்களே வரவில்லை என்ற காரணத்திற்காக மட்டுமே தியேட்டர்கள் மூடப்படுமே தவிர, நாங்களாக நிறுத்த மாட்டோம்.”
பேச்சுவார்த்தை இல்லை: பிரச்சனை என்றால் அவர்கள் எங்களைக் கூப்பிட்டுப் பேசியிருக்கலாம், ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. அல்லது அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்திருந்திருக்கலாம், அதையும் செய்யவில்லை.
முதலமைச்சருக்குத் தெரியுமா: ஸ்ட்ரைக்கை அறிவித்துவிட்டுப் பிறகு அரசு தலையிட வேண்டும் என்கிறீர்களே முதலமைச்சரிடம் சொல்லிவிட்டுத்தான் இந்த ஸ்ட்ரைக்கை அறிவித்தீர்களா என ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரின் இந்த அறிவிப்பால் தமிழ் திரையுலகில் நிலவி வரும் மோதல் போக்கு மேலும் சூட பிடித்துள்ளது.
‘டைரி’ இயக்குநர் இன்னாசி பாண்டியனின் புதிய அவதாரம்: சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்!
