Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக அரசின் 110 நாள் தடாலடி நடவடிக்கைகளால் மக்கள் தடுமாற்றம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்...

தவெக அரசின் 110 நாள் தடாலடி நடவடிக்கைகளால் மக்கள் தடுமாற்றம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு!

-

- Advertisement -

தேர்தல் வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு மின்கட்டண உயர்வு, நில வழிகாட்டி மதிப்பு உயர்வால் சாமானிய மக்கள் பாதிப்பு என விமர்சனம்தவெக அரசின் 110 நாள் தடாலடி நடவடிக்கைகளால் மக்கள் தடுமாற்றம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைந்து 110 நாட்களைக் கடந்துள்ள நிலையில், அரசின் பல்வேறு தடாலடி நடவடிக்கைகளால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

we-r-hiring

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் கடன் சுமையும்
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது:
“தவெக அரசு அமைந்த 110 நாட்கள் சர்ச்சை மிகுந்த ஆட்சியாகவே தொடர்கிறது. சாத்தியமில்லாத திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்ற மாட்டேன் எனக் கூறி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய், தற்போது நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் கால அவகாசம் கேட்டு வருகிறார். முந்தைய ஆட்சிகளின் கடன் சுமையைக் காரணம் காட்டும் இவர், ஆட்சிக்கு வந்த 110 நாட்களில் மட்டும் ₹28,000 கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளார். மேலும் இந்த நிதியாண்டில் ₹1,22,000 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயித்துள்ளது அரசின் இயலாமையையே காட்டுகிறது.”

மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு அதிர்ச்சி
“ஆட்சிக்கு வந்தவுடன் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதியளித்துவிட்டு, தற்போது மின் கட்டணத்தைக் கடுமையாக உயர்த்தி மக்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது இந்த அரசு. மக்கள் போராட்டத்தில் குதித்த பிறகு, ‘மறுஆய்வு செய்யப்படும்’ எனக் கூறி மர்மத்தைத் தொடர்கிறது. அதேபோல சொத்து வரி உயர்வும் எதிர்ப்பு வந்தவுடன் கிடப்பில் போடப்பட்டுள்ளது.”

நில வழிகாட்டி மதிப்பு 60% உயர்வு: சாமானியர்களின் வீடு கட்டும் கனவு சிதையும்
“தற்போது பதிவுத்துறையில் எந்தவித சுற்றறிக்கையோ, அரசாணையோ அல்லது கள ஆய்வோ இல்லாமல் நிலங்களின் வழிகாட்டி மதிப்பை 60 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குடியிருப்போர் நலச் சங்கங்களிடம் ஆலோசிக்காமல், செயற்கை நுண்ணறிவை (AI) மட்டும் பயன்படுத்தி தன்னிச்சையாக அனைத்து இடங்களுக்கும் மதிப்பீட்டை உயர்த்துவது தவறான அணுகுமுறை. இதனால் நிலங்களின் விலை கடுமையாக உயர்ந்து, சாமானிய மக்களின் சொந்த வீடு கட்டும் கனவு கேள்விக்குறியாகும்.”

விலைவாசி உயர்வு மற்றும் டாஸ்மாக் இலக்கு
“அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் துவண்டு போயுள்ளனர். இது குறித்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சிறப்புத் தீர்மானம் கொண்டு வந்தபோது, அதற்குப் பதிலளிக்காமல் முதல்வர் புழல் சிறையை ஆய்வு செய்யச் சென்றுவிட்டார். நிதி நெருக்கடியைச் சமாளிக்க டாஸ்மாக் வருவாயை ₹51,000 கோடியில் இருந்து ₹56,000 கோடியாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது வேதனைக்குரியது.”

மின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி அறிவிப்பு, 60% நில மதிப்பு உயர்வு எனத் தவெக அரசு தொடர்ச்சியாக எடுத்து வரும் தடாலடி முடிவுகளால் தமிழக மக்கள் எதை நோக்கிச் செல்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்கள் என்று ஆர்.பி. உதயகுமார் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு MSME-களுக்கு எச்சரிக்கை மணி! கே.இ. ரகுநாதன் வெளியிட்ட முக்கிய தகவல்

MUST READ