தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் துறைகள் ரீதியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு தொடர்பாக அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்களு இடையே சட்டப்பேரவையில் கடுமையான காரசார விவாதம் ஏற்பட்டது.
நேற்றைய விவாதமும் சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டும்
நேற்று (27-08-2026) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் சமூகநீதித்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட 10.5% உள்ஒதுக்கீட்டை எதிர்த்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் உறவினர் தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்” என்ற பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் காரசார பதிலடி
இந்நிலையில், இன்று (28-08-2026) பேரவை கூடியதும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் கேள்விகளுக்குப் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து திடீரென எழுந்த திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சி.வி.சண்முகத்தின் குற்றச்சாட்டுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அவர் பேசுகையில், “நேற்றைய தினம் அவையில் பேசிய சி.வி.சண்முகம் தவறான பதிவைச் செய்துள்ளார். வன்னியர் இடஒதுக்கீட்டுக்கு இடையூறாக எங்கள் தலைவரின் உறவினர் வழக்குத் தொடுத்தார் எனக் கூறியுள்ளார். அது எந்த வழக்கு? கிளை எண் (D.No) என்ன? யார் வழக்குத் தொடுத்தது? என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உண்மையான இடஒதுக்கீட்டை வழங்கியது எங்கள் தலைவரின் குடும்பம் தான். எனவே அவையில் தெரிவிக்கப்பட்ட இந்தத் தவறான தகவலை நீக்க வேண்டும்” எனக் வலியுறுத்தினார்.
ஆதாரத்துடன் பேசுகிறேன் என சி.வி.சண்முகம் பிடிவாதம்
இதற்குப் பதிலளித்துப் பேசிய சி.வி.சண்முகம், “நான் இப்போதும் சொல்வேன், என்றைக்கும் சொல்வேன். அந்தப் பெயரைச் சொல்லக் கூடாது என்றுதான் நேற்றும் அமைதி காத்தேன். ஆனால், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வற்புறுத்திக் கேட்டதால் கூற வேண்டிய சூழல் ஏற்பட்டது. நான் ஆதாரத்துடன் தான் பேசுகிறேன். 2021-இல் வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து அவர் சார்ந்த சமூகப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த அமைப்பின் பெயரில்தான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வெற்றியும் பெற்றனர். உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டிலும் அவர்களே வாதாடினர். இதை யாராலும் மறுக்க முடியாது” என்று கூறினார். இதற்கு திமுக எம்.எல்.ஏ-க்கள் திரண்டு எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
சபாநாயகரின் கெடு – விவாதம் முடிவு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட சபாநாயகர் தலையிட்டுப் பேசுகையில், “வன்னியர் இடஒதுக்கீட்டை எதிர்த்து மு.க.ஸ்டாலினின் உறவினர் தான் வழக்குத் தொடுத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆதாரம் கோரியுள்ளார். எனவே, சி.வி.சண்முகம் உரிய ஆதாரங்களை அவையில் சமர்ப்பிக்க வேண்டும். ஆதாரம் இல்லையெனில் அந்தப் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து உடனடியாக நீக்கப்படும்” என்று உத்தரவிட்டுப் பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
