தவறு நடந்திருந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள் எனக் காரசாரம்
அனைத்து மாநகராட்சிகளிலும் ஊழல் நடைபெற்றுள்ளதாக எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியை விரல் சுட்டிக் காட்டுவதா? என்று கேள்வி எழுப்பியுள்ள திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தவறுகள் நடந்திருந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தவெக அரசிற்குச் சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, தவெகவைச் சேர்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் பல்வேறு பணிகளில் பெரும் முறைகேடுகளும் ஊழல்களும் நடைபெற்றுள்ளன எனக் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அமைச்சரின் இந்தக் குற்றச்சாட்டுக்கு உடனடியாகப் பதிலளித்துச் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது: அதிகாரம் உங்கள் கையில் தான் உள்ளது எந்த ஒரு பிரச்சனை எழுந்தாலும், எதற்கெடுத்தாலும் கடந்த ஆட்சியில் ஊழல் நடந்துவிட்டது என்று சொல்வதையே இந்த அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது.
இன்று ஆட்சியும், அதிகாரமும், காவல்துறையும் உங்கள் வசம் தான் உள்ளது. வெறுமனே அவையில் குற்றச்சாட்டுகளை மட்டும் அடுக்கிக் கொண்டிருக்காமல், துறை சார்ந்த அதிகாரிகளைக் கொண்டு விரிவான ஆய்வு நடத்துங்கள். எங்கேனும் தவறு நடந்திருப்பது கண்டறியப்பட்டால் சட்டப்படி தாராளமாக நடவடிக்கை எடுங்கள். அதை விட்டுவிட்டுப் பொறுப்பற்ற முறையில் குற்றம் சுமத்துவது ஏற்புடையதல்ல என்று கே.என்.நேரு காரசாரமாகப் பதிலளித்தார். முன்னாள் அமைச்சரின் இந்தப் பதிலடியால் சட்டப்பேரவையில் சில நிமிடங்கள் காரசாரமான வாக்குவாதம் நிலவியது.
