100 நாட்களாக முதல்வர் விஜய் மௌன விரதம்: ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுபட அமமுக பொதுச்செயலாளர் அழைப்பு!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைந்து 100 நாட்கள் கடந்துள்ள நிலையில், தற்போதைய ஆட்சியின் செயல்பாடு எதார்த்தத்திற்கு அப்பாற்பட்டு ‘சினிமா படம்’ பார்ப்பது போல் உள்ளது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சினிமா கவர்ச்சியும் ஏமாந்த மக்களும்
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் பேசியதாவது:
“தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் சினிமா கவர்ச்சியை நம்பி பொதுமக்கள் வாக்களித்துள்ளனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தங்களுக்குக் கீழே உள்ள தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் யார் என்றுகூடத் தெரியாமல், சினிமா கதாநாயகனை நம்பி வாக்களித்துள்ளனர்.
தமிழைச் சரியாக வாசிக்கவும் பேசவும் தெரியாதவர்களைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும் ஆக்கியுள்ளனர். தற்போதைய தவெக ஆட்சி அப்படியே ’24-ம் புலிகேசி’ கதை போலத் தான் நடந்து கொண்டிருக்கிறது.”
அமைச்சர்களின் செயல்பாடும் முதல்வரின் மௌனமும்
“அமைச்சர்களுக்கு அடிப்படைத் தமிழ் அறிவோ, 4-ம் வகுப்பு மாணவனுக்குரிய அடிப்படை கணித அறிவு அல்லது கணினி அறிவோ கூட இல்லை. ‘மில்லி லிட்டர்’ என்பதை ‘மில்லி மீட்டர்’ என்று பேசுகிறார்கள். தமிழ் பேசத் தெரியாது என்று சுட்டிக்காட்டினால், அதை மதத்துடன் தொடர்புபடுத்தி நிதியமைச்சர் பேசுவது கண்டனத்திற்குரியது. மதத்திற்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம்?
முதலமைச்சர் விஜய் காலை தொடங்கி வீடு திரும்பும் வரை ஷூட்டிங் போலச் செயல்படுகிறார். 100 நாட்களாக முதல்வர் மௌன விரதம் இருக்கிறார். பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.”
முன்னாள் தலைவர்களுடன் ஒப்பீடு
“1969-ல் அண்ணா ஆட்சியமைத்தபோதும், 1977-ல் எம்.ஜி.ஆர் ஆட்சியமைத்தபோதும் இளைஞர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ஆனால் அவர்கள் அனைவரும் தரமான அரசியல் தலைவர்களாகத் திகழ்ந்தனர். ஆனால் இன்றோ, ‘GenZ’ தலைமுறையினர் யாரென்று தெரியாத நபரை நம்பி தவறான ஆட்சியை உருவாக்கிவிட்டனர். தவெக என்பதை ‘தற்குறி விஜய் கழகம்’ என்று வேண்டுமானால் பெயர் வைக்கலாம்.”
எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்
“தற்போதைய ஆட்சியில் லஞ்சம், ஊழல் மற்றும் போதைப்பொருள் விற்பனை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. விஜயகாந்தை விட விஜய் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று முன்பு நான் கூறியிருந்தேன். ஆனால், இப்போது அவரின் செயல்பாடுகள் சரியில்லை என்பதால் விமர்சிக்கிறேன்.
இன்ஸ்டாகிராம் மூலம் ஆட்சிக்கு வந்தவர்கள், அதே இன்ஸ்டாகிராம் மூலமே வீழ்வார்கள். இது ‘அம்மா ஆட்சி’ அல்ல, மாறாக ‘சும்மா ஆட்சி’. தமிழகத்தின் நலன் கருதி இந்த நாசகார ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும்,” என்று டி.டி.வி. தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
