புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாசத்திரம் அருகே, பயணிகள் கூட்டம் நிறைந்த அரசுப் பேருந்தின் கதவை ஓட்டுநர் திடீரென திறந்ததால், பேருந்தில் இருந்து 10 பள்ளி மாணவிகள் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்குச் செல்லும் வழியில் சோகம்
புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் தினசரி வழக்கம்போல் அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். காலை நேரம் என்பதால் பேருந்தில் பயணிகள் கூட்டம் மிக அதிகமாகக் காணப்பட்டது. மாணவிகள் பலரும் பேருந்தின் முன்பக்கக் கதவின் அருகே நின்றபடி பயணித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து ரெங்கம்மாசத்திரம் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, பேருந்து முழுமையாக நிற்பதற்கு முன்பாகவே ஓட்டுநர் எதிர்பாராதவிதமாக கதவைத் திறந்ததாகத் தெரிகிறது. இதனால், பேருந்தின் கதவை ஒட்டி நெரிசலில் நின்றுகொண்டிருந்த 10 மாணவிகள் நிலைதடுமாறி ஓடும் பேருந்தில் இருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.

மருத்துவமனையில் அனுமதி
இந்த விபத்தில் படுகாயமடைந்து அலறித் துடித்த மாணவிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும் உடனடியாக மீட்டனர். உடனே ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 10 மாணவிகளும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் கொந்தளிப்பு
பேருந்து நிறுத்தத்தை அடைவதற்கு முன்பே, வாகனம் ஓடிக்கொண்டிருந்த போதே கதவைத் திறந்ததே இந்த விபத்திற்குக் காரணம் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பேருந்து ஓட்டுநரின் அலட்சியப் போக்கே மாணவிகளின் காயத்திற்குக் காரணம் என்றும், காலை நேரங்களில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவிகள் விபத்தில் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழன் ஆள்வதல்ல… தமிழனாக ஆள வேண்டும்! – மதுரை நினைவேந்தல் நிகழ்வில் சீமான் காரசார பேச்சு!
