அனைத்து அரசு சேவைகளையும் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் இணையவழியாக அரசு மாற்றியுள்ள நிலையில், ஆவடி மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் நிலவும் நிர்வாக குளறுபடிகள் காரணமாக கட்டிட அனுமதி மற்றும் மனைப்பிரிவு அனுமதி பெறுவதில் பெரும் சிக்கல் நீடிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


60 நாட்கள் வரை இழுத்தடிப்பு
கட்டிட அனுமதிக்கான நடைமுறைகள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆனால் ஆவடி மாநகராட்சியில் நடைமுறை வேறு விதமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
முதலில் பொதுமக்கள் விண்ணப்பத்தை நேரடியாக இணையத்தில் விண்ணப்பிக்க முடியாது. கோப்புகளை சம்பந்தப்பட்ட உதவிப் பொறியாளர் (திட்டம்) அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த கோப்புகளை அவர்கள் சரிபார்க்கவே 15 முதல் 20 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அவர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என கூறிய பின்னரே அதிகாரப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 45 நாட்கள் வரை ஆகிறது. உதவிப் பொறியாளர் (திட்டம்), மாநகர அமைப்பு அலுவலர் (TPO), மாநகராட்சி ஆணையர் என தனித்தனியாக கள ஆய்வு செய்யப்படுகிறது.
இத்தனை கட்டங்களையும் தாண்டிய பிறகு, 45 நாட்கள் கடந்து எவ்வித காரணமும் கூறாமல் மனுக்கள் நிராகரிக்கப்படுவதாகவும், ஒருவேளை அனுமதி கிடைத்தாலும் 60 நாட்கள் வரை ஆவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சுய சான்று முறைக்கு முட்டுக்கட்டையா?
பொதுமக்களின் நலன் கருதி கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சுய சார்பு முறை (Self Certification) திட்டத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு மற்றும் 2016 அக்டோபர் 20-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் இருந்தால் நேரடியாக அனுமதி பெறலாம்.
ஆனால் புதிதாக பொறுப்பேற்றுள்ள சில நகரமைப்பு பிரிவு அதிகாரிகள், “2016-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் கட்டிட அனுமதி கோருவதே தவறு” எனக் கூறி மனுக்களை தன்னிச்சையாக நிராகரிப்பதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் 2016-க்கு முன்னர் சதுரடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மூலம் ஒரு மனையை இரண்டாக உட்பிரிவு செய்ய பல மனுக்களுக்கு தற்போதைய ஆணையர் சரண்யா அனுமதி வழங்கியுள்ளார்.
ஆனால் நகரமைப்பு அதிகாரிகள் அதையும் தவறு எனக் கூறி நிராகரித்து வருவதால், ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி சரியா, தற்போது நிராகரிப்பது சரியா என்ற பெரும் குழப்பத்தில் பொதுமக்கள் தத்தளிக்கின்றனர்.
முதல்வர் தனிப்பிரிவில் புகார்
இது தொடர்பாக பட்டாபிராம், கோபாலபுரத்தைச் சேர்ந்த எம்.மோகன் என்பவர் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அதில், “எனக்கு சொந்தமான 1254 சதுர அடி வீட்டுமனையில் வீடு கட்டுவதற்கு ஆன்லைன் பட்டா, பத்திரப்பதிவு ஆவணங்கள், வரைபடங்கள் என அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்பித்திருந்தேன். பலமுறை கள ஆய்வு செய்த அதிகாரிகள் 40 நாட்கள் கழித்து எவ்வித காரணமும் கூறாமல் என் மனுவை நிராகரித்து விட்டனர்.
அதிகாரிகளை நேரில் சந்தித்து ஆவணங்களை சரிபார்த்து ஆலோசனை வழங்கியதற்கு பின்னர் தான் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தேன். அதையும் நிராகரித்தது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார்.
வீடு கட்டும் திட்டத்தை வாழ்நாள் கனவாக வைத்திருந்த என் எண்ணத்தை , என் கனவை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் சிதைத்து விட்டனர்”.
இதேபோன்று ஆவடியில் என்னைப்போன்று நூற்றுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அரசுக்கு மாபெரும் வருவாயை ஈட்டித் தரும் நகரமைப்பு பிரிவில்,
மாதந்தோறும் பெறப்படும் மனுக்களின் எண்ணிக்கை
பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள்
வழங்கப்படும் உரிமங்கள்
நிராகரிப்புக்கான காரணங்கள்
ஆகியவை குறித்து துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மாதமொருமுறை முறையான ஆய்வு மேற்கொண்டு, தேவையற்ற காலதாமதத்தை தவிர்த்து எளிய முறையில் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆவடி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
